புன்னகையுடன் என்னை கடந்து சென்ற கடவுள்.

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் உருவ நம்பிக்கை இல்லை. எம் மனதினை ஒரு குவியத்தில் குவிக்கவும், மனதை ஒருநிலைப்படுத்தவும் உருவம் உதவலாம். அவ்வளவுதான்.

கடவுள் மனித வடிவங்களில் அவ்வப்போது வந்து போகின்றார். ஆனால் எமக்கு கடவுள் என்றால் தலைக்கு பின்னால் மஞ்சள் நிற வட்டமான ஒளி இல்லை என்றால் நம்ப மாட்டோம். அப்படி கடவுள் உருவம் இதுதான் என எண்ணத்தில் பதிந்து விட்டது.

கடந்த மாதம் துருக்கிக்கு சென்றிருந்தேன், 30 பாகை நல்ல வெயில். கடலைக்கண்டால் எனக்கு கடவுளைக் காண்பது போல். இயற்கை அதன் அற்புதம்,அழகு இவையாவும் ஒரு சக்தி உண்டு எனவும், அதற்கு கடவுள் எனவும் பெயர் சூட்டிமகிழும்.

அலைகள் குறைந்த கடல் அது. நான் பெரும் நீச்சல் தெரிந்தவன் அல்ல. ஆனால் தாயகத்தில் கீரிமலை கேணியில் நீள் பக்கமாக ஒரு முறை நீந்துவேன். பின் கல்லைப்பிடித்து நிற்பேன் அவ்வளவுதான்.

கடலில் இப்போது இறங்கிவிட்டேன். கழுத்தளவு தண்ணீரில் நின்று, இடையிடையே கரை நோக்கி நீந்துகிறேன்.

ஒரு குழந்தை என்னைப்பார்த்து புன்னகை உதிர்ந்தபடி நீந்திக் கடக்கிறது. அந்த புன்னகையின் பொருள் ‘இந்த முதியவருக்கு நீந்த தெரியாது’ என்று வேண்டும் என்றால் நான் எடுக்கலாம்.

ஆனால்…! குழந்தை என்னை நீந்திக்கடக்கையில், பெரும் தெருக்களில் ஒரு வாகனம் என்னைக்கடந்து, வேகமாக கடக்கும் தருணத்தில் என்னைத் திரும்பி ஒரு சவால் பார்வை பார்த்து சிரித்து செல்லும் போது, எனக்கு வரும் மனநிலை இந்தக் குழந்தை என்னைக் கடக்கையில் எனக்கு ஒரு துளியும் வருவில்லையே!.

அப்படி என்றால்….! என்னைக் கடந்து சென்றது கடவுளா! குழந்தையா!!.

இன்னும் ஒரு நிகழ்வு, துருக்கி அன்ராலியா விமான நிலையத்தில் வந்து இறங்கியதும், எம்மை hotelக்கு அழைத்து செல்ல வரவேண்டிய வாகனம் வரவில்லை.
காத்திருக்கும் போது ஒரு டாக்ஸி தரகர் எம்மை பார்த்து, “I can help You”. என்றார். எமக்கு தமிழ் படம் பார்த்து பார்த்து யாரும் வலியவந்து உதவுவதாக சொன்னால் அவன் வில்லன் என்ற மனநிலையே நிரந்தரமாய்ப்போச்சு. பிறகு என்ன, அவனை உதாசீனப்படுத்திவிட்டு, வேறு வழி ஏதும் உண்டா என யோசிக்க அவன் விடுவதாக இல்லை. எனது கையில் உள்ள வாகனப் பதிவு கடிதத்தை சட்டேன வாங்கி, ஒரு தொலைபேசி எடுத்து கதைத்தான். பின் இவ்விடத்தில் நில்லுங்கள் வாகனம் வரும், என்று சொன்னபடி எனது அருகில் நின்ற மற்றொரு பயணியிடம் “வாகனம் வேண்டுமா? எம்மிடம் டாக்ஸி உண்டு” என தரகு வேலையை தொடங்கினான்.

ஆனால் எமக்கு மட்டும் நாம் எதிர் பார்த்து காத்திருந்த டாக்ஸியை அழைத்து எமக்கு உதவினான். தரகுத் தொழிலிலும் சக டாக்ஸி தொழிலாளிக்கு இரண்டகம் செய்யாத அவன், இப்போது என்னைக்கடந்து கவர்ந்து செல்கிறான். அந்த இடத்தில் ‘அவனும் கடவுள்தான்’.

624 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *