வேட்டியும் சேலையும் தமிழரின் முகவரியா!பயன்பாடு தான் ஒரு பண்பாட்டை வாழவைக்கிறது !

  • சேவியர்

‘என் வேட்டி ஒண்ணு இருக்குமே ! எங்கே தெரியுமா ?” அலமாரியில் இருந்த துணிகளைப் புரட்டிக்கொண்டே கணவன் கேட்டான்.
‘எதுக்கு இந்தக் காலங்காத்தால வேட்டி தேடறீங்க ? ஆபீஸ் போகலையா ?” மனைவி குழப்பமாய்க் கேட்டாள்.
‘ஆபீஸ்க்கு கட்டிட்டு போகத் தான் தேடறேன்’
‘வாட் ? ஆபீஸ்க்கு வேட்டியா ? என்ன சொல்றீங்க ?’
, ‘இன்னிக்கு ஆபீஸ்ல எத்னிக் டே, அதாவது கலாச்சார ஆடை தினம். அதனால வேட்டி கட்டிட்டு போகவேண்டியிருக்கு ! கணவன் விளக்கம் கொடுத்தார்.
நவீன ஆடைகளின் ஆதிக்கத்தில் புதைந்து போன வேட்டிகளைத் தேடி எடுக்கும் தினமாகத் தான் அலுவலகங்கள் கலாச்சார ஆடை தினம் கொண்டாடுகின்றன.
தமிழர்களின் அடையாள ஆடையாய் இருந்த வேட்டியை, ஒழுங்காகக் கட்டத் தெரிந்த இளைஞர்கள் இன்றைக்கு எத்தனை பேர் என ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் முடிவு நிச்சயம் அதிர்ச்சியளிப்பதாகத் தான் இருக்கும் ! வேட்டியை இடமிருந்து வலம் கட்டுவதா ? வலமிருந்து இடம் கட்டுவதா ? வேட்டிக்கு பெல்ட் போடணுமா ? இல்லை முடிச்சு போடணுமா ? இல்லை சுருட்டி விடணுமா ? என இளைஞர்களுக்குள் மில்லியன் டாலர் கேள்விகள் அலை மோதும்.
இந்த சிக்கல்களையெல்லாம் அறிந்த சில நிறுவனங்கள், அப்படியே பாவாடை மாதிரி கட்டிக் கொள்ளும் வேட்டிகளை அறிமுகம் செய்திருக்கின்றன. பெயர் ரெடிமேட் வேட்டி ! வேட்டில என்னயா ரெடிமேட் என நீங்கள் கேட்பது கேட்கிறது ! என்ன செய்ய ? கலாச்சார ஆடையான வேட்டி இனிமேல் கல்வெட்டுகளில் மட்டுமே காணக் கிடைக்கும் போல !
அப்படியே பெண்கள் பக்கம் திரும்பினால் சேலைக்கு இதே நிலமை தான் ! ஆனால் ஒரே ஒரு ஆறுதல் விஷயம், பெண்கள் சேலைகளை தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். சின்ன பிள்ளைகள் ஸ்டாம்ப் கலெக்ஷன் செய்வது போல, பெண்கள் சாரி கலக்ஷனில் இறங்கி விடுகின்றனர். பக்கத்து வீட்டு அக்காவை விட அதிகம் இருக்கணும் என்றேனும் இலட்சியம் வைத்துக் கொள்கின்றனர். பாவம் ஆண்களின் பர்ஸ்கள் தான் வெலவெலத்துப் போகின்றன
சேலை கட்டிக்கொண்டு செல்கின்ற பெண்களிடம், ‘ஏதாச்சும் ஃபங்ஷனா ?” என தவறாமல் வினவுகின்றன வாய்கள். ஃபங்ஷனுக்கு சேலை கட்டாமல் வந்தால் சேலை இல்லையா ? என்பார்கள். மற்ற வேளைகளில் சேலை கட்டி வந்தால் ‘வேற வேலை இல்லையா’ என்பார்கள். சேலை கட்டுவது பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய வேலையாய் தெரிகிறது.
வேட்டியும் சேலையும் தமிழர்களின் கலாச்சார அடையாளங்களாய் இருந்தன. அவர்களுடைய வாழ்வோடு பின்னிப் பிணைந்து குடும்ப உறவுகள் போல இருந்தன. இன்று அவை சிலருக்கு தூரத்துச் சொந்தம், சிலருக்கு வேண்டாத விருந்தாளி, சிலருக்கு தவிர்க்க முடியாத தலைவலி !
என் நினைவலைகளை பின்னோக்கி அலையவிட்டால், அம்மாவின் சேலை நுனியைப் பிடித்துக் கொண்டு தத்தித் தத்தி நடந்த நினைவுகள் பசுமையாய் வருகின்றன.
அம்மாவின் முந்தானை தான் நமக்கு எல்லாமே ! நடக்கப் பழகும் போது முந்தானை பிடித்து நடப்போம் ! அப்பா துரத்துகையில் முந்தானைக்குள் ஒளிந்து கொண்டு தலையை மட்டும் நீட்டுவோம் ! கைகழுவிய பின் முந்தானை தான் நமக்கு வாசனை டவல் ! மழைக்கால நடைப்பயணத்தில் அது தான் நமக்கு குளிர் குடை ! தடுக்கி விழுந்து காலில் இரத்தம் வந்தால் முந்தானை முனை தான் முதலுதவிக் கட்டு ! இரவின் நித்திரையில் அம்மாவின் சேலை தான் கனவுகளின் கைப்பிடி ! தனிமையின் பரிதவிப்பில் சேலையின் வாசனை தான் நிம்மதியின் கையேடு !
பழையதாகிப் போனால் அம்மாவின் சேலை அக்காவுக்குத் தாவணியாகும் ! மிச்சம் மீது தங்கைக்கு ரிப்பனாகும் !
அம்மாவின் சேலை எழுப்புகின்ற நினைவலைகளும், அது தருகின்ற அதிர்வலைகளும் அநேகம் ! இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸ் அம்மாக்களின் குழந்தைகளுக்கு முந்தானை என்பது வேற்றுலக மொழி ! அவை உடலையும் மறைப்பதில்லை, நினைவையும் நிறைப்பதில்லை !
அம்மாவின் சேலையைப் போலவே நினைவுகளையும், நெகிழ்வுகளையும் சுமந்து திரிபவை தான் அப்பாவின் வேட்டிகள். தரையில் பட்டு பட்டு கிழிந்து போன வேட்டியை, தலைகீழாய் உடுத்து கிழிசல் மறைத்து திரியும் வறுமை அப்பாக்கள் தியாகத்தின் வேர்கள். அவர்களின் மடித்து வைத்த வேட்டிகளுக்குள் மடியாமல் இருப்பவை குழந்தைகளுக்கான கனவுகள்.
இன்று அவை இல்லை ! வேட்டிகளை மறந்து விட்ட அப்பாக்களுக்கு ஷார்ட்ஸ்களே வசதியாய் இருக்கின்றன.
சேலையையும், வேட்டியையும் கலாச்சாரமாகக் கொண்ட தமிழன் உயரிய சிந்தனை கொண்டவன் ! ஒரு வேட்டி ! எல்லோருக்குமே பொருந்தும் ! தொப்பை வந்தவனுக்கு தனி வேட்டி, ஒல்லிக்குச்சிக்கு தனி வேட்டி என்பதெல்லாம் இல்லை. இன்றைக்கு இஞ்ச் கணக்கில் இடுப்பைக் கட்டிக்கொள்ளும் ஜீன்ஸ் மனிதர்களுக்கு வயிறு வளர வளர ஆடை மாற்ற வேண்டியிருக்கிறது ! வேட்டியில் அப்படி ஒரு சிக்கலே இல்லை ! அப்பாவின் வேட்டி கிழியும் வரை கட்டலாம் ! அப்பாவின் வேட்டியை மகனும் கட்டலாம் !
சேலையும் அப்படியே ! ஒரு சேலை போதும் யார் வேண்டுமானாலும் மாறி மாறி உடுத்திக் கொள்ள ! ஆளுக்கும் ஏற்றபடி அளவில் மாற்றம் தேவையில்லை ! அதனால் தான் அந்த ஆடைகள் காலம் கடந்தும் பயனளித்தன. இன்றைய நவீன ஆடைகள் மாதங்கள் கடந்தாலே மறைந்து விடுகின்றன.
நமது இலக்கியங்களின் செழுமையிலும், நமது பண்பாட்டின் வளமையிலும் நமது ஆடைகளின் பதிவுகள் அழுத்தமாய் இருக்கின்றன. அவை வெறுமனே ஒரு அடையாளமாக இல்லாமல், வாழ்வியலின் அங்கமாக இருப்பது தான் நமது கலாச்சார ஆடைகளின் மீதான கர்வத்தை நமக்குத் தருகிறது.
இன்று வசதி குறைவு போல தோன்றுகின்ற வேட்டியும், சேலையும் தான் உண்மையில் அதிக வசதியுடையவை. உடலில் தட்பவெப்ப நிலையை சீராக வைப்பது முதல், ஓடியாடி வேலை செய்யவும் வசதியாக இருக்கின்றன. ஒரு துண்டு துணியை வைத்து அத்தனை வித்தைகளையும் காண்பித்த தமிழனின் கலாச்சாரம் வியக்க வைக்கிறது தானே !
ஒரு மொழி பேச்சு மொழியாக இல்லாத போது அது மெல்ல மெல்ல அழியும் என்கிறது வரலாறு. வீடுகளிலும், சந்திக்கும் இடங்களிலும் தமிழைப் பேசாமல் இருந்தால் ஒரு காலத்தில் தமிழ் மொழியே கூட வழக்கொழிந்து போய்விடலாம். அதற்கு உதாரணமாய் பல மொழிகள் இருக்கின்றன.
ஒரு ஆடை, பயன்பாட்டு ஆடையாக இல்லாமல் போகும் போது அது நாளடைவில் அழிந்து போய்விடுகிறது. அதற்கும் வரலாற்றில் உதாரணங்கள் இருக்கின்றன. அந்த அழிந்து போன ஆடைகளின் பட்டியலில் வேட்டி சேலை கூட வந்துவிடும் அபாயம் உண்டு.
பயன்பாடு தான் ஒரு பண்பாட்டை வாழவைக்கிறது !
பயன்பாடு தான் ஒரு கலாச்சாரத்தை கட்டிக் காக்கிறது !
வேட்டியும் சேலையும் வெறும் ஆடைகளல்ல, அவை நமது கலாச்சாரத்தின் நீட்சி ! நமது தன்மானத்தின் காட்சி என உணர்வோம் ! தயக்கமின்றி பயன்படுத்துவோம்.

ழூ

சேவியர்

627 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *