உங்களுக்கு பொருட்கள்; தமிழ் நாட்டில இருந்து வருகுது’ நக்கலும் கிரந்தமும்

  • சர்மிலா வினோதினி -இலங்கை

நேற்றுவரைக்கும் சிரித்துக்கொண்டிருந்த வெய்யில் கழன்று காலையிலேயே மழை தூறத் தொடங்கியிருந்தது, தூறிய மழையோடு சேர்த்தே பயணிக்கிற காற்றைப்போல காலையிலேயே புறப்பட்டு காங்கேசன்துறை கொழும்பு கடுகதி தொடருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். காலை 6.15 ற்கு புறப்பட்ட புகையிரதம் 9.15 ற்கு அனுராதபுரத்தை கடந்திருந்தது. வயிற்றில் கொஞ்சம் பசியும் எதையாவது சாப்பிடு என்கிற மூளையின் கட்டளையும் சேரவே நிலையத்தின் சிற்றுண்டிச்சாலையில் பணிஸ் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து இருக்கையில் வந்தமர்ந்தேன்.

அருகிருக்கையில் ஏதோ சலசலப்பு, வழமைக்கு மாறாக தென்படவே பட்டும் படாததுமாகத் தலையைத் திருப்பி என்ன நடக்கிறது என்பதை அவதானித்தேன், சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவருக்குத்தான் அபிசேகம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

விசயம் இதுதான். தண்ணீர்ப்போத்தல் விற்றுக்கொண்டு வந்த வியாபாரி ஒருவரிடம் ஒரு லீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை வாங்கியிருக்கிறார் அந்தப் பெண்மணி, தண்ணீர்ப் போத்தலின் உத்தரவாத விலை 130 ரூபாய், ஆனால் வியாபாரி 200 ரூபாய் என்றிருக்கிறார்,
“ஏன் இவ்வளவு கூட எடுக்கிறீங்கள்?”
இதுதான் அந்தப் பெண்மணியின் விவாதம்.
“இதுதான் விலை” – இது வியாபாரி
“நான் கடை வைச்சிருக்கிறன், எனக்கு விலை தெரியும்” என்றார் அந்தப் பெண்மணி.
“எங்க இருக்கு கடை?”
“கிளிநொச்சி”.

இரண்டு உரையாடல்களும் சிங்களத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது, அடுத்து நடந்த உரையாடல்தான் விசேடம்.

அந்தப் பெண்மணி கிளிநொச்சி என்று சொல்லி முடிக்கவும், “ஓ உங்களுக்கு சாமான்கள் தமிழ் நாட்டில இருந்து வருகுது, அப்ப கிளிநொச்சியில அடிச்ச விலையை போய் கேட்டு வாங்குங்க” என்று கடினமாகவும் கிரந்தமாகவும் சொல்லிக்கொண்டு அடுத்த வியாபாரத்தை நோக்கி “வத்துறு போத்தல், வத்துறு போத்தல் “ என்றபடி நகர்ந்தது அந்த வியாபாரியின் குரல்.

என்பங்கிற்கு விசனமான பார்வை ஒன்றை அந்த வியாபாரி மீது வீசிவிட்டு ரயிலின் சாளரத்தின் வழி வெளியை நோக்கினேன், மரங்கள் தன் பங்கிற்கு ஓடிக்கொண்டிருந்தன, நாங்களும்தான். ஓடிக்கொண்டிருக்கிறோம்.

அந்த வியாபாரியின் நக்கலும் கிரந்தமும் நிறைந்த அந்தக் குரல் மீள மீள வந்து போய்க்கொண்டிருந்தது. ஓடுகிற தொடருந்தில் கைநிறைய பாரத்தை சுமந்துகொண்டு வந்து விற்பனை செய்வது ஒன்றும் இலகுவான காரியம் இல்லை, “அந்தக் கடினத்தால் விலையை கூட்டி விற்கிறேன்”என்று சொன்னால் கூட “சரி பரவாயில்லை”என்று சமாளிக்கலாம், அப்படி என்றால் கூட பொருளின் சரி அரைவாசி விலையை உயர்த்துவது என்பது அதிகம்தான், அத்தோடு இப்படி ஒரு எகத்தாளமான பதிலை சொல்லுவதற்கு எத்தகைய புரிதல் இருந்திருக்க வேண்டும்?

பலாலியிலும் காங்கேசன் துறையிலும் தமிழ்நாட்டின் வழியாக சாமான்கள் வந்து குவிகிறது என்பதுதான் சமானியர்களுடைய புரிதல் போலும்,ஆனால் அன்றைக்கு இயங்கிய காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக கப்பல்களில் வந்து சேருகிற பண்டங்களை ஏற்றி, இறக்கி இடம் மாற்றுகிற அன்றைய பண்டகசாலை இன்றைய “தல்செவன” என்பது இவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்னமுமே அடைபட்டுக் கிடக்கிற துறைகளைப் பற்றி எத்தகைய புரிதல் இருக்கும்?

சரி இது இருக்கட்டும், நாங்களும் இப்படித்தான். சளைத்தவர்கள் அல்லவே, பொதுவாக எனக்கு வெளியே உணவருந்தும் பழக்கம் அரிது, எப்போதாவது ஒரு மாறுதலுக்காக தெரிவு செய்து உண்பது வழமை. யாழ்ப்பாணத்தில் இருக்கிற பிரபல ஆரோக்கிய உணவருந்தும் இடம் (ர்ழவநட) ஒன்றில் ஒருநாள் இப்பிடித்தான், உணவுப் பட்டியலில் புiபெநச டிநநச ஒன்றையும் வாங்கியிருந்தேன், 150 ரூபா விலை பொறிக்கப்பட்ட குளிர்பானத்தின் விலை 250 ரூபாய் என்று அச்சாகியிருந்தது, இதென்ன 150 ரூபாய் 250 ஆகியிருக்கிறது என்றேன். அப்படித்தான் என்று சிரித்துக் கடந்தார்கள்.

நாங்கள் மட்டும் என்ன? குறைவா? இருக்கிற பணத்தை இரண்டு மூன்று மடங்குகளாக்குவதற்காக தேர்ந்தெடுக்கிற வியாபாரம் “உணவுச் சாலைகள்” அதுவும் அந்தக் கிச்சன் இந்தக் கிச்சன், உயர்தர விருந்து, ஆரோக்கிய விருந்து அது இது என்று பெயர்களை வைப்போம், அப்படியே சுரண்டுவோம்.

ஆனால் இவற்றை எல்லாம் மாவட்ட செயலகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிற குறித்த விலை மற்றும் நுகர்வோர் தொடர்புடைய விடயங்களை கவனிக்கின்ற அதிகாரசபையோ திணைக்களமோ கவனிக்கிறதா என்பதும் சில இடங்களில் கேள்விதான். காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே !!

309 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *