சுமந்திரனா? சிறிதரனா?அடுத்த தலைவர் யார்??

இலங்கையிலிருந்து ஆர்.பாரதி

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த வருடம் தேர்தல் ஆண்டு!

ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்த வருடத்தில் முதலில் நடைபெறும் என ரணில் விக்கிரமசிங்க உறுதியாகக் கூறிவிட்டார். அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் நடைபெறும் எனவும் கொழும்பில் தன்னைச் சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளிடம் ரணில் கூறியிருக்கின்றார்.

ஆனால், அவற்றுக்கு முன்னதாக நடக்கப்போகும் தேர்தல் ஒன்றுதான் தமிழ் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக வரலாற்றில் முதல் தடவையாக தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது குறித்த ஆரூடங்கள் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது.

அடுத்த வருடத்தில் நடைபெறப்போகும் முதலாவது தேர்தலாக தமிழரசுத் தலைமைக்கான தேர்தல்தான் இடம்பெறும். அரசியல் களத்திலும் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். சுமார் பத்து வருடங்களுக்குப் பின்னர் புதிய தலைவர் ஒருவர் தமிழரசுக் கட்சிக்கானத் தெரிவு செய்யப்படவுள்ளார். சுமார் நான்கு வருடங்களாகக் கூட்டப்படாதிருந்த தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையை இதற்காக ஜனவரி மாத இறுதிப் பகுதியில் கூட்டுவதற்கு கட்சித் தலைமை இணங்கியுள்ளது.

மாவை சேனாதிராஜா பத்து வருடங்களுக்குப் பின்னர் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு இணக்கியுள்ளார். தமிழரசுக் கட்சிக்குள் இன்று உருவாகியுள்ள தலைமைத்துவப் போட்டி கட்சியை பிளவுபடுத்துமா அல்லது பலப்படுத்துமா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றது. 2009 வரையில் தமிழ் மக்களுடைய போராட்டத்தில் தலைமைப் பாத்திரத்தை ஏற்றிருந்த விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதன் பின்னர் இடம்பெற்ற பேச்சுக்களில் கூட்டமைப்பு நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட, அதனால், தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத்தர முடியவில்லை.

அதேவேளையில், விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட அந்தக் கூட்டமைப்பு இன்று உடைந்து சிதறிப்போன நிலையில் காணப்படுகின்றது. 2009 இல் தலைமையைப் பொறுப்பேற்ற சம்பந்தன் உடைந்துபோயுள்ள இன்று கடுமையான அழுத்தங்களை உள்ளுக்குளிலிருந்தே எதிர்கொள்கின்றார்.

புலிகள் உருவாக்கிய கூட்டமைப் உடைய இன்று தமிழரசு தனித்து நிற்கிறது. விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் தனித்தனியதக நிற்கின்றார்கள். ஆயுதம் ஏந்திப்போராடிய ரெலோ, புளொட், ஈபி.ஆர்.எல்.எப்., ஜனநாயகப் போராளிகள் இணைந்து தனியான கூட்டணியாக நிற்கின்றார்கள். இவர்கள் அனைவருமே ஒரு காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள்தான்.

கூட்டமைப்பு உடைந்து சென்றமைக்கான பிரதான காரணமாக இருப்பது தமிழரசுக் கட்சியும், அதன் தலைமையும்தான். தமிழரசுக் கட்சித் தலைமையின் மேலாதிக்க மனோபாவமும், ஏனைய கட்சிகளை ஆயுதக் குழுக்கள் என அவர்களச் சிறுமைப்படுத்தி ஓரங்கட்டடியதும்தான் கூட்டமைப்பு உடைவதற்கு பிரதான காரணம்.

அதேவேளையில், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினர் பலர் கட்சித் தலைமையின் செயல்திறனின்மையால் அதிலிருந்து வெளியேறினார்கள். குறப்பாக தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவரது தலைமைத்துவம் பல சந்தர்ப்பங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. போராட்டங்களின் போது ஆதரவாளர்களைக் கூட திரட்ட முடியாதளவுக்கு பலவீனமான நிலையில்தான் மாவை இருந்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையை கூட்டாமல் அவர் காலத்தைக் கடத்துவதற்கும், தலைமைப் பதவி தன்னிடமிருந்து பறிபோய்விடும் என்ற அவரது அச்சம்தான் காரணமாகச் சொல்லப்பட்டது. ஆனால், கட்சிக்குள் உருவாகியுள்ள கொந்தளிப்பு மற்றும் பொதுச் சபையைக் கூட்ட வேண்டும் என்பதற்கான தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக, மாவையர் அடிபணிவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தப் பின்னணியில்தான் நவம்பர் 30 இல் நியமனப் பத்திரங்கள் கோரப்பட்டு, ஜனவரி 27 இல் நடைபெறும் பொதுச் சபைக் கூட்டத்தில் தலைவர் தெரிவு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி தமிழரசுக் கட்சியின் மூன்று முக்கியஸ்த்தர்கள் தலைவர் பதவிக்கான நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்திருக்கின்றார்கள். எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் தலைமைப் பதவிப் போட்டியில் இருக்கின்றார்கள்.

இதற்கான தேர்தல் நடைபெறுமாக இருந்தால் தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் முதல் தடவையாக தேர்தல் மூலமாக தலைவர் தெரிவு இடம்பெற்றதாக இருக்கும். இதுவரை காலமும் போட்டியின்றி ஏகமனதாகவே தலைவர் தெரிவு இடம்பெற்றது.

யோகேஸ்வரன் தமது நியமனத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு மற்றைய இருவரில் ஒருவரை ஆதரிக்கலாம் என்றும் மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளையில், செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாக சபையை அதன் பொதுச் சபைதான் தெரிவு செய்யும்.

கட்சிக்கு சுமார் 50 வரையிலான பிரதேசக் கிளைகள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ளன. ஒவ்வொரு கிளைகளினதுத் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட ஐந்து பேர் பொதச் சபையில் இடம்பெறுகின்றார்கள். அதனைவிட கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ள சிலரும் பொதுச் சபை உறுப்பினர்களாக தலைவரால் நியமிக்கப்படுவார்கள். அதற்கான அதிகாரம் தலைவருக்குள்ளது.

அதனால், பொதுச் சபையில் சுமார் 250 பேர் வரையில் இருப்பார்கள். கட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கே உள்ளது. ஆக, இந்த பொதுச் சபை உறுப்பினர்களை இலக்கு வைத்ததாகவே சுமந்திரனும், சிறிதரனும் தமது பரப்புரைகளை முன்னெடுக்கப் போகின்றார்கள். இந்த இருவரில் யாருக்கு அதிகளவுக்கு ஆதரவு உள்ளது என்பதற்கான தெளிவான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை. இருவருக்கும் சமமான ஆதரவு இருப்பதாகவே முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவருக்குமே கொள்கை ரீதியாக சில வேறுபாடுகள் உள்ளன. சிறிதரன் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிiயில் வசித்தவர். இறுதிப் போர்க் காலத்திலும் அவர் அங்குதான் இருந்துள்ளார். அதனால், தீவிரமான போக்கை கொண்டவராக அவர் பார்க்கப்படுகின்றார். ஏனைய தமிழ்க் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதிலும் அதிகளவுக்கு அக்கறை கொண்ட ஒருவராக அவர் காணப்படுகின்றார்.

சுமந்தினைப் பொறுத்தவரையில் சர்வதேச விவகாரங்களைக் கையாளக் கூடிய ஒருவராக அவரை முன்னிலைப்படுத்துபவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், அவருக்கு எதிரான கருத்துக்களும் இவ்விடயத்தில் உள்ளது. சர்வதேச சமூகத்தைக் கையாண்டு அவர் கடந்த 14 வருட காலத்தில் எதனைப் பெற்றுக்கொடுத்தார் என்ற கேள்வியும் அவருக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றது.

அதனைவிட சுமந்திரன் கொழும்பைத் தளமாகக் கொண்டவர். கொழும்பிலிருந்து செயற்பட்ட காலத்தில் அவரது மும்மொழிப் புலமை, சட்ட அறிவு என்பவற்றுக்காகத்தான் தேசியப் பட்டியல் மூலமாக அவரை எம்.பி.யாக்க வேண்டும் என்று சம்பந்தன் கருதினார். கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் சுமந்திரன் முன்னணிக்கு வருவதற்கு சம்பந்தன் அவருக்குக் கொடுத்த இடம்தான் காரணம்.

திருமலை மாவட்ட எம்.பி.பதவியை சம்பந்தன் ராஜினாமா செய்ய வேண்டும் என அண்மையில் சுமந்திரன் தெரிவித்தமை தமிழ் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், சுமந்திரன் மீது கடும் சீற்றமடைந்திருக்கும் சம்பந்தன் இவ்விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பார்? யாருக்கு ஆதரவாக தன்னுடைய செல்வாக்கைப் பிரயோகிப்பார் என்ற கேள்விகளும் உள்ளன. கடந்த பொதுத் தேர்தலின் போது இருவருக்கும் இடையில் புரிந்துணர்வு காணப்பட்டது. அன்ரன் பாலசிங்கம் போல சுமந்திரன் செயற்படுவார் என சிறிதரன் எதிர்பார்த்தார். அதாவது, கட்சித் தலைமையை தான் பொறுப்பேற்றால், தனக்கு அரசியல் ஆலோசகராக சுமந்திரன் செயற்படுவார் என சிறிதரன் ஆரம்பத்தில் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், அந்த புரிந்துணர்வு நீடிக்காதைக்கு பல காரணங்கள் இருந்துள்ளன.

சுமந்திரன் – சிறிதரன் போட்டி தமிழரசுக் கட்சியில் பிளவை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் இன்று பலமாக எழுந்திருக்கின்றது. இந்த நிலையில், போட்டியைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளிலும் சிலர் களமிறங்கியிருக்கின்றார்கள். இந்த இருவரையும் தவித்து மற்றொருவரை தலைவராக்கி கட்சிப் பிளவைத் தடுக்கலாமா எனவும் ஆராயப்படுவதாகத் தெரிவிக்கின்றது. புதுவருடம் பொங்கலுடன் இந்த விவகாரம் சூடுபிடிக்கும்!

408 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *