ஓடிக் களைத்த கால்களும் தட்டிக் களைத்த என் கைகளும்.

ஓடிக் களைத்த கால்களும் தட்டிக் களைத்த என் கைகளும்.
-பூங்கோதை இங்கிலாந்து.

என்னுடைய மகன் போலவே அத்தனை ஓட்ட வீரர்களும் தமது சக்தி அனைத்தையும் தம் கால்களுக்குப் பாய்ச்சியபடியே எம்மைக் கடந்து சென்ற போது என் கைகளுக்கும் தட்டுவதற்கு அத்தனை சக்தியும் எங்கிருந்தோ வந்து சேர்ந்தது. கரகோசத்தைக் கொடுத்த மக்களுடன் இணைந்து கொண்டேன். அது ஒரு உன்னதமான, நெகிழ்வான தருணம்.

ஒரு முழுமையான மரதன் ஓட்டம் என்பது 26.2 மைல்களை ( 46 கிலோ மீட்டர்கள்) ஓடிக் கடப்பது. இதற்கு உடற்பலத்தை விட மனத்திடமே அதிகமாகத் தேவைப்படும் என்பதைக் கடந்த 10.3.2024 இல் பார்சலோனாவில் நடைபெற்ற மரதன் ஓட்டத்தைப் பார்த்துப் புரிந்து கொண்டேன். ஓட்ட வீரர்கள் அனைவருக்கும், மகனார் உட்பட ஒரு கைத்தொலைபேசி பயன்பாட்டு இணைப்பொன்றை ( பழழபடந டiமெ) நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் வழங்கியிருந்தனர். அந்த இணைப்பினூடாக எவ்வளவு தூரத்தில் எவ்வளவு நேரத்தில் மகன் அந்த பிரமாண்டமான, இரம்மியமான நகரத்தை ஓடிக் கடந்து கொண்டிருக்கிறார் போன்ற விடயங்களை அவதானிக்கக் கூடியதாய் இருந்தது. மனதில் இலேசான ஒரு பதற்றம் இருந்ததை, அவன் திறமை மேல் இருந்த நம்பிக்கை உதறி எறிந்து கொண்டிருந்தது.

40 கீலோ மீற்றரை வந்தடைந்து கொண்டிருந்த மகனின் நகர்வு குறைவடைந்து, நின்று போனபோது அவன் உள்ளம் கவர் கள்ளியின் கைகள் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டன. அவள் கண்களில் இருந்து விழுவதற்குத் தயாராக இருந்த கண்ணீரைச் சந்திக்க என் கண்களுக்குப் பலம் அற்றுப் போனதை உணர்ந்த வேளை அது. ஒரு சில நிமிடங்கள் நானும் அவளும் அமைதியில் உறைந்த படியே கைத்தொலைபேசியில் அவன் நகர்வை எதிர்பார்த்து காத்திருக்க, அது மெதுவாக உயிர் பெற்று, நகர ஆரம்பிக்க எம் இருவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். நடுங்கிய அவள் கைகளில் வெப்பம் படர்ந்தது. மகன் இறுதிப் புள்ளியை வந்தடைந்த போது சொல்வதற்கு வார்த்தைகள் ஏதுமின்றிப் போனது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 20,000 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், ஊடு பாலினர், மூன்றாம் பாலினர், அங்கவீனர்கள் ( காலூன்றிகளுடன்) என பலதரப்பட்ட மக்கள், இன, மத, மொழி, நிற வேறுபாடின்றி வெவ்வேறு பொது நிதி சேகரிப்புகளுக்காகவும் பிரத்தியேகக் காரணங்களுக்காகவும் கை கோர்த்துக் கொண்டது, உலகத்தில் பொது மக்களிடையே இன்னும் ஒற்றுமை குலையவில்லை என்பதையும் அடிப்படை மனித நேயம் இன்னும் இறந்து போகவில்லை என்பதையும் எடுத்துக் காட்டியது. சக மனித நேயம், குழு ஒருமைப்பாடு, ஒற்றுமை, சுயநம்பிக்கை, தைரியம், சவால்களை எதிர்நோக்கும் தன்னம்பிக்கை எனப் பலதும் இந்த நீண்ட ஓட்டத்தோடு பின்னிப் பிணைந்து இருந்ததை இறுதிப் புள்ளியை, பலத்த சவால்களுக்கிடையே ஒவ்வொரு ஓட்ட வீரரும் வந்தடைந்த போது கண்டு கொண்டோம்.

282 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *