கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்தார் யேர்மன் கான்சிலர் அங்கெலா மேர்கெல்!

கிட்லர் மண்ணில் ஜனநாயகம்! புத்தர் மண்ணில் பொடி மிளகாய்த் தூள் பறக்குது !
யேர்மனியின் கான்சிலர் (பிரதமர் ) அங்கெலா மேர்கெல் யேர்மனியின் பழம்பெரும் பிரதான கட்சியான ஊனுரு (Christlich Demokratische Union Deutschlands) கட்சியின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார். தனது கட்சியின் செல்வாக்கு குறைவடைந்து வருவதால் தொடர்ந்து அப்பதவியில் இருக்க விரும்பாமலே தலைவர் பதவியை இராஜினாமாச் செய்தார். அதாவது தனது கட்சியான CDU கட்சியானது…

2017 செப்டெம்பரில் பாராளுமன்றத் தேர்தலில் 26.8 வீதவாக்குகளைப் பெற்றதுடன் 7.4 வீதமான வாக்குகளை இழந்திருந்தது. இதேபோல 2017 அக்டோபரில் நடைபெற்ற நிடர்சக்ஸன் (Niedersachsen) மாநிலத் தேர்தலில் 2.4 வீதமான வாக்குகளையும் 2018 அக்டோபரில் நடைபெற்ற கீசன் (Hessen) மாநிலத்தேர்தலில் 11.3 வீதமான வாக்குகளை இழந்திருந்தது அத்துடன் பவேரியா (Bayern) மாநிலத் தேர்தலில் CSU கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து இடம்பெற்ற தேர்தலிலும் 10.5 வீதமான வாக்குகளை இழந்து தொடர்ச்சியான தோல்வியைச் சந்தித்தபடியாலேயே தனது கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச்செய்தார். இருப்பினும் தொடர்ந்து நாட்டின் தலைவராக அதாவது அதிகாரம் மிக்க பதவியான கான்சிலராகப் பதவி வகிப்பார். 2021 ஆண்டுவரை இவர் இப்பதவியில் இருப்பார்.

யேர்மனிய மத்திய அரசின் அரசியல் கொள்கைகள், அகதிகள் அளவுக்கு மேலதிகமாக வரவு, வேலையில்லாதோர் பிரச்சனை, பொருளாதாரவீழ்ச்சி, வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு, வெளிநாட்டுக் கொள்கை போன்ற பலகாரணங்களால் தற்போது ஆட்சியிலிருக்கும் CDU+SPD

(Sozialdemokratische Partei Deutschlands) கூட்டரசில் மக்கள் நம்பிக்கை இழந்து இக்கட்சிகளுக்கு வாக்களிப்போர் எண்ணிக்கை வலுவாகக் குறைவடைந்துவருவதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவித்தன.

இதனால் அங்கெலா மேர்க்கலின் தனிப்பட்ட செல்வாக்கும் குறைந்து வருவதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவரின் செல்வாக்கு வீழ்ச்சியை நோக்கினால்…

2017 ஜனவரியில் 56% 2017 யூலையில் 69% 2018 அக்டோபரில் 44%

ஊனுரு கட்சியானது 26-6-1945ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும் தற்போது 73 வருடங்களாகும். அங்கெலா மேர்கெல் (Angela Dorothea Merkel) (பிறப்பு யூலை 17, 1954) யேர்மனி நாட்டின் ஓர் அரசியல்வாதி. கிறித்தவக் குடியரசு ஒன்றியக் கட்சியின் (Christian Democratic Union) உறுப்பினரான இவர், அக்கட்சியின் சார்பாக 2005, 2009, 2013, 2017 ஆண்டுகளில் யேர்மனி கூட்டமைப்பு தேர்தல்களில் கான்சிலர் (Chancellor) பதவிக்கான மேர்க்கெல் தெரிவாகித் தொடர்ந்து 4 தடவைகள் அதிபரானார்.

லைப்ஃசிக் பல்கலைக்கழகத்திலும் படித்தார். 1973 முதல் 1978 வரை இயற்பியல் படித்தார். பின்னர் 1978 முதல் 1990 வரை யேர்மனியின் இயற்பியல் வேதியியலுக்கான நடுவகத்தில் (Zentralinstitut für physikalische Chemie (ZIPC)) மேர்க்கெல் வேதியியல் (இயற்பியல் வேதியியல்) படிப்பையும் பணியையும் தொடர்ந்தார். உருசிய மொழியைச் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். 1986 ஆம் ஆண்டு; வேதியியல் தலைப்பில் முனைவர் பட்டம் (Dr. rer. nat.) பெற்றார்.

உலகத்திலேயே அதிகாரம் கூடிய அரசியல் பெண்மணியாகவும், உலக நாடுகளுடன் நட்பைக்கொண்டு நிர்வாகத்தை நடத்திவருபவரும் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பாராளுமன்றம், நேட்டோ நாடுகள் மத்தியில் நல்ல செல்வாக்கைக் கொண்டிருப்பவருமான இவர் வெளிநாட்டவர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கைக் கொண்டிருக்கிறார்.

யேர்மனியர்கள் மத்தியில் சற்று செல்வாக்குக் குறைவடைந்தாலும் தனிப்பட்ட ரீதியில் நல்ல செல்வாக்குடையவராகவே திகழ்கின்றார். இவரின் எதிர்காலம் எப்படி அமையும் எனப்பொறுத்திருந்துதான் பார்ப்போம். இவரின் காலியான கட்சித்தலைவர் பதவிக்கு 3 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கட்சியின் புதிய தலைவர் யார்? என்று விரைவில் அறிவிக்கப்படும்….

யேர்மனியில் அதிபராக இருக்கும் அங்கெலாமேர்க்கெல் தனது கட்சியின் செல்வாக்கு குறைவடைந்து வருவதால் தொடர்ந்து அப்பதவியில் இருக்க விரும்பாமலே தலைவர் பதவியை இராஜினாமாச் செய்தார்.

ஆனால் இன்று இலங்கை அரசை எண்ணத்தோன்றுகிறது இவரது பதவிவிலகும் பெருந்தன்மை.

சிறு பொடிதன்னும் (மிளகாய்ப்பொடி) போடாது தனது பதவியை தானாக முன்வந்து இராஜினாமாச் செய்துள்ளார்.
இது கிட்லர் மண்ணில் சாத்தியம் என்றால்! ஏன் ஆசையைத் துறந்த புத்தர் பூமி என்று சொல்லிக்கொள்ளும் இலங்கையில் ஏன் சாத்திமில்லை.

–வ.சிவராஜா

785 total views, 2 views today

1 thought on “கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்தார் யேர்மன் கான்சிலர் அங்கெலா மேர்கெல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *