தொலைக்காட்சி தொடர் நாடகங்களும் தொலைந்து போன உறவுகளும்.

மனித மனம் என்பது எப்பொழுதும் புதிய புதிய விடயங்களை அறிந்துகொள்வதிலும், ஆராய்ந்து கொள்வதிலும் ஆர்வம் மிக்கதாகவே இருக்கின்றது. இதன் திறன் ஒவ்வொரு மனிதனின் தேடுதலுக்கும், ஆளுமைக்கும் தகுந்து விரிவடைந்து கொண்டே இருக்கின்றது. அத்தோடு மனது தனக்கு மிக பிடித்தமான விடயங்களையே பொழுது போக்கு அம்சமாகவும் கொண்டுள்ளது.

இந்த நூற்றாண்டில் எம்மவர்களின் பொழுது போக்கு அம்சமாக மிகப் பெரிய பங்கு வகிப்பதில் பெருமிடத்தை பிடித்ததில் ஒன்றுதான் இந்த தொடர் நாடகங்கள். இந்த தொடர் நாடகங்கள் மனித மனதில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பலரை அதன்பால் ஈர்த்தும் வைத்திருக்கின்றது. அத்தோடு அழையா விருந்தாளியாக நாசூக்காக அனைவரின் வீட்டுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விட்டது.

எப்படி இந்த நாடகங்கள் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றது? அதன்பால் பலரை ஈர்த்துக் கொண்டு எவ்வாறு இந்த தொடர் நாடகங்களால் ஆளுமை செலுத்த முடிகின்றது?

பொதுவாக மனித மனம் எப்பொழுதும் பிறருடைய இரகசியங்களை தெரிந்து கொள்வதிலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்வை அறிந்துகொள்வதிலும், பெரும் ஆவல் கொண்டிருக்கும் அதேவேளை இன்னொரு மனிதனோடு தன்னை ஒப்பிட்டு பெருமைப்பட்டு கொள்ளவும், கர்வம் கொள்ளவும் அது ஆவல் கொள்ளும். இன்னொருவரின் துன்பத்தில் சுகம்காணும், அவர்களை போல் தானில்லை என்று தேற்றிக்கொள்ளும். அவர்களுக்கு நன்மை செய்து, ஆறுதல் கூறி தன்னுடைய கர்வத்தை அல்லது தனது நல் சுயமதிப்பீட்டை நிலைநாட்டும்.

இப்படியான பல பல மனதின் நோக்கங்களை நிறைவேற்றி அதற்கு தீனிபோடுவதே இந்த தொடர் நாடகங்கள். அவை வெறும் நடிப்பு என்று தெரிந்தும் அதனுடன் லயப்பட்டு அதை உண்மை என்றே நம்புவதுதான் மிகப் பெரும் சாபக்கேடாக இருக்கிறது. நாம் பிறரால் அல்லது குடும்ப உறவுகளால் வஞ்சிக்கப்படுகிறோமோ என்ற சந்தேகத்தை இலகுவில் விதைத்துச் செல்கிறது. எண்ணத்துக்கும் இலகுவில் அகப்படாத பல எதிர்மறையான தந்திரங்களை அதிகம் கொண்டவையாக இருக்கின்றன இந்த தொடர் நாடகங்கள்.

பொதுவாக மனித மனமானது பார்க்கின்ற, கேட்கின்ற, அனுபவிக்கின்ற விடயங்களை உள்வாங்கி உடலில் பல இரசாயன மாற்றங்களை நிகழ்த்துகின்றது. அதற்கேற்ப அதிர்வலைகளையும் வெளிப்படுத்துகின்றது. இந்நிலையில் இந்த தொடர் நாடகங்களில் வரும் அதிகப்படியான வில்லத்தனங்கள், எதிர்மறையான செயற்பாடுகள், ஆதீத சோகம் , சாபங்கள், அழுகுரல்கள் எல்லாம் பார்ப்பவர்களின் வீடுகளில் ஒலித்து செவி வழி சென்று அது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி உண்மையிலேயே அவற்றை அனுபவித்தால் உடலின் இரசாயன மாற்றம் எவ்வாறு இருக்குமோ அதே மாற்றம் தானாகவே நிகழ்கிறது. திரைப்படங்கள் குறுகிய மணி நேரத்திற்குள் முடிந்து விடுவதால் அந்த கதாபாத்திரங்களை விட்டு வெளியே வருவது மிக இலகுவாக இருக்கிறது. ஆனால் தொடர் நாடகங்கள் அதை விட்டு வெளியேறிவிடக் கூடாது என்ற விடயத்தில் கவனத்தோடு செயல் புரிகின்றன. நாடகம் அன்றைய தினத்தில் முடிவடையும் போதே அடுத்த நாள் நடப்பது என்ன என்ற பதற்றத்தையும், எதிர்பார்ப்பையும் தந்துவிட்டுச் சென்றுவிடும். அந்தளவுக்கு பார்ப்பவர்கள் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரமாகவே மாறி விடுகின்றனர்.

இதனால் என்ன ஊர் வம்புகள் பேசாமல் இதற்குள்ளேயே அவர்கள் தொலைந்து போகட்டுமே என்று சொல்லியும் கொள்ளலாம், அதேவேளை சமூக அக்கறையான தொடர் நாடகங்களும் உண்டு தானே என்றும் கூறிக் கொள்ளலாம், அதை வலியுறுத்தி அதனுடைய நன்மைகளை பற்றியே மிகப் பெரும் ஆய்வு கட்டுரையும் எழுதியும் விடலாம்.

இன்றைய நிலையில் இந்த தொலைக்காட்சி தொடர்கள் பல குடும்பங்களின் பிளவுகளுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. அந்நேரங்களில் பல உறவுகள் புறக்கணிக்கப் படுகின்றன. அவற்றின் மாயாஜாலங்களில் தம்மைத் தொலைத்துவிட்டு தமது பெற்றோரோடு கூட பேசுவதற்கு நேரம் போதாமல் அடுத்தடுத்த தொடர்களை தேடி அங்கலாய்த்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர் பலர். இது தவிர பல களவுகளையும் மிக கடுமையான தந்திரங்களையும் தேடித்தேடி புதிது புதிதாகக் கண்டுபிடித்து கற்பித்து விட்டும் செல்கின்றன.

ஒரு உண்மையை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு மனிதனுமே மிகப் பெரிய ஆற்றல் மிக்க மிக சிறந்த படைப்பு அவன் வாழ்நாளில் தன்னை தானே ஆராய்ந்து, அறிந்து, உணர்ந்து அவனுடைய வாழ்வை அவன் முழுமையாக வாழ்வதற்கே அவன் பிறவியின் காலம் மிக குறுகியதாக இருக்கிறது. இதை எம்மால் உணர்ந்து கொள்ள அல்லது சிறிதேனும் அறிந்து கொள்ள முடியாது போனால் இங்கு சொல்ல முயலும் விடயம் ஒருபொழுதும் புரியாது!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் படிக்கப்படாத, பார்க்கப் படாத, உணர்ந்து கொள்ள பட வேண்டிய பல விடையங்கள் பொங்கி பிரவகிக்கும் பெரும் நீரூற்று போல் பொங்கி வழிந்து கொண்டே இருக்கிறது. இதன் சிறு துகளை பருகிக் கொண்டாலே போதும் அதன் பின் பல பழக்க வழக்கங்கள் மாறியே போகும்.

சுயத்தை இழக்க வைக்கும் பொழுது போக்கு விடயமாகவே இந்த தொடர் நாடகங்கள் அதிக அளவு மக்களோடு ஒன்றி இருக்கின்றது, இது பெரும் நேரச் சுரண்டல் செய்கின்றது, சிறுவர் உட்பட அதிக அளவு மக்களை இது அடிமையாக்கி வைத்திருக்கின்றது. நாம் பயணிக்க வேண்டிய பாதை மிக பெரிது ஆனால் இந்த சாதனங்கள் எம்மை ஒரு இடத்தில் தேக்கி வைத்து விடுகின்றன.

பலர் நேரங்களை கடத்துவதற்கே இந்த தொடர் நாடகங்களால் ஈர்க்கப் பட்டவர்கள், ஒரு நாளின் பல அழகான மணித்துளிகளை இதற்குள்ளே தொலைத்தவர்கள், அடுத்தநாள் அதே நேரத்தில் அந்த நாடகத் தொடரைக் காண்பதற்காகவே பல முக்கிய விடயங்களை தள்ளிப் போடுபவர்களும், தவிர்ப்பவர்களும் பலர். கிடைத்த அற்புதமான வாழ்வை தொலைக்கின்றோம் என்ற சிறு உணர்வு கூட இல்லாமல் தொலைத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

எம் வாழ்வின் பெறுமதியை உணர்ந்துகொள்ள வேண்டுமாயின் எம்முடனே நாம் அதிக நேரத்தை வரவு வைக்க வேண்டும். கடந்து போகின்ற ஒரு வினாடியே கூட மீண்டும் எம்மால் என்ன விலை கொடுத்தும் கொண்டுவரவே முடியாது. எந்த கருவியும் அதற்கு உதவி புரியவும் முடியாது.

தொடரும் என்ற வார்த்தையே நிச்சயம் ஆனது அல்ல அடுத்த நொடியும் நிரந்தரம் அல்ல தொடர் நாடகங்களின் தொடரும் என்ற வார்த்தைகளை நம்பி காலத்தை வீணடிக்காதீர்கள், காலம் மிகப் பெரிய வரம். வாழ்வை வசந்தமாக விரும்பினால் உங்களின் அகப் பக்கங்களை புரட்டுவதற்கு உங்களை ஆயத்தம் செய்து கொள்ளுங்கள்.

கரிணி

2,367 total views, 2 views today

1 thought on “தொலைக்காட்சி தொடர் நாடகங்களும் தொலைந்து போன உறவுகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *