ஊடகங்களின் சூதாட்டத்தில் அகதிகளுக்கு எங்கே புகலிடம்?

இன்று ஜேர்மனியை அகதி-நெருக்கடி ஆட்டிப்படைக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு பொருளாதாரத்தில் வெற்றி இது. அதே நேரத்தில் அரசாங்கமும் ஊடகங்களும் திருவிளையாடல்களை விடுவதில்லை.

பழைய பாழடைந்த Hotelகளின் உரிமையாளர்கள் விடுமுறைப் பயணிகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், தங்களது கட்டிடங்களை அகதி இல்லங்களாக மாற்றுகின்றனர். ஒரு நாள் ஒரு புகலிடக்கோரிக்கையாளருக்கு, கட்டிட உரிமையாளர் Frankfurt அரசாங்கத்திடமிருந்து குறைந்தது 13,- யூரோவிலிருந்து பணம் பெறுகிறார். (FAZ 02/2016) ஒரு சாதரண Hotelல் 250 அகதிகளை குடியேற்றலாம் என்றால் ஒரு மாதத்தில் 100.000 யூரோக்கள் வரை வருமானம் பெறலாம். பெறும் வருமானம் சில விடுதிகளில் சரியான முறையில் செலவழிக்கப்படாததால் அகதிகள் ஆழ்ந்த கடுங்குளிர்காலத்திலும், வெப்பம் இல்லாத அறைகளில் குளிரில் நடுங்குவதும் உண்டு.

அகதி இல்லங்களில் மருத்துவ பரிசோதனை செய்யும் மருத்துவர்களுக்கு Frankfurt நகரம், 60,-இல் இருந்து சனிஃஞாயிறு மற்றும் விடுமுறைகளில் 100,- யூரோக்களை மணித்தியாலச்சம்பளமாக வழங்குகிறது. இப்படி Leo Lattasch Frankfurt நகரின் அம்புலன்ஸ் சேவையின் தலைவர் குறிப்பட்டார் (FAZ ). மேலும் வாரத்தின் எழு நாட்களிலும் குறைந்தது இரண்டு மணி-நேரங்கள், இரண்டு மருத்துவர்கள் அகதி இல்லங்களில் சேவை செய்கின்றனர். இருவரில் ஒருவர் குழந்தைமருத்துவராக இருக்கவேண்டும். குழந்தை மருத்துவர்களிற்கு Frankfurt ல் தட்டுப்பாடு உள்ளதால், ஓய்வூதியத்தில் உள்ள குழந்தை மருத்துவர்களை Leo Lattasch, தன்னார்வ வழியிலே பணி புரிய வேண்டுகிறார். (FAZ ) இதனால் அகதிச்சிறார்களுக்கு, சமீபத்திய மருத்துவ சேவை கிடைக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. மாநிலங்களிடையே அகதிகளின் விடுதிகளுக்கான விதிகள் மாறுபடுவதால் சட்டங்கள் சாதகமாகப் பயன்படுத்தபடுகின்றன.

அரசாங்கம் ஒரு சில அகதிகளின் முன்னேற்றத்தை தேர்ந்தெடுத்து அவர்களது கதையை ஊடகங்களுக்கு எடுத்துச்சென்று தமக்கு சாதகமாக்குகின்றனர். உதாரணத்திற்கு சிரியாவில் இருந்து வந்த „Thamim Fattel“ இன்று நாடகக்கலைஞராக சிறப்பிக்கப்படுகின்றார்.

புகலிடம் தேடிவருவோருக்கு ஜேர்மன் மொழியை கற்பிக்கையில், இதுபோன்ற விடுதலையான வாழ்வுமுறை கடைசிவரையும் உங்கள் தாய்நாட்டில் கிடைக்காது என்று மூளைச்சலவை செய்யப்படுகிறது. என் வயது அகதிகளிடம் நான் பேசும்போது ஜேர்மனி மேல் இவர்கள் காட்டும் அன்பு, ஜேர்மனியிலே பிறந்து வளர்ந்த வெள்ளையர்களிடம் காணப்படும் தேசிய உணர்வைவிட கண்மூடித்தனமாகப் படுகிறது. காரணம் உள்-நாட்டு அரசியற் செய்திகளை அகதிகளுடன் அதிகம் ஜேர்மன் ஆசிரியர்கள் பகிர்வது குறைவு.

முக்கியாமாக, தாய், தந்தை, உறவினர்களின் தொடர்பு குறைய, மாற்றாக ஜேர்மனியில் உள்ள ஜேர்மன் வயோதிபர்களை அகதிகளிற்கு பொறுப்பாக்கி „பெற்றோர்“ முறையை பேணுகின்றனர். தொடரும் தலைமுறை „oma opa“ என்று அவ் வயோதிபர்களை அழைக்கிறது. இப்படி அந்த புதிய பெற்றோர்களிடமும், ஜேர்மனியிடமும் சார்ந்து இருக்கும் நன்றிக்கடைமையை உணரவைக்கின்றனர். இதனால் அகதிகள், சமூகவைலைகளிலும், ஊடகங்களிலும், அரசாங்க-மேடைகளிலும் ஜேர்மெனியின்மேல் பாரிய தேசிய-உணர்வைக்காட்ட, மேற்கூறிய வித்தைகள் புதைபடுகிறது. அகதிகளில் சிலர், தமது வேர்களை மறந்து, தாம் „யேர்மனியர்“ என்றும் தம்மினத்தவரிடம் இருந்து தூரம் செல்கின்றனர்.

இதோடு ஜேர்மனியரிடையே அகதிகள் அனைவரும் மிகச் சிறப்பான வாழ்வையே வாழ்ந்து வருகின்றனர் என்ற கருத்தை பரப்புகின்றனர். யேர்;மனியின் மேல் ஒரே ஒரு அகதி தீவிரபற்று காட்டும்போது, ஏனைய அகதிகள் குளிரில் நடுங்குவதும், அகதி இல்லங்களில் பெறும் துன்பங்களையும் யேர்மனியர் மறந்திடுகின்றனர்.
சிறப்பிக்கப்படுபவரின் வழியையும், அவர் பெற்றிருக்கக்கூடிய அனுகூலங்களையும் கருத்திற்கொள்ளாமல், அந்நபரை ஊடகங்கள் போற்றுகின்றனர். ஊடகங்களும் அரசியல்வாதிகளும் செய்யும் தந்திரங்கள் அப்பாவி மக்களுக்கு விளங்கிடுமா?

இதெல்லாம் இவ்வாறு நடக்க ஜேர்மன்-அரசாங்கம் அகதிகளிடம் தனி முன்னேற்றத்தில் போர் அக்கிரமங்கள் தொடரும் தாய்நாடுகளுக்கு திரும்ப, பணம் வழங்குவதாக சுவரொட்டிகளும், விளம்பரங்களும் ஜேர்மனிய புகையிரதநிலையங்களிலும், பொதுப்போக்குவரத்துச் சேவைகளிலும் யேர்மன், அரபு, ஹிப்ரூவ், குர்திஸ், பர்சி ஆகிய அகதிகள் அதிகம் பேசும் மொழிகளில் அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்சாரத்தின் தலைவர் யேர்மனியின் உள்த்துறை அமைச்சர் Horst Seehofer. அகதிகளுக்கு அதிகூடியது 1200.-யூரோக்கள் „Starthilfe Plus“ என அழைக்கப்படும் பணம் தாய் நாடு திரும்பினால் கொடுக்கப்படும் இதை IOM(IOM (International Organization for Migration) சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு) குறிப்பிடுகிறது. அகதிகளின் நெருக்கடியை சீர்செய்ய இது வழியாக எடுக்கப்படுகிறது. நீல நிறத்தில் அப்பாவித்தனமாகத் தெரியும் இச்சுவரொட்டி வாழைப்பழத்தில் ஊசி போடுவதுபோல் உள்ளது.
அகதிகள் சிலர் முன் செய்த குற்றங்கள் இன்றுவரை ஊடகங்களில் மீழாய்வு செய்யப்பட்டும், மக்களின் மனதுகளை விட்டு நீங்காமற்பண்ணப்படுகின்றன. எங்கு குற்றங்கள் நடந்தாலும் முதலில் அகதிகளின் மேலே பழி சுமத்தப்படுகிறது. அகதிகள் சிறப்பாக செய்தவையை ஊடகங்களில் சிறுபான்மையிலேயே காணலாம். இப்படி அகதிகளுக்கு எதிரான அணுகுமுறைகளை மக்களிடையே பரப்புகின்றனர்.
அகதிகளின் தலையெழுத்துக்கள் ஒவ்வொன்றும் மாறுபட்டதாகவே உள்ளது, ஏனெனில், அகதிகளின் கதையை எழுதுவது ஒரு கரம் மட்டுமல்லாமல், பலர் கரங்களாக உள்ளது. இன்று ஒரு அகதிக்கு குடியிருப்பு அனுமதி கொடுப்பவர் எந்தச் சாயல் உள்ள செய்தி பார்த்தாரோ என்பது முக்கியமாகிறது. ஊடங்களின் சூதாட்டத்தில், அகதிக்கு எங்கே புகலிடம்?

— ராம் பரமானந்தன்

729 total views, 3 views today

1 thought on “ஊடகங்களின் சூதாட்டத்தில் அகதிகளுக்கு எங்கே புகலிடம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *