மகிந்தவின் டில்லி விஜயமும் இந்தியாவின் புது வியூகமும்

இலங்கை விவகாரத்தில் இந்தியா மீண்டும் ராஜதந்திர காய்நகர்த்தல்களை இந்தியா ஆரம்பித்திருக்கின்றதா என்ற கேள்வி கடந்த வாரத்தில் எழுந்திருக்கின்றது. கொழும்பு அதிகார மட்டத்தில் குழப்பங்கள் உருவாகிவரும் நிலையில், இந்தியாவின் இந்தக் காய்நகர்த்தல்கள் இராஜதந்திர வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. மீண்டும் ஒரு ஆட்சிமாற்றத்துக்கு இந்தியா வழிவகுக்கப்போகின்றதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ டில்லிக்கு மேற்கொண்டிருந்த விஜயம்தான் இந்தக் கேள்விகளுக்குக் காரணம். மகிந்த ராஜபக்ஷ மட்டுமன்றி அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் குழு ஒன்றும் கூட டில்லி சென்றிருந்தது. சபாநாயகர் தலைமையிலான இந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் உட்பட கட்சித் தலைவர்கள் பலரும் இடம்பெற்றிருந்தார்கள். ஆனால், மகிந்தவின் விஜயத்துக்கு முன்பாக அந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவின் விஜயம் அடிபட்டுப்போய்விட்டது.

ராஜபக்ஷவின் புதுடில்லி விஜயம் இந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றுக்கொண்டமைக்குப் பல காரணங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் வரையில் இந்தியாவை கடுமையாக விமர்சிக்கும் ஒருவராகவே ராஜபக்ஷ இருந்தார். சீன சார்பானவராகக் கருதப்படும் ராஜபக்ஷ, இலங்கையின் விவகாரங்களில் இந்தியா அவசியமற்ற முறையில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டி வந்துள்ளார். ஒரு இந்திய எதிர்ப்பாளராகவே அவர் தன்னைக் காட்டி வந்திருக்கின்றார். தௌ;பகுதி கடும் போக்கு சிங்களவர்களின் ஆதரவைத் தக்கவைக்க “இந்திய எதிர்ப்பு’ அவசியம் என அவர் கருதியிருக்கலாம்.

இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவான அவர், மூன்றாவது தடவையாகவும் பதவிக்கு வர முற்பட்டவர். 2015 இல் தனது மூன்றாவது முயற்சியில் தான் தோல்வியடைந்தமைக்கு இந்தியாதான் காரணம் என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார். ஆக, இந்தியாவுக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையிலான உறவுகள் இனிப்பானதாக இருக்கவில்லை. இது வரலாறு. இந்த வரலாற்றை மாற்றியமைப்பதற்கு இரு தரப்பினரும் இப்போது முற்பட்டிருக்கின்றார்களா என்ற கேள்வி யைத்தான் ராஜபக்ஷவின் டில்லி விஜயம் எழுப்பியிருக் கின்றது.

இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய ராஜபக்ஷ ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானது. “தவறான புரிதலை மீள் திருத்தும் வகையில் டில்லிச் சந்திப்புகள் அமைந்தன. அது மாத்திரம் அல்லாது இலங்கை – இந்திய உறவை மேலும் பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் இந்திய விஜயம் அமைந்தது” என அவர் குறிப்பிட்டிருக்கின்றார். “இந்த விஜயத்தின் ஊடாகப் பல புதிய மாற்றங்கள் ஏற்படும் சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன” எனவும் ராஜபக்ஷ தெரிவித்திருப்பது கவனத்துக்குரியது.

பாரதிய ஜனதா கட்சி மூத்த உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்புக்கு அமையவே இந்த விஜயத்தை மேற்கொண்டு ராஜபக்ஷ டில்லி சென்றார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய பேச்சுக்களை ராஜபக்ஷ நடத்தியிருந்தார். இந்திய அரசியலில் ஆட்சிகளை மாற்றக் கூடிய பேரங்களை நடத்துவதில் வல்லவராக் கருதப்படும் சுவாமிதான் இந்த சந்திப்புக்களுக்கும் ஏற்பாட்டாளராக இருந்திருக்கின்றார். ராஜபக்ஷவின் ஆதரவாளரான சுவாமி, ராஜபக்ஷ ஆட்சியை மீண்டும் இலங்கையில் ஏற்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயற்படுபவர்.

மகிந்த குறித்த இந்தியாவின் அணுகுமுறையிலும், இந்தியா குறித்த மகிந்தவின் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை புதுடில்லிப் பேச்சுக்கள் வெளிப்படுத்து கின்றன. 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு இந்தியா பின்னணியில் இருந்ததாக குற்றஞ்சாட்டிய ராஜபக்ஷ, இப்போது இந்தியாவின் ஆதரவை நாடிச்செல்ல வேண்டிய ஒருவராக இருக்கின்றார். பிராந்திய வல்லரசான இந்தியா, இலங்கை அரசியலில் செலுத்தக்கூடிய செல்வாக்கை ராஜபக்ஷ புரிந்துகொண்டிருப்பதன் விளைவுதான் அதற்குக் காரணம். மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் புதுடில்லியின் ஆதரவு அவசியம் என்பதை ராஜபக்ஷ தெளிவாகவே உணர்ந்துகொண்டிருக்கின்றார்.

மறுபுறத்தில் இலங்கை அரசியலில் ராஜபக்ஷவின் மீளெழுச்சியையும் இந்தியா அவதானித்திருக்கும். உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களில் அவருடைய கட்சி பெற்ற வெற்றி இதற்கு ஆதாரம். இதனைவிட, அடுத்த தேர்தலில் ராஜபக்ஷவின் அணியே வெற்றிபெறும் என ‘எக்கனாமிக்ஸ்ட்’ சஞ்சிகையின் புலனாய்வுப் பிரிவின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆக, மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடியவருடன் உறவுகளைப் பலப்படுத்தி வைத்திருப்பதுதான் தமது நலன்களுக்கு அவசியமானது என புதுடில்லியும் கணக்குப் போட்டிருக்கும்.

இல்லையெனில் ராஜபக்ஷ மீண்டும் சீனாவின் பக்கம் சரிந்துவிடக்கூடிய அபாயம் இருப்பதையும் டில்லி அவதானித்திருக்கலாம்.
சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில்தான் ராஜபக்ஷ டில்லி சென்றிருந்தாலும், அதன் பின்னணியில் ஆளும் பாஜ.கவும், மோடி அரசும் இருந்திருக்க வேண்டும் என்றே இராஜதந்திரிகள் கருதுகின்றார்கள். புதுடில்லி சென்ற ராஜபக்ஷ அங்குள்ள மிகவும் உயர்ந்த ஹொட்டலான டுந ஆéசனைநைn ர்ழவநட இல் தங்கவைக்கப்பட்டார். மோடியின் குண்டு துளைக்காத கார்களில் ஒன்றே ராஜபக்ஷவின் பாவனைக்கு வழங்கப்பட்டது. அதனைவிட, கடுமையான பாதுகாப்பும் அவருக்குக் கொடுக்கப்பட்டது. மற்றொரு நாட்டின் தலைவருக்குக் கொடுக்கப்படும் கௌரவம்தான் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம் இலங்கைக்கு மோடி அரசாங்கம் முக்கியமான ஒரு செய்தியைச் சொல்லியிருப்பதாகவே கருதப்படுகின்றது. மைத்திரி – ரணில் அரசு அதிகளவுக்கு சீனாவின் பக்கம் சாய்வது இந்தியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது தெரிந்த செய்திதான். ராஜபக்ஷவுக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு அதன் பிரதிபலிப்பாக இருக்கலாம். அதனைப் புரிந்து செயற்படாவிட்டால், ஆபத்துதான் என்பதை புதுடில்லி இராஜதந்திர பரிபாசைகளில் உணர்த்தியிருப்பதாகவே தெரிகின்றது.

 

— பாரதி , இலங்கை

3,677 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *