மனிதர்களுக்கு பிறகு புத்திசாலியான மிருகம் இதோ
விலங்கு இராச்சியத்திலேயே புத்திசாலியான இனம் மனித இனம் என நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். சரி சரி அது மறுக்க முடியாத ஒரு உண்மை தான். இருந்தாலும் மனிதர்களைத் தவிர்த்து வேறு விலங்குகளும் கூட மிகவும் புத்திசாலியாக இருக்கின்றன. அப்படி மனிதர்களுக்குப் பின் அடுத்த இடத்தைப் பெற்ற புத்திசாலியான விலங்கு எது என்று உங்களுக்குத் தெரியுமா?
புத்திசாலியான விலங்குகளில் மனிதர்களுக்குப் பின் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது ஒரு வகை(டால்பின்) ஓங்கில் (dolphin), குறிப்பாக பாட்டில்நோஸ் ஓங்கில் (bottlenose dolphin) ஆகும். அது ஏன் தெரியுமா? இந்த ஓங்கில் வகைக்கு மேம்பட்ட மொழி அறிவு இருக்கிறது. மேலும் இதனால் எளிதான சைகை மொழிகளைக் கூட அறிந்து கொள்ள முடிகிறதாம். இது எல்லாமே போதாது என்று இந்த ஓங்கில் வகை அடிப்படை எண் கணிதத்தைக் கூட புரிந்து கொள்ளுமாம்.
பொதுவாக இந்த பாட்டில்நோஸ் ஓங்கில் சமூக குழுக்களாகத் தான் இருக்குமாம். மேலும் அவை சிக்கலான விசில் மற்றும் கீச்சு சத்தங்கள் மூலம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றதாம். உதாரணத்திற்குப் பிற ஓங்கில்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால், மற்ற ஓங்கில்கள் குழுக்களாகப் பயணித்து வந்து அதைக் காப்பாற்றுமாம். மனிதர்களை விடப் புத்திசாலியாக இல்லையென்றாலும், இந்த பாட்டில்நோஸ் ஓங்கிலுக்கு இரக்கம் அதிகம் இருக்கின்றது என்பதில் சந்தேகமே இல்லை.
இன்னும் ஒரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? தங்களது பயிற்சியாளர்கள் கற்றுக் கொடுத்த வித்தைகளை நினைவில் வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், மற்ற ஓங்கில்களுக்கு இந்த செயல்முறைகளைக் கற்று கொடுக்கின்றனவாம். குரல்வித்தைகள் மற்றும் செயல்பாடு இரண்டிலும், மனிதர்களைப் போல் நடிக்கவும் இந்த ஓங்கில்களுக்குத் தெரியுமாம். இதை எல்லாம் கேட்கவே ஆச்சரியமாக இல்லையா?
சரி, நண்பர்களே, இனி நீங்கள் கூறுங்கள். இந்த அதிசய விலங்கைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
1,905 total views, 2 views today