நாளை உங்கள் பாதனியே உங்களுக்கு பாதை காட்டலாம்?
வியரபில் டெக்னாலஜி எனப்படும் அணியும் தொழில்நுட்பம் இன்றைக்கு தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விட்டது. அதில் புதிதாகச் சேர்ந்திருப்பது தான் இந்தப் பணப் பரிவர்த்தனை !
அணியும் தொழில்நுட்பத்தில் பணப்பரிவர்த்தனை பற்றிப் பார்க்கும் முன், அணியும் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதை மிகச் சுருக்கமாய் சொல்லி விடுகிறேன். நமது உடலில் அணிந்து கொள்ளக் கூடிய ஒரு கருவி, இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், செயற்கை அறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன், சில பணிகளைச் செய்வது தான் இதன் அடிப்படை ! இந்த அணியும் கருவி ஒரு வாட்ச் ஆகவோ, மோதிரமாகவோ, ஷ_வாகவோ, உடையாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இப்போது பரவலாக எல்லோரும் கைகளில் கட்டிக்கொண்டு திரியும் ‘ஹெல்த் டிராக்கர்’ இதன் ஒரு சிறந்த உதாரணம் எனலாம். சென்சார்களின் மூலமாக நமது உடலின் ஆரோக்கியம் குறித்த தகவல்களைத் திரட்டும் வேலையை இத்தகைய ஹெல்த் டிராக்கர்கள் செய்கின்றன. ஃபிட் பிட் போன்ற நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன.
எவ்வளவு தூரம் நடந்தீர்கள், எத்தனை மாடிப்படி ஏறினீர்கள், எத்தனை நேரம் ஓடினீர்கள், எவ்வளவு கலோரிகளை இழந்தீர்கள் போன்றவற்றை இது அக்கு வேறு ஆணி வேறாக படம்பிடித்துக் காட்டும். இரவில் அணிந்து கொண்டு தூங்கினால் நமது தூக்கத்தின் தன்மையையும் படம் போட்டுக் காட்டும். எத்தனை மணி நேரம் தூங்கினீர்கள், எத்தனை முறை முழித்தீர்கள், எத்தனை முறை தூக்கம் வராமல் புரண்டீர்கள் என அனைத்து விஷயங்களையும் இந்த வாட்ச் விளக்கமாய் சொல்லும். இதை உங்களுடைய ஸ்மார்ட் போனுடன் இணைத்துக் கொண்டு, தகவல்களை போனில் பார்க்கலாம். கடந்த ஒரு வாரம் எப்படி இருந்தீர்கள், கடந்த ஒரு மாதம் உங்களுடைய தூக்கம் எப்படி இருந்தது, சராசரியாய் எவ்வளவு நடந்தீர்கள் என அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம்.
இப்போது இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை வந்திருக்கிறது. கடந்த ஒலிம்பிக் விளையாட்டின் போது விசா நிறுவனம் இத்தகைய அணியும் நுட்ப பணம் பரிமாற்றத்தை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தது. அதன் படி ஒலிம்பிக் நிகழ்ச்சிக்குப் போகும் மக்கள் அங்கே மிக எளிய வகையில் பணப் பரிவர்த்தனை செய்ய வழி பிறந்தது.
மக்கள் அணிகின்ற கிளவுஸ் பணம் செலுத்தும் சாதனமாக பயன்படுத்தப்பட்டது. பிரிபெய்ட் பணத்தை செலுத்துவதற்குரிய வகையில் அந்த கிளவுஸ் வடிவமைக்கப்பட்டது.
அங்கே அப்போது அதிக குளிர் நிலவியதால், மக்கள் கிளவுஸ் அணிவது தேவையாய் இருந்தது. அதையே மீடியமாகப் பயன்படுத்தி இந்த வியரபிள் டெக்னாலஜி வெற்றிப் பயணத்தைத் தொடங்கியது. கிளவுஸ் பயன்படுத்த விரும்பாதவர்களுக்கு வியரபிள் ஸ்டிக்கர் ஒன்றையும் அறிமுகப் படுத்தினார்கள். அந்த ஸ்டிக்கரை பையிலோ, துணியிலோ எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக்கொண்டு பயன்படுத்தலாம் ! வெள்ளோட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் இப்போது முழுமையாக அத்தகைய அணியும் நுட்பத்தை சந்தைப்படுத்தும் முயற்சியில் விசா இறங்கியிருக்கிறது.
வியரபிள் பேய்மென்ட் முறை என்பது மிக எளிமையானது. வழக்கமாக கார்டை எடுத்து, மெஷினில் சொருகி, ரகசிய நம்பர் கொடுத்து, ஓகே சொல்லும் போது பணம் நம்மிடமிருந்து அடுத்த நபருக்குச் செல்லும். இந்த வியரபிள் வகையில் நாம் வெறுமனே அந்த கருவியை கையிலோ விரலிலோ கழுத்திலோ அணிந்து கொண்டு, அதைக் கொண்டு மெல்ல தட்டினால் போதும். பண பரிவர்த்தனை ஓவர் !
தொழில்நுடம் நமது கையிலிருக்கும் கருவியிலிருந்து தகவலை கடத்தி வங்கியின் தகவல்களோடு ஒப்பிட்டுப்பார்த்து தேவையான பணத்தை அனுமதிக்கிறது அல்லது நிராகரிக்கிறது.
விசா நிறுவனம் கிரீஸ் நாட்டு தேசிய வங்கியுடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்துக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. விரலில் அணியும் மோதிரம், கைகளில் அணியும் பிரேஸ்லெட் இவற்றின் மூலமாக பேமென்ட் செலுத்தும் முறையை முதல் கட்டமாக சந்தைப்படுத்துகிறார்கள்.
பணப் பரிவர்த்தனைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதால், இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அவசியமாகின்றன என்கிறார் விசா நிறுவன ஐரோப்பிய பிரிவின் தலைவர் “மைக் லெம்பர்கர்” அப்படியே அவர்கள் ஸ்பெயின் நாட்டின் கெயிக்ஸா வங்கியோடு தொடர்பு வைத்துக் கொண்டு, வாட்ச் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அது இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பமாகும் என நம்பப்படுகிறது.
இன்னும் சில ஆண்டுகளில் அணியும் தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் நுழைந்து விடும் என்பது சர்வ நிச்சயம். இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், பிக் டேட்டா, ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், மெஷின் லேர்னிங், பிரையின் மேப்பிங் போன்ற தொழில்நுட்பங்களின் கலவையாக எதிர்கால அணியும் நுட்பம் உருவாகும் என்பதே தொழில்நுட்பத்தின் கணிப்பாகும்.
உதாரணமாக கூகிள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடிகள் எதிர்காலத்தில் பரவலாகும். இது ஹாலிவுட் சினிமா போல, இன்டெர்நெட் ஆஃப் திங்கஸ், என்.எஃப்.சி போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பார்க்கும் இடத்தில் இருக்கும் தகவல்களையெல்லாம் புரிந்து கொள்ள பயன்படும். பார்வையில்லாதவர்கள் இதை அணிந்து கொண்டு சாதாரண நபரைப் போல நடமாடும் காலம் உருவாகும்.
அணிகின்ற பாதணி உங்களுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லலாம், உங்களிடம் இருக்கும் அத்தனை கருவிகளுக்கும் தேவையான சார்ஜை இது தனது அசைவின் மூலம் தந்து செல்லலாம். நாம் அணியும் ஆடையே ஒரு ஜிபிஎஸ் மேப்பாக நமக்கு உதவலாம். அணிகின்ற கான்டாக்ட் லென்ஸ் மூலமாக பண பரிவர்த்தனைகள் நடக்கும் காலம் உருவாகலாம்.
இப்படி எங்கும் நீக்கமற நிறையப்போகும் அணியும் தொழில்நுட்பத்தின் இன்றைய வளர்ச்சி இந்த பணப் பரிவர்த்தனை ! அது நிச்சயம் அடுத்தடுத்த தளங்களுக்கு அசுரப் பாய்ச்சல் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
– வெற்றி மைந்தன்
2,383 total views, 3 views today