சுழிபுரம் – காட்டுபுலத்தில் ஒரு நாள்
வல்லமையின் ஜந்தாண்டு, நிறைவையொட்டி நினைவில் நீங்கா நிகழ்வாய் நிறைவாண்டைக் கொண்டாடி மகிழ மக்களோடு மக்களாய் வீடு வீடாய் பிடியரிசி வாங்கிச் சேர்த்து ஒன்றாய் இணைந்து கூட்டாஞ்சோறு சமைத்துண்டு பசியாறிப் பறைந்து பேசி கலைகளால் கதைசொல்லி அவர்களின் கதை கேட்டு,இன்னல்கள் மறந்து கலந்துரையாடி கவலைகள் நீங்க வழிதேட, யாவரும் ஒன்றாய் கரம்கோர்த்த அந்நாள் பற்றி என்னுள்ளத்திலிருந்து………….
வளைந்து நெளிந்த பாதை வழியே விழுந்து, பாய்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் பேருந்தின் பின்னிருக்கையிலே நானும் ஒருவனாய் கிராமத்தின் அழகினை இரசித்தவண்ணம் சென்று கொண்டிருந்தேன். வீதியோரக் கரும் பனைகள், வேலிகளாய் பூவரசு மரங்கள், பனை யோலைகளாலும், பனம் மட்டைகளாலும் நேர்த்தியாக அடைக்கப்பட்ட வேலிகளும், தரவைகளிலே மேய்ந்து கொண்டிருந்த செம்மறி ஆடுகளும், மாடுகளும், ஆங்காங்கே பயிரிப்பட்டிருந்த வெங்காயம், மிளகாய்,கத்தரி, பாவற்காய் போன்ற பயிர்களும் கிராமத்தின் கட்டமைப்பையும், பொருளாதார நடவடிக்கைகளையும் எடுத்தியம்பின.
காலை 10.30 மணியளவில் காட்டுப்புலம் காளி கோவிலடியில் சென்று நின்றது பேருந்து. சமைப்பதற்கும், கலந்துரையாடுவதற்குமான ஏற்பாடுகள் ஏற்கனவே கிராமத்து இளைஞர்களால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. எதிர்பாராத அளவில் மழலைகள் பலர் குழுமியிருந்தனர். சிலர் விரைவாக ஓடியோடி வந்துகொண்டிருந்தனர் இன்னும் சிலர் தங்களுடைய தோழமைகளை கூட்டிக்கொண்டு வருவதற்காய் ஓடிச் சென்றனர். நாங்கள் அனைவரும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். ஒவ்வொரு குழுக்களுக்கும் தலைவர்களாய் அக்கிராமத்து சிறுவர்களே வழிகாட்டும் தலைமைகளாய் எம்மை வழிநடத்திச் சென்றார்கள்.
மணற்தரைப் பாதைகளும், தோட்டாத்துக்கூடாய் செல்லும் ஒற்றையடிப் பாதைகளும், வீட்டுக்கு வீடு காணப்படும் வேலிப் பொட்டுகளையும் நன்கறிந்த சிறுவர்கள் முன்செல்ல பறை முழங்கி, மேளங்கள் அடித்து நிகழ்வினை அறிவித்த வண்ணம் அவர்களைப் பின் தொடர்ந்தோம் நாம். வீடு வீடாய் சென்ற வேளை இன்முகத்தோடு வரவேற்று இல்லையென்று சொல்லாமல் அரிசி, வெங்காயம், மரக்கறியென சமையலுக்கான பொருட்கள் யாவும் தந்துதவினர் மக்கள். மாலைநேரம் நாடகங்களும், கலந்துரையாடலும் உள்ளதென செய்திகளும் பரிமாறப்பட்டன. வீட்டுக்கு வீடு வளர்க்கப்படுகின்ற நாய்களின் குணமறிந்து நாய்க்கடியிலிருந்தும் எம்மைக் காப்பாற்றினர் அக்கிராமத்துச் சிறார்கள்.
சேர்த்த பொருட்கள் யாவும் காளி கோவிலடியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தடிக்கு கொண்டுவரப்பட்டு வந்தவரும், ஊரவரும் சேர்ந்து சமையல் வேலைகளில் மும்முரமாய் ஈடுபடத் தொடங்கினர். மறுபக்கம் சிறுவர்களோடு விளையாடியும், அவர்களை மகிழ்வூட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் “புதிய வாழ்வுக்கான அரங்கப் பயணம்” எனும் அடிநாதத்தோடு செயற்பட்டுக்கொண்டிருக்கும் செம்முகம் ஆற்றுகைக் குழுவினுடைய கலைஞர்கள். ஏற்கனவே பெற்றுக்கொண்ட அனுபத்தோடு சிறுவர்களோடு அரங்க விளையாட்டுக்கள், கதைகூறல், பாட்டு பாடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
சிறுவர்களும் தங்களுடைய திறன்களை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது பல சிறுவர்கள் தயக்கமின்றி முன்வந்து தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். ஆடிப் பாடி, விளையாடிக் களைத்த சிறுவர்களுக்கும் எமக்கும் பசிக்கத் தொடங்கியபோதே கூட்டாஞ்சோறு சமையல் முடிந்து சாப்பிட வருமாறு மகிழ்வான அழைப்பும் எமக்கு வந்து சேர்ந்தது.
சிறுவர்க்கு முதல் பந்தி பெரியவர்க்கு இரண்டாவது பந்தியென நான்கு, ஜந்து பந்திகள் இருத்தி கூட்டாஞ்சோறு பரிமாறப்பட்டது. அனைவரும் கூடி ஒன்றாய் உண்ட பொழுதில் கண்ட மகிழ்வுக்கு எல்லையில்லை. இறுதிப் பந்தியில் உணவுப்பரிமாற்றம் நடக்கும்போதே காளி கோவிலடி ஆலமரத்தின் கீழே மாலை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் ஆரவாரமாய் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
வல்லமையின் “சமத்துவம்” பாடலோடு மாலை நிகழ்வுகள் ஆல மரத்தடியில் மகிழ்வுடனே ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து “ஆளுமைத்துளி” சிறுவர்களின் நாடகம் அரங்கேற்றப்பட்டு கலந்துரையாடலும் நடைபெற்றது. தொடர்ந்து செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் “புதிய வாழ்வு” என்னும் தெருவெளி நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டது.
குடும்ப வன்முறை, இளவயதுத் திருமணம், பாடசாலை இடைவிலகல், மது பாவனை, லீசிங் பிரச்சினை போன்ற சமூப் பிரச்சினைகள் பலவற்றை இவ் ஆற்றுகையினூடாக மக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. தொடர்ந்து இப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக மக்கள் தங்களுடைய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
எங்களுடைய நாடகங்கள் நிறைவடைந்த பின்னர் காட்டுப்புலத்தில் வாழும் சிறுவர்களின் இரு நாடகங்கள் ஆற்றுகை செய்யப்பட்டது. போதியளவு பயிற்சி இன்றிய போதும் அவர்களுடைய நடிப்பாற்றல் திறன் மற்றும் தங்களுடைய சமூகத்திலுள்ள பிரச்சினைகளை எடுத்துக்கூறிய விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. முன் வருதல், தயக்கமின்றி பிறருடன் கலந்துரையாடல், ஒற்றுமையுடன் செயற்படுதல், திறன்களை வெளிக்கொணர்வதற்கான களத்தினை சரியாகப் பயன்படுத்தலென சிறுவர்கள் தங்களுடைய பங்குபற்றுதலை மிகச் சிறப்பாக மேற் கொண்டனர். “தும்புத்தடி மிசின்” என்னும் நகைச்சுவை நாடகமும் அதனைத் தொடர்ந்து “போதையை ஒழிப்போம்” என்கின்ற சமூக நாடகத்தையும் ஆற்றுகை செய்தனர். நகைச்சுவையாகவும், கருத்தாழம் கொண்டதாகவும், உரைஞருக்கூடாக சம்பவங்களை எடுத்துக்கூறுவதாகவும், பொருத்தமான பாடல்களையும் சேர்த்தும் அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டனர். நாடகத்தின் நிறைவில் “வாழுவோம் வாழுவோம் வாழுவோம்
நலமாக நாமும் வாழுவோம்….” என்கின்ற இவர்களின் பாடலும் அதன் அர்த்தமும் அவர்களின் எதிர்பார்ப்பை எடுத்துரைத்தன.
அக்கிராமத்து மக்கள், இளைஞர்கள், சிறுவர்களென அனைவருக்கும் நன்றி கூறி நாமும் புறப்படத் தயாராகினோம் அப்போதே அன்றைய நிகழ்வுகளை ஒழுங்கமைத்த இளைஞர்கள் எங்களின் கரம்பற்றி கூறிய நன்றிகளும் நிகழ்வின் மன நிறைவும் சிறியளவிலேனும் மாற்றத்தை ஏற்படுத்துமென்ற நம்பிக்கையொளி பிறந்ததை உளமார உணர்த்தின. பேருந்து புறப்பட தயாராவதற்குள் ஓடி வந்த சிறுவர்களின் முகங்களில் புன்னகையும் புன்னகைக்குப் பின்னால் இவ்வாறு ஓர்நாள் மட்டுமா? நாங்கள் மகிழ்வாகவும் பாதுகாப்பாகவும் இருந்தோம் என்கின்ற ஏக்கமும் தொடர்ந்தும் இவர்களும், இவர்கள் போன்றவர்களும், இவ்வாறன நிகழ்வுகளும் நடக்குமா? என்ற கேள்வி அப் பிஞ்சுகளின் மனதில் இருந்துகொண்டே இருக்கும் என்பதை ஊகித்துக்கொண்டவாறே அவர்களுக்கு கையசைத்த வண்ணம் மீண்டும் பேருந்தின் பின்னிருக்கையிலிருந்து புறப்படத் தயாரானேன்.
இவ்வாறான பயணங்கள் காட்டுப்புலத்திற்கு மட்டுமல்ல கட்டவிழ்ந்து செல்கின்ற எங்களுடை அனைத்துக் கிராமங்களுக்கும் தேவைப்பாடுடை யதாகவே உள்ளதென்பது நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு அறிந்திருப்பினும் மக்களோடு மக்களாய் நின்று பணியாற்றத் தயாரில்லை. இவ்வாறான சமூக நலன் சார் செயற்பாடுகளின் தாற்பரியம் அன்றைய தினம் அங்கு பொழுதினைச் செலவழித்தவர்களுக்கு நன்கு புரிந்திருக்கும். எனவே இவ்வாறான பயணங்களுக்கு அவர்கள் தங்களுடைய உறவுகளையும், நண்பர்களையும் அணிதிரட்டிக் கொள்வதனூடாக இவ்வாறான பயணங்களை பலப்படுத்துவதோடு பன்முகப் படுத்தவும் முடியுமானதாக இருக்கும்.
மக்களோடு மக்களாய், சமூகத்தோடு சமூகமாய் ஒவ்வொரு மனிதனும் பயணிக்கத் தயாரெனில் புதிய பாதைகள் திறக்கப்படும். இன்னல்கள் இல்லாதொழிந்து நிம்மதியாய் வாழலாம் இணைந்து செல்ல கரம் கொடு தோழனே!
இப்படியும் இளைஞர்களா?
பேராசிரியர் சி.மெனகுரு இந்த நிகழ்வு பற்றி முகம்மலர்ந்து முகப்புத்தகத்தில் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்.
இப்படியும் இளைஞர்களா? எத்தனை மகிழ்ச்சி.எங்கோ சென்று கொண்டிருக்கும் இன்றைய இளைஞர் மத்தியில் எதிர்த் திசையில் நம்பிக்கை யோடு பயணிக்கும் இவர்களைக்காண நம்பிக்கை பிறக்கிறது.சவால்களை எதிர்கொண்டு முன்செல்லும் ஒரு கூட்டம் வரலாற்றோட்டத்தில் எப்போதும் காணப்படுகிறது.வாழ்த்துக்கள் இளைஞர்களே (28-08-2018)
யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுப்புலம் ( 25.06.2018 ) மாலை சிறுமியின் சடலம் ஒன்று கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவநேஸ்வரன் றெஜினா (வயது 6 ) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் குறித்த மாணவி சிவநேஸ்வரன் றெஜினா பாலியல் துன்புறுத்தல்களுக்கு பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்டு புலம் நோக்கிய நமது இளைஞர்களின் இன்றைய பணி போற்த்தக்கது.
.இதனை முழுமையாக வாசித்த
அனைவருக்கும் நன்றி நின்றி நன்றி
தாயகத்தில்; இளைஞர்கள் இப்படியும் உள்ளனர்
என்பது மகிழ்வான செய்தியல்லவா
2,785 total views, 3 views today
1 thought on “சுழிபுரம் – காட்டுபுலத்தில் ஒரு நாள்”