சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை
இலங்கைத் தமிழர்களின் படைப்பு வள்ளல் செ.கணேசலிங்கம் என்பேன். யாழ்ப்பாணத்திலிருந்து கணேசலிங்கம் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து சென்றார்.அங்கே அவர் பட்ட வாழ்வியல் துயரங்கள் அதிகமானது. அத்துயரங்களுக்குள் நீராடி இலக்கியம் படைத்து . இந்துப் பத்திரிகையில் கௌரவ பதவி வரை சென்றார். இலங்கைத் தமிழர்கள் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டிய உயர்ந்த படைப்பாளி. எனது பதின்ம வயதுகளில் தேடித்தேடிச் செ.கணேசலிங்கம்,எம்.எஸ்.உதயமூர்த்தி என்று படிப்பேன். உதயமூர்த்தி எனக்குள் தன்னம்பிக்கையை விதைக்க கணேசலிங்கம் உலகை ஞானக் கண்களால் பார்க்க அறிவூட்டினார்.
“சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை”என்னும்
தலைப்பிட்ட நூலைப் பார்த்ததும்,”சூரியன் கிழக்கில் உதிக்கும்” என்றுதானே பாடசாலையில் சொல்லித் தந்தார்கள்,இவர் ஏன் இப்படித் தலைப்பிட்டுள்ளார் எனும் எண்ணத்துடன் நூல் வாசிக்க ஆரம்பித்தேன்,நான் அறிந்திருந்தது தவறு,இவர் தலைப்பிட்டிருந்ததே உண்மை என்று உணர்ந்தேன்.ஆம்,சூரியன் எந்தப்பக்கத்திலும்
உதிப்பதில்லை,அது தன்னிடத்தில்தான் இருக்கிறது,பூமிதான் சூரியனையும்,தன்னையும் சுற்றுகிறது அதனால்தான் சூரியன் கிழக்கில் உதிப்பதாகத் தோன்றுகிறது.சொல்லித்தரும் மேலோட்டமான ,கற்றுத் தந்த பொய்மைகளைக் கேள்வி கேட்கவும் ,புறக் கண்ணால் அன்றி அகக் கண்ணால் உலகைப் பார்க்கவும் எனக்குக் கற்றுத் தந்த ஒரே வரி”சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை”,அவரே என் முதன்மைக் குருவான செ.கணேசலிங்கம்.
இன்றைய சந்ததி எமது முதுசமாக விளங்கும் செ.கணேசலிங்கம் போன்றோரை வாழும் போதே கொண்டாட வேண்டும்.சாதித்துச் சாதித்து சரித்திரத்தை நிரப்பி நிற்கும் வரலாற்றுச் சிற்பி அவர்.
செ.கணேசலிங்கம் படைத்த “சடங்கு” (1966)நாவல் யாழ்ப்பாணத்துச் சடங்குமுறைகளைப் பதிவு செய்த அற்புத நாவல்.அவரின் “செவ்வானம்” (1967)நாவல் தமிழக பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
இவரது “நீண்ட பயணம்” நாவல்தான் 1965இல் வெளிவந்த முதலாவது புதினம். நீண்ட பயணம்,சடங்கு,செவ்வானம் ஆகிய மூன்று நாவல்களும் இருபதாம் நூற்றாண்டில் இலங்கையில் வெளிவந்த தலையாய நூல்கள் என்று உரைக்கின்றனர் பேராசிரியர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, செ.யோகராசா ஆகியோர்.
தொடரும் செ.கணேசலிங்கம் படைப்புகள் ஐம்பதையும் தாண்டுகிறது.
43 நாவல்கள்,சிறுகதைகள்,கட்டுரைகள் என்று அறிவும்,பதிவுமாய் கொட்டிக்கிடக்கின்றன,இந்த இலங்கைப் படைப்பாளியின் அறிவின் விருட்சங்கள்.
குந்தவிக்குக் கடிதங்கள்,குமரனுக்குக் கடிதங்கள்,மான்விழிக்குக் கடிதங்கள் என்றுபிரிந்திருந்த ஒரு தந்தை தூரேயிருந்து தனது பிள்ளைகளுக்கு உலகை ஞானக்கண்ணோடுபார்க்கக் கற்றுக்கொடுத்துப் படைக்கப்பட்ட கடிதங்களே நூலுருப்பெற்று பின்னாளில் என்னைப்போன்றசிறுவர்களும் அந்த நாட்களில் தேடிப் படிக்கும் பாடங்களாயின,ஆனால் நான் வாசித்து இலக்கியத்தில்அறிந்து வைத்திருந்த குந்தவி அக்கா பின்னொருநாளில் எனக்கும்,எனது மகனுக்கும் தேனீர் தயாரித்துத் தந்து,அவர் என் மகனோடு விளையாட,நான் எனது ஞானக்குருவான எழுத்தாளர் செ.கணேசலிங்கம் அவர்களுடன் அவர் இல்லத்தில் நீண்ட நேரம் உரையாடி மகிழ ஒரு நாள் கிடைத்ததை மகிழ்ந்து சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அவரை அன்புடன் விடைபெறும் போது பாலுமகேந்திரா நினைவுகள் எனும் நூலை அன்பளிப்பாக எனக்கு வழங்கினார். அங்கே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கலைச்சாதனை புரிந்த இருவரின் வரலாறு அறிவோடும்,அன்போடும் பதிவு செய்யப்பட்டு படிப்போரை வியந்து பார்க்க வைக்கிறது. பாலுமகேந்திராவின் ஆரம்பகாலசினிமா முயற்சிகளில் முயன்று முன்னின்று வெற்றிகளை ஈட்டிக் கொள்ள செ.கணேசலிங்கம் அவர்களின் பங்களிப்பும் போற்றுதலுக்குரியது.-கல்லாறு சதீஷ்- 0041798000100
2,779 total views, 4 views today