சிலப்பதிகாரத்தில் ஏறுதழுவுதல் ஏழு காளையரும் ! ஏழு கன்னியரும் !

தமிழ் வரலாற்றில் குடிமக்கள் காப்பியம் என்றும் புரட்சிக் காப்பியம் என்றும் கொண்டாடப்படுவது “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமே !” – சிலபதிகரம் , சிலம்பு மட்டும் இல்லையெனில் தமிழர் வரலாற்றில் ஒருமிகப்பெரிய வெற்றிடம் உருவாகியிருக்கும் என்பது திண்ணம். மூன்று நாட்டிற்கு முறையே மூன்று காண்டங்கள் வைத்து மூவேந்தர்களை சமமாய் புகழ்ந்து முத்தமிழ் காப்பியமாய் விளங்கும் இளங்கோ தந்த செல்வம் இந்த சிலம்பு.

தமிழரின் கலைக்களஞ்சியமாய் விளங்கும்சிலம்பு “ஏறு தழுவுதலை” பற்றி விரிவாய் உரைக்கிறது. மதுரைக் காண்டத்தின் ஆய்ச்சியர் குரவையில் வரும் மிக அழகான பகுதி !
கண்ணகியை ஆயர் குல மாதிரியின் வீட்டில் விட்டுவிட்டு சிலம்பை விற்க கோவலன் சென்று விடுகிறான், இடைப்பட்ட காலத்தில் ஆயர் குடியிருப்பில் தீ நிமித்தங்கள் தோன்ற குரவை ஆடி கோபாலனை ஏத்த முடிவெடுக்கின்றனர்.

கறவைகள் கன்றுகளின் துயர் நீங்க முன்பு ஆயர் பாடியில் கண்ணன் ஆடிய சரிதத்தை ஆடுவோம் என்று மாதரி தன் மகளிடம் கூறுகிறாள். அதற்கு 7 பெண்களை அழைக்கிறாள் அவர்களின் சிறப்பையும் குறிக்கிறாள். இந்த ஏழு பெண்களும் தமக்கென ஒரு காளையினை வளர்த்து வருபவர்கள், வலிமையான இந்த காளைகளைஅடக்குபவர்களுக்கே வாழ்க்கைப் படுவோம் என உறுதி பூண்டவர்கள், காளையின் கொம்பிற்கு அஞ்சுவானை மறுபிறப்பிலும்ஆயர் பெண் விரும்பி ஏற்க மாட்டாள் என்னும் கலித்தொகை தரும் செய்தி இங்கு நோக்கதக்கது.
“ஆயர் பாடியில், எரு மன்றத்து,
மாயவனுடன் தம்முன் ஆடிய
வால சரிதை நாடகங்களில்,
வேல் நெடுங் கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்’ என்றாள்”

முதல் பெண்:
காரி கதனஞ்சான் பாய்ந்தானைக்காமுறுமிவ்
வேரி மலர்க்கோதை யாள் ; சுட்டு
முதல் பெண் கருமையான காளையை வளர்த்து வருகிறாள், இதன் சீற்றத்தை அடக்குபவர்களுக்கே தேன் நிறைந்த மலர்மாலையை சூடிய முதல் பெண் ஆட்படுவாள்.

இரண்டாம் பெண்:
நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப்
பொற்றொடி மாதராள் தோள் ;
நெற்றியில் சிவந்த சுட்டியை உடைய காளையை கொண்டவள் இரண்டாம் பெண், இதனை அடக்குபவர்களுக்கே பொன் வளைஅணிந்த இவளது தோள்கள்.

மூன்றாம் பெண்:
மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம
முல்லையம் பூங்குழல் தான் ;
முல்லை மலரை சூடிய இந்த பெண் வலிமை மிக்க எருதினை வளர்த்து வருகிறாள் இதனைஅடக்குபவனையே இவள் மணம் புரிவாள்.

நான்காம் பெண்:
நுண்பொறி வெள்ளை யடர்த்தாற்கேயாகுமிப்
பெண்கொடி மாதர்தன் தோள் ;
நுண்ணிய புள்ளிகளை உடைய வெள்ளை எருதினை கொடி போன்ற நான்காவது பெண் வளர்த்து வருகிறாள், இவளது தோள்கள் இக்காளையினை அடக்குபவர்களுக்கே உரியன.

ஐந்தாவது பெண்:
பொற்பொறி வெள்ளை யடர்த்தாற்கேயாகுமிந்
நற்கொடி மென்முலை தான் ;
அழகிய இம் மறை ஏற்றினை அடக்கியோனுக்கே இவ்வழகிய கொடிபோன்றாளுடைய மெல்லிய முலைகள் உரியன வாகும்.

ஆறாவது பெண்:
வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியளிக
கொன்றையம் பூங்குழ லாள் ;
சீரிய வெற்றி தரும் காளையை ஆறாவது பெண் வளர்க்கிறாள், இதனைஅடக்குபவர்களுக்கே கொன்றை போல் கூந்தல் உடைய இப்பெண் சொந்தம்.

ஏழாவது பெண்:
தூநிற வெள்ளை அடர்த்தாற் குரியளிப
பூவைப் புதுமல ராள் ;

தூய வெள்ளை நிற முடைய இவ் வேற்றின் சீற்றத்தினைக் கெடுத்தவனுக்கு இக் காயாம் பூப்போலும் நிறத்தினையுடையாள் மனைவி ஆவாள்.
இவ்வாறு இந்த ஏழு பெண்களையும் அவர்கள் வளர்த்துவரும் காளைகள் குறித்தும் மாதரி தன் மகள் ஐயைக்கு கூறுகிறாள்.
கண்ணன் ஏழு காளைகளை அடக்கி தன் முறைப்பெண்ணான நப்பின்னையை மணந்தான் என்று தொன்மம் கூறுகிறது, ஆயர்குலத்தவனான கண்ணன் அவர்தம் வீரவிளையாட்டும் ஏறு தழுவதலையும் விளையாடினான் என்று இலக்கியங்கள் கூறுவது பொருத்தமே. கறவைகள் திரள் காத்த கார்வண்ணன் என்றும், குன்றம் ஏந்தி ஆநிரை காத்தவன் என்றும், புகழப்பெறும் கண்ணனை விடவும், உயிர்கட்கு தீங்கு செய்தல் பாவம் என்றுரைக்கும் சமணக் கொள்கைகள் கொண்ட இளங்கோவை விடவும் யாரும் ஏறுதழுவுதட்கு சான்று பகர முடியாது. “ஏறு தழுவுதல்” ஒரு வீர விளையாட்டே அன்றி உயிர்களை துன்புறுத்தி விளையாடும் செயலன்று என்பது தெளிவோம் !

— தனசேகர் பிரபாகரன்

2,006 total views, 5 views today

1 thought on “சிலப்பதிகாரத்தில் ஏறுதழுவுதல் ஏழு காளையரும் ! ஏழு கன்னியரும் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *