தட்டுங்கள் திறக்கப்படும்
பைபிளில் திருப்பாடல்கள் எனும் ஒரு நூல் உண்டு. அதில் தாவீது மன்னன் எழுதிய ஒரு திருப்பாடலின் சில வரிகள் இவை.
வேற்றிடங்களில் வாழும்
ஆயிரம் நாள்களினும்
உம் கோவில் முற்றங்களில் தங்கும்
ஒருநாளே மேலானது;
பொல்லாரின் கூடாரங்களில்
குடியிருப்பதினும்,
என் கடவுளது இல்லத்தின்
வாயிற்காவலனாய் இருப்பதே
இனிமையானது.
( திருப்பாடல்கள் 84:10 )
ஆயிரம் நாட்கள் வேறு இடங்களில் வாழ்வதை விட இறைவனுடைய ஆலயத்தின் முற்றங்களில் ஒரு நாள் வாழ்வதே சிறந்தது என்கிறார் அவர்.
எது நமது வாழ்க்கையில் முதன்மையானதாய் இருக்கிறது என்பதைக் கொண்டு நமது வாழ்க்கை எப்படி அமைகிறது, யாருக்குப் பிரியமானதாய் அமைகிறது என்பதைக் கண்டுகொள்ளலாம்.
எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதல்ல, எப்படி வாழ்ந்தோம் என்பதே கவனிக்க வேண்டியது.
இறைவனுடைய ஆலயத்தின் உள்ளே இருப்பதல்ல, அவரது ஆலயத்தின் முற்றங்களில் இருப்பதே கூட மகிழ்ச்சியானதாய் இருக்கிறது இறைவனை உளமாரத் தேடுபவர்களுக்கு.
பைபிள் மனித உடலை இறைவன் குடிகொள்ளும் ஆலயமாய் சித்தரிக்கிறது. இறைவன் குடிகொண்டிருக்கும் ஆலயத்தை புனிதமாய்க் காத்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு உண்டு. உள்ளம் புனிதமாய் இருக்கும் போது தான், உள்ளத்திலிருந்து வெளிவருகின்ற சிந்தனைகளும், செயல்களும் புனிதமாய் இருக்கும்.
மூன்று ஆண்டுகள் வெளியிடத்தில் வாழவேண்டுமா ? ஒரு நாள் இறைவனின் வாயில்களில் வாழவேண்டுமா என்று கேட்டால் என்ன சொல்வோம் ? மூன்றாண்டு வேண்டுமெனக் கேட்போம் என்றே உள்மனது சொல்கிறது. ஏனெனில் நமது சிந்தனைகள் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் கட்டமைக்கப்படுகிறது.
எவ்வளவு பணம், எத்தனை வீடுகள், எத்தனை கார், எவ்வளவு சொத்து என்பது தான் இங்கே அளவீடுகள். அதிகமாய் இருக்க வேண்டும் எனும் அவஸ்தையும் தேடலுமே வாழ்க்கையை அலைக்கழிக்கின்றன.
நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு பணம் தேவையென நிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறோம். நிம்மதி தருபவரை உதறிவிட்டு, நிம்மதியை வேறெங்கோ தேடிக்கொண்டிருக்கிறோம்.
இங்கே தாவீது மன்னன், கோயிலின் வாயில்காவலனாக தனிமையில் இருப்பதே போதும் என்கிறார். நமது வாழ்க்கையில் நமது தேடல்கள் நண்பர்களின் கூடாரத்தில் குடியிருப்பதாகவே இருக்கிறது. கேளிக்கைக் கொண்டாட்டங்களில் இணைந்திருக்கவே மனம் விரும்புகிறது.
எது எனது வாழ்க்கையில் முக்கியமானதாய் இருக்கிறது ? எனது தேடல் இறைவனின் அருகாமையா, உலகத்தின் வசீகரமா ?
எனது தேடல் உயிர்வாழ்தலின் ஆசையா ? இறையோடு வாழ்தலின் ஆசையா ?
எனது விருப்பம் பொல்லாரின் உறைவிடங்களில் கிடைக்கும் உல்லாச நிமிடங்களா ? அல்லது ஆலய வாயிலில் இருக்கும் தூங்கா நிமிடங்களா ?
எனது வாழ்க்கை மனிதநேயத்தைச் சார்ந்திருக்கிறதா இல்லை சிற்றின்பக் கொண்டாட்டங்களில் சிக்கிக் கிடக்கிறதா ? வறுமையின் வாசலில் படுத்திருக்கும் ஏழையோடு என்னை அடையாளப்படுத்துகிறேனா ? அல்லது அந்த ஏழையைக் கண்டு சற்றும் மனம் இரங்காத செல்வந்தனோடு என்னை அடையாளப்படுத்துகிறேனா ?
எது எனது வாழ்க்கையின் முதலிடம் பிடிக்கிறது ? சிந்திப்போம். வாழ்க்கையின் முதன்மைகளை இறைவனை மையமாய்க் கொண்டு மாற்றியமைப்போம்.
— சேவியர்
1,006 total views, 1 views today
1 thought on “தட்டுங்கள் திறக்கப்படும்”