வெள்ளை தாமரை பூவில் மட்டுமல்லாது வேறு எங்கு எல்லாம் சரஸ்வதி தேவி வீற்று இருக்கிறாள்
எதற்குள்ளும் பொருந்த கூடியவரும், எதற்குள்ளும் அடக்க முடியாதவருமாக யோக நிலையில் வாழ்ந்து ,அந்நிலையை தன் தமிழில் செதுக்கி சென்ற சித்த புருஷனை நினைக்காத நம் தமிழர் விழாக்கள் இருக்க முடியாது. அந்த வகையில் இம்மாதத்தின் சிறப்பாய் அமையும் நவராத்திரி காலத்திற்கு உகந்த முத்தேவிகளையும் போற்றி பணிந்த அவர் தமிழை நினைக்காது இருக்கலாமோ ?
பள்ளி செல்லும் மாணவர்கள் கல்வி சிறக்க சரஸ்வதிக்கு விரதம் இருந்து , சகலகலா வல்லி மாலை பாடல் பத்தும் இசைத்து வழிபடுவது பல்லாண்டு வழக்கம். ஆனால் பொருள் உணராது எதை படித்தும் பயன் இருக்க வாய்ப்பில்லை. இலகு தமிழில் சரஸ்வதி தேவியின் புகழை பத்து பாடல்களில் நமக்காய் வடித்து கொடுத்திருக்கிறார் பாரதி.
இந்த பாடலின் அழகு என்னவென்றால் வெள்ளை தாமரை பூவில் மட்டுமல்லாது வேறு எங்கெல்லாம் சரஸ்வதி தேவி வீற்று இருக்கிறாள் என்று தன் கற்பனையை விரிக்கிறார்.
வீணை எழுப்புகின்ற நாதத்தில் கலந்திருக்கிறாள். மிகுந்த இனிமையும் இன்பமும் தரவல்ல பாடல்களை இயற்றுகின்ற கவிஞர்களின் இதயத்தில் கொலுவிருப்பாள்.மெய்ப்பொருளை ஆராய்ந்து தரும் வேதத்தின் உள் இருந்து பிரகாசிப்பாள். மனம் மாசு இல்லாதா முனிவர்கள் கூறுகின்ற அருள் வாசகங்களில் அர்த்தம் ஆவாள்.
இனிய குரல் கொண்ட பெண்களின் பாடல்களில் பொருந்தி இருப்பாள். குழந்தைகள் பேசுகின்ற மழலையில் இருப்பாள். பாடல் இசைக்கும் குயிலின் குரலிலும் , இனிய மொழி பேசும் கிளிகளின் நாவிலும் இருப்பாள். இவற்றை தவிர குற்றம் குறை இல்லாத ஓவியங்கள், கோபுரம், ஆலயங்களின் வேலைப்பாடுகளில் உள்ள அழகிலும் குடியிருப்பாள். மொத்தத்தில் இனிமையான எல்லாவற்றிலும் சரஸவதியின் இருப்பை உணர்கிறார் பாரதி.
கலைமகளின் புகழை மேலும் சொல்லுகையில், இதர தெய்வங்களை யெல்லாம் நாம் அறிந்து கொள்ளும் படி செய்கின்ற கடவுள். அறிவு என்னும் அரிய விடயத்தை நமக்குள் தருவதால் , நமக்கு தீமை செய்வோரை நாம் உணரும் படி செய்து அவற்றிலிருந்து நம்மை தடுத்து நிறுத்தும் கடவுளும் ஆகிறாள்.
“உய்வம் என்ற கருத்துடையோர்கள்
உயிருனுக்குயிர் ஆகிய தெய்வம் “
மெய்ஞ்ஞான வழியில் உயர் நிலையை அடைய வேண்டும் என்று எண்ணம்
கொண்ட உயிர்களுக்கு உயிராகி இருந்து வழி நடத்தும் தெய்வம். தெய்வங்களிற்கு எல்லாம் தெய்வம் என்று புகழ்ந்து பணிகிறார்.
உதட்டளவில் வேத மந்திரங்களை உச்சரித்து , ஒன்றன்மீது ஒன்றாய் புத்தகங்களை அடுக்கி வைத்து சந்தனம் தடவி பூக்கள் வீசி செய்யும் சாத்திரம் எல்லாம் சரஸ்வதி தேவியை வழிபடுக்கும் முறை அன்று.
ஒவ்வொரு வீட்டிலும் கல்வி அறிவையும், காலை அறிவையும் வளர்த்திட வேண்டும். ஒவ்வொரு வீதியிலும் இரண்டொரு பள்ளிக்கூடங்களை அமைக்க வேண்டும். அது மட்டும் இன்றி தேடி கல்வியை பயில எண்ணம் இல்லாத ஊர் இருப்பின் அவை இருந்தும் வீண் , தீக்கு இரையாக்குவோம் . இதுவே அமிர்தம் போன்ற அன்னை சரஸ்வதியின் அன்பினையும் அருளினையும் பெற வழி என்கிறார்.
இது அத்தனையும் தாண்டி ஒரு அர்த்தமுள்ள கருத்தை நம் ஆழ் மனதோடு பதித்து விட்டு செல்கிறார்.
எத்தனையோ மேலான அற செயல்களையும் தர்மங்களையும் செய்வதிலும் பார்க்க கோடி மடங்கு அதிக நற்பயன் தரக்கூடியது ஓர் ஏழை மாணவனுக்கு படிப்பு அறிவை புகட்டுவது. ஆதலால் பாரதியின் சிந்தனையை நம்மால் இயன்றளவு செயல்படுத்த விழைவதோடு மட்டும் அன்றி நம் அடுத்த சந்ததிக்கும் புகட்ட கூடிய சந்தர்ப்பமாக நவராத்ரி காலம் அமையும் என்ற நம்பிக்கையில் , வாசகர்கள் ஓவரொருவரும் ஒரு ஏழை குழந்தைக்காவது கல்வி பெறுவதற்கான சிறு உதவி செய்தாலும் எத்தனையோ சமுதாய மாற்றங்களை கொண்டு வரலாம் என்ற பேராவாவினால் பாரதி அடியேனும் அன்பு விண்ணப்பத்தை உங்கள் மனங்களில் ஏற்றி செல்கிறேன்.
2,111 total views, 1 views today