கொழும்புவில் எழுச்சியுடன் முருகபக்தி மாநாடு

சர்வதேச மட்டத்தில் மலேசியா திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் ஏற்பாட்டிலான நான்காவது முருகபக்தி மாநாடு ,லங்கையின் தலைநகர் கொழும்பில் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் மூன்று தினங்கள் பெரும் எழுச்சியுடனும் பக்தி பூர்வமாகவும் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் புகழை உலகெங்கும் எடுத்துக் கூறும் வகையில் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நடத்தப்பட்டுவரும் முருகபக்தி மாநாட்டின் தொடரில் நான்காவது மாநாடு கொழும்பில் நடத்தப்பட்டது.

மலேசியா பெட்டாலிங் ஜெயாவிலிருந்து மாநாடுகளை உலகெங்கும் நடத்திவரும் தவத்திரு பாலயோகி சுவாமிகளின் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடம் 2012 ஆம் ஆண்டில் முதலாவது முருகபக்தி மாநாட்டினை மலேசியாவில் நடத்தியது.
இரண்டாவது முருகபக்தி மாநாட்டை 2014 இல் சுவிற்சர்லாந்திலும் 2016 ஆம் ஆண்டு மூன்றாவது முருகபக்தி மாநாட்டை தென்னாபிரிக்காவிலும் சிறப்புற நடத்தியதோடல்லாமல் 2016 ஆம் ஆண்டு ஆவணி மாதம் ஏழாம் நாள் நடைபெற்ற மூன்றாவது முருகபக்தி மாநாட்டின் வைபவத்தில் மலேசியா திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் தவத்திரு பாலயோகி சுவாமிகளால் நான்காவது முருகபக்தி மாநாட்டினை இலங்கையில் இந்துமத அலுவல்கள் அமைச்சு பொறுப்பேற்று நடத்தும் வகையில் ஞானச் செங்கோல் கையளிக்கப்பட்டது.

இலங்கை இந்துமத அலுவல்கள் அமைச்சின் கீழியங்கும் இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த மாநாடு கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலய கலையரங்கில் இடம்பெற்றது.

புரவலரும் மாநாட்டுக்குழுவின் அருட்தலைவரும் மலேசியா திருமுருகன் திருவாக்கு திருபீட முதல்வருமாகிய தவத்திரு பாலயோகி சுவாமிகள் அவர்களும் இந்தியாவிலிருந்து திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சீர்வளர் சீர்ஸ்ரீ சிவஞான பால்ய சுவாமிகள் அவர்களும், சிரவணபுரம் கௌமார மடாலய மடாதிபதி முனைவர் தவத்திரு குமரகுருபரசுவாமிகள் அவர்களும், ஸ்ரீமத் போகர் பழனி ஆதீன சீர்வளர் சீர்சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் அவர்களும், இங்கையில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களும் அருளுரை வழங்கினர்

;.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் இந்து பண்பாட்டு நிதியத் தலைவருமான பேராசிரியர்சி.பத்மநாதன் மற்றும் பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள் கம்பவாரிதி ஜெயராஜ், கலாநிதி ஆறுதிருமுருகன், இந்திய பேராசிரியர் சோ.மீனாட்சிசுந்தரம்,முனைவர் சிவஸ்ரீ எஸ்.பி.சபாரத்தின சிவாச்சாரியார், பேராசிரியர்சிவகுமார், முதுமுனைவர் சக்திவேல் முருகனார் முதலானோரும் ,ம்மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

மேலும முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் சுவாமிகள் மனமுருகிப் பாடியருளிய திருப்புகழ்களில் கதிர்காமக்கந்தன் மீது பாடிய 14 திருப்புகழ்களைத்தாங்கிய இறுவட்டு; கதிர்காமக்கந்தன் ஆலயத்தில் முருகனின் பாதங்களில் வைக்கப்பட்டு ஆசி பெறப்பட்டபின் செங்காலன் சென்மார்க்கிறெத்தன் கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தலைவர் வே.கணேசகுமார், பொருளாளர் சதா அற்புதராஜா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. .சுவிற்சர்லாந்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது முருகபக்தி மாநாட்டின்போது இலங்கையின் ,புனர்வாழ்வுப்பணிக்கு 12 இலட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. மலேசியா திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் சார்பில் இந்த நிதிக்கான காசோலை இலங்கை இந்து பண்பாட்டு நிதியத்தின் பொறுப்பாளர்களிடம் மாநாட்டில் வைத்து கையளிக்கப்பட்டது.

— குகா

682 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *