கொழும்பு அரசியலில் “றோ”
கொழும்பு அரசியலை கடந்த சில வாரங்களாகக் கலக்கிவரும் ஜனாதிபதி மைத்திரி கொலை முயற்சி குறித்த சர்ச்சையில் அதிரடியான திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. தன்னைக் கொலை செய்ய முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் பின்னணியில் இந்தியாவின் புலனாய்வு நிறுவனமான “றோ” சம்பந்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக அறிவித்ததுதான் இந்தத் திருப்பம். அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
ஜனாதிபதி அவ்வாறு சொல்லவில்லை என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு பின்னர் கூறியிருந்த போதிலும், ஜனாதிபதி அவ்வாறு சொன்னார் என்பதை இச்செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றார்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டும் தான் அவ்வாறு சொல்லவில்லை என மைத்திரி கூறியிருக்கின்றார்.
செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்தான் மைத்திரி அதிரடியான இந்த அறிவித்தலை வெளியிட்டார். அன்று அமைச்சரவையில், என்னதான் நடந்தது என்பதை முதலில் பார்ப்போம்:
“அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்து இப்போது கொழும்பு துறைமுகத்தை இந்தியாவுக்கு கொடுத்தால் ஒரு அவசரத்துக்கு – போர்க்கால சூழ்நிலை ஒன்று ஏற்பட்டால் என்ன செய்வது? இந்தியப் பிரதமரிடம் இதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்… தேவைப்படின் இனியும் அதனை தெளிவுபடுத்தி சொல்வேன்…” என்று ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்த போதுதான் சர்ச்சை ஆரம்பமாகியது.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைக்கான கொள்கலன் தொகுதியை அமைப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் விவாதிக்கப்பட்ட போதே ஜனாதிபதி இப்படி அதிரடியாக கூறியிருக்கிறார்.. இந்த விடயம் தொடர்பில் இந்தியாவுடன் முன்னதாக ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை இந்தியாவிடம் கையளிக்க வேண்டுமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்கவில்லை.
“பிம்ஸ்டெக் மாநாட்டின் போது பிரதமர் மோடியை நான் சந்தித்தேன் .. அப்போது இதை விளக்கினேன் .. அவர் புரிந்துகொண்டார்..” என்று ஜனாதிபதி கூறிய கையோடு பிரதமர் இதனை மேலும் விளக்கி கூற முற்பட்டார்..
அப்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க இடையில் குறுக்கிட்டு தனது கருத்துக்களை சொல்ல முயன்றார் . அது பிரதமருக்கு கடுப்பை ஏற்படுத்தியது.“ஒரு பிரதமரின் உரைக்கு குறுக்கே பேசுவது சரியா? சற்று அமைதியாக இருங்கள்” என்று அவரை கடிந்து கொண்டார் ரணில்… எப்படியோ அமைச்சர் மலிக் சமரவிக்ரம இதில் சில விளக்கங்களை கூறினாலும் ஜனாதிபதி ஏற்கவில்லை…
இதனால் அந்த அமைச்சரவை பத்திரம் நிறைவேற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.. இவ்விடயத்தில் அமைச்சரவைக்குள் மைத்திரி தரப்பும் ரணில் தரப்பும் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தன.
இந்த இடத்தில் சீற்றமடைந்த மைத்திரி தன்மீதான கொலை முயற்சி குறித்து கவனத்தை ஈர்க்க முற்பட்டார்.
“பொலிஸ் திணைக்களம் நீதியாக செயற்படுகிறதா ? எனக்கெதிராக கொலை முயற்சி நடப்பதாக வந்த செய்திகளுக்கு என்ன நடந்தது…? இந்திய உளவுத்துறை “றோ” இந்த சதிகளின் பின்னணியில் இருப்பதாக செய்திகள் என்னிடம் வந்துள்ளன. இந்தியப் பிரதமருக்கு தெரியாமல் இவை நடப்பதாகவே தெரிகிறது.. நானும் அமைதியாக இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்..” என்று ஜனாதிபதி கர்ஜிக்க அமைச்சரவையே ஒரு நிமிடம் ஆடி அடங்கிப் போனது…
வியாழக்கிழமை பிரதமர் ரணில் இந்தியா சென்று இந்திய பிரதமரை சந்திக்கவிருந்த நிலையில் ஜனாதிபதியின் இந்த “அதிரடி” இரு நாடுகளுக்கிடையில் உள்ள உறவில் சிறிய விரிசலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது… கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இயங்கும் “றோ” உளவுப் பிரிவு சில நடவடிக்கைளை பின்னால் இருந்து இயக்குவதாக ஜனாதிபதி கருதுகிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
“கைது செய்யப்பட்ட இந்தியர், என்னைக் கொல்ல முயற்சிக்கும் றோவின் முகவராக இருக்க வேண்டும். இதனை இந்தியப் பிரதமர் அறியாமல் இருக்கலாம். இது பெரும்பாலும் வழக்கம்தான். சி.ஐ.ஏயின் இது போன்ற நடவடிக்கைகள் ரம்ப்புக்கும் தெரியாமல் இருக்கலாம்” என்றும் மைத்திரி கூறியுள்ளார். மைத்திரியின் இந்தக் கருத்து இராஜதந்திர வட்டாரங்களிலும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.
மஹிந்தவுடன் இணைந்து இடைக்கால அரசு ஒன்றை அமைக்கும் தனது முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் “றோ” தனக்கு எதிராக வந்த சதி முயற்சிகளிலும் பின்னால் இருப்பதாக ஜனாதிபதி கருதுகிறார் என தெரிகிறது. மைத்திரி இவ்வாறு கருதுவதற்கு சில காரணங்கள் உள்ளன.
ஜனாதிபதி கொலை சதி முயற்சிகளை வெளியிட்ட நாமல் குமார என்பவரின் வீடு கொழும்புக்கு வெளியில் தூரத்தில் உள்ளது. அதாவது கம்பஹாவில் உள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனக் கைதாகியுள்ள இராஜேந்திரகுமார் என்ற இந்தியப் பிரஜை ஒரு மனநோயாளி என இந்தியத் தூரகம் தெரிவித்திருக்கின்றது. அப்படியான ஒருவர் எவ்வாறு கம்பஹாவில் உள்ள நாமல் குமாரவின் வீட்டைத் தேடிச் சென்றார்? விலாசம் எப்படி கிடைத்தது? அங்கு போக உதவியது யார்?
இது போன்ற காரணங்கள்தான் மைத்திரியின் அதிரடியான அறிவிப்புக்குக் காரணம்!
ஆக மொத்தத்தில் “றோ” ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக எதிர்காலத்தில் பிரதமர் ரணிலை ஜனாதிபதியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கருதும் ஜனாதிபதி , இப்போதே அதற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது முக்கியமான உளவு அமைப்பின் மீதான ஒரு நாட்டுத் தலைவரின் குற்றச்சாட்டை புதுடில்லி அரசு இலகுவில் நிராகரித்து விடமுடியாத இராஜதந்திர நெருக்கடி நிலையே இப்போது ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் புதன்கிழமை அவசரமாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரரை அழைத்து விளக்கம் கொடுத்த மைத்திரி, மாலையில் இந்தியப் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்தச் சர்ச்சையில், மைத்திரியை மாட்டிவிட்டதே மஹிந்த தரப்புத்தான் என்கின்றன உள்வீட்டு வட்டாரங்கள். இரண்டு வாரங்களுக்கு முன்னர் எஸ்.பி. திஸநாயக்கா வீட்டில் ராஜபக்ஷக்களை, மைத்திரிசந்தித்தார். அப்போது அங்கு கொடுக்கப்பட்ட ஒரு கயிறை விழுங்கிவிட்டுத்தான் இப்படி அமைச்சரவைக் கூட்டத்தில் வந்து கக்கியிருக்கின்றார்கள் மைத்திரி. அந்தச் சந்திப்பின்போது பிரதமர் ரணிலுடன் இனிமேலும் என்னால் சேர்ந்து வேலை செய்ய முடியாது என்று ரணிலைக் கரித்துக் கொட்டினார் மைத்திரி. அதுதான் சந்தர்ப்பம் என்று பார்த்து கோட்டாபய கயிறைக் கொடுத்திருக்கின்றார்.
“பாருங்கள் என்னையும் உங்களையும் கொல்வதற்கு ரணிலின் ஆள் நடவடிக்கை எடுத்தி ருக்கின்றார். அது குறித்து ரணில் தலைமையிலான அமைச்சர்கள் துரித நடவடிக்கையும் எடுக்கவில்லை; குற்றவாளிகளைச் சட்டத் தின் முன் நிறுத்த முயற்சிக்கவுமில்லை. இதற்கு பின்னால் இந்தியக் கையும் இருக்கின்றது போலும். இந்தியர் ஒருவரும் சந்தேக வலைக்குள் சிக்கியிருக்கின்றார்.” – என்று போட்டுக் கொடுத்தாராம் கோட்டா.
அதைத்தான் விழுங்கி விட்டுவந்து, அமைச்சரவையில் கொட்டியிருக்கின்றார் மைத்திரி. அதை செவிமடுத்த ஐ.தே.கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களுக்கு சந்தோஷமோ சந்தோஷம். அமைச்சரவைக் கூட்டம் முடிந்த கையோடு கொழும்பில் உள்ள “தி ஹிந்து’ செய்தியாளரான பெண்மணியைத் தொடர்பு கொண்டு விடயத்தை ஒப்பித்தமை. ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து அமைச்சர்கள் மைத்திரி இந்தக் கருத்தை வெளியிட்டமையை அந்தச் செய்தியாளருக்கு உறுதிப்படுத்தினர்.
“அப்படி ஐந்து அமைச்சர்கள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்கள். ஆகவே செய்தி முற்றிலும் சரி. ஆனால், நாளைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதைக் கட்டாயம் மறுப்பார்.தாம் அமைச்சரவையில் கூ றி ய கருத்தை பகிரங்கமாக வெளியில் கூறும் திராணி அவருக்கு இல்லை. ஆகவே இந்த செய்தியை பிரசுரிக்கின்றமை குறித்து நீங்களே தீர்மானியுங்கள்!’ – என்ற அடிக் குறிப்புட னேயே “தி ஹிந்து’ கொழும்புச் செய்தியாளர் விடயத்தைத் தமது ஆசிரியருக்கு அனுப்பி வைத்தார்.
ஆசிரியரும் அந்தச் செய்தியை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்க, கொழும்புச் செய்தியாளர் குறிப்பிட்டபடி உடனடியாகவே – அந்த விடயத்தில் “பல்டி’ அடித்து அறிவிப்பை வெளியிடச் செய்யவேண்டியவரானார் மைத்திரிபால. ஆனால், இந்து நிறுவனத்தின் தலைவரான என்.ராம் தமது செய்தி சரியானது என்பதை மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.
இந்தப் பின்னணியில்தான் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயம் இடம்பெற்றது. இதன்போது இரு தரப்பிலும் இணங்கப்பட்ட பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற கருத்தை மோடி முன்வைத்தார். அதனைவிட, இரு பிரதமர்களும் மூடிய அறைக்குள் தனியாக நீண்ட நேரம் பேசியதாகவும் செய்தி. ஆக, மற்றொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த டில்லி தயாராகின்றதா என்பதுதான் இப்போது எழும் கேள்வி!
770 total views, 1 views today
1 thought on “கொழும்பு அரசியலில் “றோ””