உடுத்தியிருந்த ஆம்ஸ்டெர்டாம் மரங்களெல்லாம் மஞ்சள் உடுத்தி தன்னுடைய இலைகளை நீக்கி, எதிர்வரும் பனிக்காலத் தவத்திற்கு தம்மை தயார்படுத்திக் கொண்டிருந்தன. மனிதர்க்கு இதுவும் ஒரு படிப்பினை தான் போலும், பின்னாளில் வரும் அபாயம் அறிந்து அறிவுளோர் தங்களை காத்துக்கொள்வார் என்ற நீதிநூல்களின் சாராம்சத்தை அசைபோட்டவளாய் மெதுவே ஆம்ஸ்டர்டாம் சாலையோரத்தில் அலுவலகம் நோக்கி நடந்தாள் கயல்விழி. உது!

தனியே சாலையினூடே நடக்கும்போது பலவிடயங்கள் கண்முன்னே வந்துபோகும், சிலசமயம் அது மலரும் நினைவுகளை அசைபோடுவதாகவும் சிலநேரங்களில் எதிர்காலத்தை எண்ணி தவிக்கும் மனநிலையாகவும் இருக்கலாம், கவிஞர்களுக்கோ அந்தத் தனிமை கவிதைகளை ஊறச்செய்யும் சூழலை கூட சிலநேரங்களில் ஏற்படுத்தி தரும்.

மடமடவென தோன்றியதை மனதில் வைத்துக்கொண்டாள், ட்ராமில் ஏறி அமர்ந்ததும் அதனை கைபேசியில் தமிழில் டைப் செய்தும் வைத்துக் கொண்டாள், வழக்கமான அலுவலக நாளான அன்று மதியம் வழக்கம் போல தோழி டென்சியுடன் மதிய உணவு அருந்த ஓரமாய் போய் உட்கார்ந்தாள் அவள், அன்று காலை எழுதிய கவிதையை டென்சியிடம் ஆர்வத்தோடு காட்டினாள் கயல்விழி.

டென்சி கேட்ட அடுத்த கேள்வி “உது உன்னுனைடய கவிதையா ?” ஆமன்று

தலையசைத்த அவளுக்கு அடுத்து உடனே தோன்றிய ஐயம், உது ? இதென்ன புது வார்த்தை ?

டென்சி சிரித்துக்கொண்டே சொன்னாள் “இதுவும் தமிழ் தான்”, மேலும் சொல்வாள் “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி எண்டு சொல்வாங்களே அந்த தமிழில் கிடைத்த பழைய நூல் தொல்காப்பியம், இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட அந்த நூல் ஒரு இலக்கண நூல்” அது சொல்கிறது ஒரு பொருளை சுட்டுவதற்கு மூன்று சுட்டுகள் அ, இ ,உ உண்டு (அது, இது மற்றும் உது)

அது என்கிற அகரச்சுட்டு படர்கையிலும், இது எனும் சொல் அருகில் இருக்கும் பொருளை சுட்டவும் பொதுவாக பயன்படுத்தப்படும், ஆனால் இதற்கு இடையில் சொல்பவனுக்கு முன்னால் அதாவது முன்னிலையில் உள்ளது (ஓரளவு கிட்ட அல்லது நெருக்கமாக) முன்னிலையில் உள்ளவரிடம் பேசும்போது தான் உகரச்சுட்டு பயன்படுத்தப்படும்.

முழுதும் கேட்ட கயல்விழி, பெருமூச்சு விட்டவளாய் இப்படி ஒரு வார்த்தை எங்க ஊர்ல கேட்டதே இல்லை என்றாள்.

ஓம், தமிழகத்தில் இந்த உகரச்சுட்டு இப்போது இல்லாமல் போய்விட்டது, ஆனால் கடல் சூழ்ந்த ஈழத்தில் யாழ்ப்பாண வழக்கில் இன்றைக்கும் உள்ளது இந்த வார்த்தை.
கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது, நான் ஒரு புத்தகத்தில் வாசித்தேன் ஹோணல் எனும் மேலைதேயத்தவர் இவ்வாறு எழுதி இருக்கிறார்.

“நீண்டகாலமாக வடக்கிலங்கையிலே தனித்து வாழ்ந்து வரும் தமிழர் தம்முடைய தமிழகத்தில் வாழ்ந்துவரும் சகோதரர்கள் மறந்த பல தமிழ் வழக்கங்களை தக்கவைத்துள்ளனர். அதனுடன் செந்தமிழ் நிகர்த்த மொழியினை பேச்சுவழக்கில் கொண்டுள்ளனர்.”

மேலும் சொல்வாள் “தமிழகத்தில் எழுதும் தமிழும் பேசும் தமிழும் இராண்டாகிப் போனது, பேசுவது போல எழுதுவதில்லை” ஆனால் டென்சி நீ பேசுவதே நான் எழுதும் வழக்கில் தான் என்று.

சரி உகரச்சுட்டு கற்றுக்பெச்சை காண்டாய் அல்லவா கயல்விழி, இதையே போய் தமிழகத்தில் அதை கொடுங்கள், இதை கொடுங்கள் என்று கேட்கும் இடத்து “உதை” கொடுங்கள் என்று கேட்டுவிடாதே, உதை கொடுத்துவிடுவார்கள் என்று ஹாஸ்யமாய் முடித்தால் டென்சி.

— தனசேகர் பிரபாகரன்

865 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *