யாழ் மண்ணில் சாதனை படைத்த இருதய சத்திரசிகிச்சை நிபுணருக்கு பிறந்த மண்ணில் பெரு மதிப்பளிப்பு விழா!

யாழ். போதனா மருத்துவமனையின் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தனின் பணிகளை நயந்து தென்மராட்சி மக்கள் முன்னெடுத்த மதிப்பளிப்பு விழா சாவகச்சேரி சிவன்கோவிலடி தென்மராட்சி கலைமன்ற கலாச்சார மண்டபத்தில் 07.10.2018 ஞாயிற்றுக்கிழமை இம்பெற்றது.
பாராட்டு விழாக்குழுத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.
சாவகச்சேரி சிவன் கோவிலில் இருந்து விழா மண்டபம் வரை நாதஸ்வர வித்துவான் கே.எம்.பஞ்சாபிகேசனின் பேரர்களான வி.சித்தார்த்தன் , வி.பிரதித்தன் ஆகியோருடைய இசைமழையில் வரவேற்பு ஊர்வலம் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சைந்தவி ஜனார்த்தனன் இறைவணக்கம் இசைத்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார்.
.சாவகச்சேரி முத்துமாரி அம்மன் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ க.வீரபத்திரக்குருக்கள், சாவகச்சேரி பங்குத் தந்தை அருட்பணி றெக்ஸ் சவுந்தரா அடிகள் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர்.


.
பாராட்டுரைகளை வடமாகாண உறுப்பினர் கேசவன் சயந்தன், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டாக்டர் ச.ஸ்ரீபவானந் தராஜா, தென்மராட்சி பிரதேச செயலர் தேவந்தினி பாபு, உணர்வழியியல் வைத்திய நிபுணர் டாக்டர் சு.பிரேமகிருஷ்ணா, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்யட்சகர் டாக்டர் ப.அச்சுதன், யாழ். போதனா வைத்தியசாலையில் முதன்முதலில் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த ச.ரண்குமார் ஆகியோர் ஆற்றினர்.
டாக்டர் சி. முகுந்தனின் பணிகளை நயந்து முகுந்தம் என்ற பாராட்டு விழாச் சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. (டாக்டர் சி. முகுந்தன் 1969 ஆண்டு பிறந்தவர்) மலரை சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் கைலைநாதன் வெளியிட்டு வைத்தார்.
.
யாழ். போதனா வைத்தியசாலையில் முதன்முதலாக திறந்த இருதய சத்திரசிகிச்சையை மேற்கொண்ட குழுவில் பிரதான அங்கம் வகித்த உணர்வழிவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சு.பிரேமகிருஷ்ணா, தலைமைத் தாதிய உத்தியோகத்தர் பி.ஜே.வி.ரமேஷ்குமார் ஆகியோர் முதலமைச்சரால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டனர்.
அன்று 2015 இல் தனது கல்வியை நிறைவு செய்து வைத்திய நிபுணராக இலங்கை வந்த இவருக்கு கொழும்பு லேடிறிஜ்வே (LRH) வைத்தியசாலையில் நியமனம் கிடைத்தது. பிறந்த மண்ணில் சேவையாற்ற விண்ணப்பித்து மிகக் கடினப்பட்டு கொழும்பு லேடிறிட்ஜ்வேயில் இருந்து விடுவிப்பைப் பெற்று 2016 இல் யாழ். போதனா மருத்துவமனைக்கு நியமனம் பெற்று வந்தார்.
கொழும்பு, காலி, கண்டி ஆகிய இடங்களில் மாத்திரம் திறந்த இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் சூழலில் யாழ். போதனா மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
.
பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். அதில் முக்கிய பொறுப்பை ஏற்ற முகுந்தன் பணிக்குழுவிற்கான பயிற்சி வழங்கலில் இருந்து உபகரண நிர்மாணம் வரை தனது பங்களிப்பை முழுமையாக நல்கினார். இவரது முயற்சியின் தீவிரத்தை இவரைச் சந்திப்பதற்கு வைத்தியசாலைக்குச் சென்ற பொழுதுகளில் நானும் தரிசித்துள்ளேன்.
.2017 ஆம் ஆண்டின் இறுதியில் இவரது தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக திறந்த இருதய சத்திரசிகிச்சையை மேற்கொண்டனர். குறைந்த ஆளணியுடன் குறைந்த வளங்களுடன் இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை ஒரு சாதனையாகவே பலராலும் பார்க்கப்படுகின்றது. இதனால் யாழ். போதனா மருத்துவமனையின் பெருமை மக்கள் மனங்களில் இன்னும் ஒரு படிமேலுயர்ந்தது..விழாக்குழுவின் இணைச் செயலர் ச.தயாபரன் நன்றியுரை நல்கினார்.
.நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மாகாண உறுப்பினர்களான அரியரட்ணம், ஜெயசேகரம், கஜதீபன் மற்றும் சாவகச்சேரி நகரசபை, மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இவர்களுள் பலர் மட்டுவிலில் இருந்து வருகை தந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.. நிகழ்வில் தென்மராட்சி மக்கள் சார்பிலான நினைவுக்கிண்ணத்தை முதலமைச்சர் கையளித்தார்.

சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் சார்பான நினைவுக் கிண்ணத்தை தலைவர் ந.சிவபாலன் , உபதலைவர் வ.ஸ்ரீபிரகாஸ் கையளித்தனர்..
முகுந்தன் ஆரம்பக் கல்வியைக் கற்ற மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயம் சார்பான கௌரவிப்பை அதிபர் எழிலன் தலைமையிலான பாடசாலைச் சமூகத்தினர் மேற்கொண்டனர்..
நன்றி : செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன். படங்கள் சாவகச்சேரி குகன்

817 total views, 2 views today

1 thought on “யாழ் மண்ணில் சாதனை படைத்த இருதய சத்திரசிகிச்சை நிபுணருக்கு பிறந்த மண்ணில் பெரு மதிப்பளிப்பு விழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *