குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை
குழந்தைகள்
*
இதோ,
மீண்டும் மலர்ந்து விட்டது
ஒரு
குழந்தைகள் தினம்.
இது
உங்களுக்கான தினம்.
மலர்களே
தங்களுக்கு
மாலை சூடிக் கொள்ளும் தினம்
குயில்களே
தங்களுக்காய்
இசைவிழா நடத்தும் தினம்
இந்த
மயில்களுக்காய்
மழையொன்றைப் பொழிகிறேன்
கவிச்
சாரலை தெளிக்கிறேன்.
குழந்தைகளே
குழந்தைகளே
இன்றைய நாட்டின்
இளவரசர்களே
நாளைய
சிம்மாசனங்களின்
சொந்தக்காரர்கள் நீங்கள்,
நாளைய
சிகரங்களின்
கிரீடங்கள் நீங்கள்.
நீங்கள்
நாளைய வனத்துக்கான
இன்றைய விதைகள்.
நாளைய கடலுக்கான
இன்றைய துளிகள்
செதுக்குவதைப்
பொறுத்து தான்
சிலைகள் வடிவாகும்.
உங்களைக்
கவனமாய்ச் செதுக்கும்
கல்வி உளி
எங்களிடம் இருக்கிறது.
பொறுமையாய் காத்திருங்கள்
காத்திருக்கும்
பாறைகளே சிலைகளாகும்.
முரண்டு பிடிப்பவையோ
உடைந்து தெறிக்கும்.
நீங்கள்
மலர்கள்.
எந்த வாசனையை
உங்களில் ஊற்றுகிறோமோ
அதுவே
உங்கள்
சொந்த வாசனையாகப் போகிறது.
நேசத்தின்
வாசனையை
உள்ளத்தில் நிறையுங்கள்.
நீங்கள்
புல்லாங்குழல் போன்றவர்கள்
நாங்கள்
உங்கள் குணாதிசயங்களில்
இசை மீட்டும்
இடுபவர்கள்.
உங்களை
ஒப்படையுங்கள்,
வாழ்க்கை சுரம் விடுக்கும்.
மேகத்தை அரைத்தால்
மழை பொழியாது
ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாது !
கற்பதை மனதில்
கல்வெட்டாய் கல்லுங்கள்.
நீங்கள்
சூரியனையும் முளைப்பிக்கும்
சக்தி படைத்தவர்கள்
பாதாளத்தையும் புதைத்து வைக்கும்
வலிமை படைத்தவர்கள்.
சோம்பலில் படுக்கையில்
சுருண்டு விடாதீர்கள்.
வெளியாறாத சூரியன்
ஒளிதருவதில்லை.
ஓடாத நதியில்
இசை இருப்பதில்லை.
இயங்கிக் கொண்டே இருங்கள்
நீங்கள்
வானத்தையும் வனையும்
வல்லமை படைத்தவர்கள்
விரல்களை
டிஜிடல் கருவிகளில்
ஒட்டி வைக்க வேண்டாம்.
கீழ்ப்படி இல்லாமல்
மேல்படி இல்லை
கீழ்ப்படிதல் இல்லாமல்
முன்னேற்றம் இல்லை.
கீழ்ப்படியுங்கள்.
பொய்யின் பிள்ளைகள்
வெற்றிகளின்
கிளைகளில் கூடுகட்டுவதில்லை.
வாய்மையை
வாழ்க்கையாக்கிக் கொள்ளுங்கள்.
கர்வத்தின் கரங்களில்
நெரிபடாதீர்கள்
தாழ்மையின்
தாழ்வாரங்களில் மட்டுமே
நடை போடுங்கள்.
மன்னிப்பின்
மகரந்தங்களைச்
சுமந்து செல்லும்
பட்டாம்பூச்சியாகுங்கள்.
ஒரு சிறு துளியே
பெருமழையின்
துவக்கம்.
ஒரு சிறு தவறே
பெருங்குற்றத்தின்
துவக்கம்
தவறுகளின் முளைகளை
துவக்கத்திலேயே
தறித்தெறியுங்கள்.
வாழ்க்கை
ஸ்மார்ட்போன்களில் இல்லை
அவை
உங்கள்
வலிமையை அழிக்கும்
மௌனச் சாத்தான்கள்.
வளரும் வரைக்கும் விலக்கியே வையுங்கள்.
விரைவில் தூங்கி
விரைவில் எழுங்கள்,
உடலை மதித்து
பயிற்சி எடுங்கள்,
நல்ல உணவால்
நலத்தைப் பெறுங்கள்
ஒரு துளி
விஷம் போதும்
உயிரை எடுக்க,
ஆரோக்கிய வாழ்வை
விலக்காமல் இருங்கள்.
நீங்கள்
குயவன் கை களிமண்.
வனையும் பொறுப்பு
எங்களிடம் இருக்கிறது.
எங்கள்
கரங்களை விட்டு
நழுவாமல் இருங்கள்
வழிகளை விட்டு
வழுவாமல் இருங்கள்
நீங்கள்
பாத்திரங்கள்,
உச்சமானதை மட்டுமே
உள்ளத்தில்
மிச்சமின்றி நிறையுங்கள்.
பிரபஞ்சத்தின்
பரவசமாம் புன்னகையை
உயிருக்குள்
நிரப்பியே வைத்திருங்கள்
இனிய
குழந்தைகள் தின
வாழ்த்துகள்
Xavier
1,138 total views, 2 views today