திருமந்திரம் கூறும் புராணங்கள்

புராணக்கதைகள் வேதத்தில் கூறப்பட்ட தத்துவங்களை, நீதி முறைகளை விரிவாக மக்கள் புரிந்து கொள்வதற்காகக் கூறப்பட்ட உண்மைக் கதைகளாகும். வேதமந்திரமான “ஸத்யம் வத” (உண்மை பேசு) ஹரிச்சந்திர புராணமாகவும், “தர்மம் சர” (அறத்தைப் பின்பற்று) மஹாபாரதமாகவும், “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ” (தாய், தந்தையருக்குக் கீழ்ப்படிதல்) இராமாயணமாகவும் பெரிதாக விரிவுபடுத்திக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு எல்லாப் புராணங்களும் மக்களை நல்வழிப்படுத்துவதற்காக தத்துவங்கள் மக்களைப் போய்ச் சேரவேண்டும் என்ற நோக்கில் அந்தந்தக் காலத்திற்கேற்ப சில விடையங்களை பெரிதுபடுத்திக் கூறியுள்ளார்கள்.

புராணங்கள் 18 (வாயு புராணத்துடன் 19 எனவும் கொள்ளப்படுகின்றது) பெரிய புராணங்களும், 18 உப (சிறிய) புராணங்களும் ஆக வியாச முனிவரால் தொகுக்கப்பட்டன. பெரியபுராணம் தவிர்ந்த மற்ற எல்லாப் புராணங்களும் சமஸ்க்கிருத மொழியில்தான் இருந்தன. பிற்காலத்தில் தமிழில் ஸ்காந்தம் என்னும் புராணம் கச்சியப்பசிவாச்சாரியாரால் கந்தபுராணமாகவும், ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் உப புராணம் திருவிளையாடற் புராணமாகவும் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு மேலும் பல புராணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. பெரியபுராணம் மட்டும் தமிழிலிருந்து சமஸ்க்கிருதத்திற்கு “உபமன்யு பக்த விலாசம்” என மொழிபெயர்க்கப்பட்டது.

புராணங்கள் பிரம்மாவிடமிருந்து வெளிப்பட்டதாக சாந்தோக்கிய உபநிடதத்திலும், மத்ஸ்ய புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. புராணங்கள் சிவனிடமிருந்து வந்ததாகவே சைவசமயம் கூறுகிறது. சைவ சித்தாந்தம் பிரம்மாவை சிவனின் ஒரு அங்கமாகப் பார்ப்பதால் இதில் முரண்பாடு உள்ளதாக நாம் எடுக்கமுடியாது.

திருஞானசம்பந்தப்பெருமான் புராணங்கள் சிவனிடமிருந்து வந்ததைப் பின்வரும் பாடலில் 4 வேதங்களும், 18 புராணங்களும், 6 வேதாங்கங்களும் இறைவனால் விரித்து உரைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்

“பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே
வேத நான்கும் பதினெட்டோடு ஆறும் விரித்தார்கு இடம்
தாதுவிண்டம் மதுவண்டு மிண்டிவரு வண்டினம்
கீதம்பாடம் மடமந்தி கேட்டுகளும் கேதாரமே”

மேலும் புராணங்கள் சிவனிடமிருந்து நந்தி, சனற்குமாரர், சூத முனிவருக்கூடாக வந்து வியாச முனிவரால் வகுக்கப்பட்டதைப் பின்வரும் பாடலில் கூறியுள்ளார்

“பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே”
புராணங்கள் பற்றி சுந்தரமூர்த்திநாயனார், மாணிக்கவாசகநாயனார், சேக்கிழார் சுவாமிகள், அருணந்திசிவாச்சாரியார் போன்ற பல அருளாளர்கள் கூறியுள்ளார்கள்.

புராணங்களைத் திருமூலர் இறைவனின் தன்மைகளை இலகுவழியில் மக்களுக்கு வெளிப்படுத்தத் தோன்றிய பழமையான கதைகளாகவே பார்க்கின்றார். லிங்கபுராணத்தில் பக்தியால், தவத்தால் திருவருள் கிட்டும் என்பதன் அடையாளம் தான் சக்தி தவமிருந்தமை. பாடல் எண் 347

“அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமாத வம்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே”

சிவப் பரம்பொருளையே சரண் அடைவேன், அவரையே திருமணம் செய்து கொள்வேன் என்று எம் ஆதிமுதலாகிய சிவபெருமானை நோக்கி, இமவான் மகளாகப் பிறந்த பார்வதி தேவி, இமய மலைச் சாரலில், தேவரும் மூவரும் அறியப் பரமனைப் பூசித்துப் பக்தி செய்து வழிபட்டாள்.மேலும் சிவபுராணங்களில் முப்புரம் எரித்தல் ஆணவத்தை ஒடுக்கும் இறைவன் அடையமுடியாதவரல்ல அன்பர்க்கு கருணையோடு தன்னை வெளிப்படுத் துபவர். பாடல் எண் 348

“திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென்(று) எண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே”

போரிடாமலே, நெற்றிக்கண் நெருப்பாலேயே, பார்வை ஒன்றாலேயே முப்புரத்தையும் எரித்து அழித்த சிவப்பரம்பொருள் அறிதற்கு, அணுகுதற்கு முடியாதவன் என்று நினைத்து யாரும் மனம் தளர வேண்டாம். அன்பு செலுத்துபவர்களுக்குச் சிவன் பொய்யனாகான்.

தக்கன் வேழ்வியில் ஆணவத்தை ஒடுக்கும் இறைவன் பாடல் எண் 340
“கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான்அங்கி இட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டுச் சந்திசெய் தானே”

தட்சாயிணியாகப் பிறந்த பார்வதி தேவிக்குத் தகப்பனான மன்னன் தட்சன் ஒரு யாகம் செய்தான். அதற்கு முதல் பூசை பெற ஈசனை அழைக்காது அவமதித்தான். இது கொலைக் குற்றம் போன்றது. எனவே சிவபெருமான் சினம் கொண்டு யாகம் நடக்கும் இடம் சென்று தட்சனின் தலையை வெட்டி யாகத் தீயில் போட்டார். பின்பு பார்வதி தேவியும், மற்றவர்களும் வேண்ட அங்கிருந்த ஓர் ஆட்டின் தலையை தட்சனின் உடலில் பொருத்தி, இவன் சில காலம் இப்படியே இருக்கட்டும் என்று அருளிச் செய்தான்.

மார்க்கண்டேய புராணத்தில் எமனை வென்றவர் பாடல் எண் 345
“மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்தே”

மூலாதாரத்திலிருந்து சுழுமுனை வழியாக மூலக் கனலை மேலேற்றிச் சோதி ஒளியாகத் தெரியும் இறைவனை நோக்க வல்லவர்கள் இறைவன் அருளைப் பெறுவர். இவர்களை அணுகவரும் காலனைக் காலால் உதைத்து, இறைவன் சாகா நிலையளிப்பான்.

1,067 total views, 1 views today

1 thought on “திருமந்திரம் கூறும் புராணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *