இலங்கைக்கு வலைப் பந்தாட்டத்தில் ஆசியக் கிண்ணத்தை பெற்று தந்த உயர் தமிழச்சி தர்சினி.சிவலிங்கம்!
இலங்கையின் தலைசிறந்த விளையாட்டு வீ|ராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டவர்தான் தர்சினி சிவலிங்கம். நாட்டின் வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனையும் இவர்தான். இவரின் உயரம் ஆறு அடியும் பத்து அங்குலமும். இவரின் மீள்வருகை இலங்கைக்கு வலைப்பந்தாட்டத்தில் மீண்டும் ஒருமுறை 2018 ஆசியக்கிண்ணத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.
தர்சினியின் சொந்த இடம் யாழ்ப்பாணத்தில் புன்னாலைக்கட்டுவன். ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாக பிறந்தவர்.
இவரது குடும்பத்தில் அநேகர் உயரமானவர்கள் தான். அதீத உயரம் காரணமாக இவரது சிறுவயது வாழ்க்கை மிகவும் கசப்பான அனுபவங்களை இவருக்கு கொடுத்திருக்கின்றது. பெரும்பாலும் இவர் வேடிக்கைக்கு உரிய பொருளாகவே ஏனையோரால் பார்க்கப்பட்டார்.
கல்விப்பொதுத்தராதர வகுப்பில் வசாவிளான் மத்தியமாவித்தியாலயத்தில் இருந்தபோது இவரின் உயரம் 6 அடியும் இரண்டு அங்குலமும். பாடசாலையிலேயே இவர்தான் உயரமானவர். அதிபரின் உயரம் ஆறு அடியும் ஒரு அங்குலமும். உயரம் காரணமாக ஏனைய மாணவர்களால் நையாண்டி செய்யப்பட்டார்.
தர்சினி 1982ம் ஆண்டு பிறந்தவர். 22 வயதை அடைந்த பிற்பாடு தர்சினியின் உயரத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. தர்சினி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயின்றார். தமிழ்த்துறையில் விரிவுரையாளராக வரவேண்டுமென்பது இவரின் இலட்சியமாக இருந்தது.
ஆயினும் இங்குதான் இவரின் வலைப்பந்தாட்ட திறமை ஊக்குவிக்கப்பட்டது. கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டார். இவரின் கசப்பான அனுபவங்களுக்கு சிறுவயது முதலே காரணமாகி இருந்து வந்த அதீத உயரம் இவரை வாழ்க்கையில் உயரத்திற்கு கொண்டுவந்தது மாத்திரமல்லாது இலங்கை வலைப்பந்தாட்ட அணியையும் உலகறிய செய்தது.
ஆசிய கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணி சிங்கப்பூர் அணியை இறுதி போட்டியில் வீழ்த்தி சாம்பியன் ஆனது . 9 வருடங்களின் பின்னர் இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது .
தனது அசாத்திய திறமை மூலம் ஆசிய கிண்ணத்தை பெற்று கொடுத்த தர்ஷினி அவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் செலான் வங்கியினால் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது .
கிரிக்கெட் முதல் கொண்டு அனைத்து விளையாட்டுக்களிலும் தமிழ் வீர வீராங்கனைகள் திட்டமிட்டு சிங்கள பேரினவாதிகளால் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் ஓர் தமிழச்சி ஆசிய கிண்ணத்தை பெற்று கொடுத்தமை ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பெருமை
இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் நம்பிக்கை நட்சத்திரமானார். ஏனைய அணியினருக்கு சிம்மசொப்பனமானார். இவரின் கைகளுக்கு பந்து கிடைத்தால் போதும், 90 சதமானம் தவறாமல் புள்ளியைப் பெறுவார். 2009ம் ஆண்டு இடம்பெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் சம்பியனாக வாகை சூடியது இலங்கை. இப்போட்டியில் மொத்தமாக இலங்கை அணியால் 79 புள்ளிகள் பெறப்பட்டன. இதில் 74 புள்ளிகள் தர்சினி போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மற்றொரு யாழ்.வீராங்கனையான எழிலேந்தினியும் இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனையாக கலக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
848 total views, 2 views today
1 thought on “இலங்கைக்கு வலைப் பந்தாட்டத்தில் ஆசியக் கிண்ணத்தை பெற்று தந்த உயர் தமிழச்சி தர்சினி.சிவலிங்கம்!”