வம்பு வார்த்தைகள் ஏனோ?
வம்பு வார்த்தைகள் ஏனோ? இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தில் ஒலிபரப்பும் பாடல்கள் சில, திரையரங்குகளில் சினிமாவில் பார்க்கும் பொழுது வேறுபட்டு இருக்கும். இது ஏன் எப்படி என்று ஒரு குழப்பம் என்னிடம் முன்னர் இருந்தது. பின்னர் பாடல்கள் தணிக்கை செய்யப்படும் விபரம் தெரிந்த பின் தெளிவானது.
திரைப்படம் தயாரிப்பில் இருக்கும் பொழுதே அந்தப் படத்தின் பாடல்கள் இசைத்தட்டில் வெளிவந்து விடும். பின்னர் திரைப்படம் தயாரித்து முடித்தபின் தணிக்கைக் குழுவின் கைக்குப் போகும் பொழுது பாடல் வரிகளில் ஏதாவது ஏடாகூடமாக இருந்தால் கத்தரி விழ ஆரம்பிக்கும். அப்படி கத்தரி விழும் பாடல்களில் உள்ள வரிகளில் மாற்றம் செய்து பாடகர்களைக் கொண்டு மீண்டும் பாட வைத்து படத்தில் இணைத்து விடுவார்கள். முன்னரே வெளிவந்த இசைத்தட்டுக்கள் மாற்றம் இல்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கும்.
காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். எம்ஜிஆர் படங்களின் பாடல்களில் திமுக கொள்கைப் பிரச்சாரம் இருக்கும். அதனால் அங்கே கத்தரி கண்டிப்பாக விழுந்து விடும். அதுவும் இந்தக் கத்தரி விளையாட்டு எம்ஜிஆர் – வாலி கூட்டணியில்தான் அதிகம் நிகழ்ந்திருக்கிறது.
எங்கவீட்டுப் பிள்ளை திரைப்படத்திற்காக முதலில் வாலி எழுதிய பாடலின் வரிகள் இப்படி ஆரம்பிக்கும்,
„நான் அரசனென்றால்
என் ஆட்சி என்றால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்’
இந்தப் பாடலைப் பார்த்த தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி, கண்டிப்பாக தணிக்கைக் குழு அனுமதிக்காது என்று சொல்ல நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்று வாலி மாற்றி எழுதினார். பாடல் பதிவானது. ஆனாலும் தணிக்கைக் குழு இரண்டு இடத்தில் கத்தரி போட்டது.
ஒரு தலைவன் உண்டு- அவன்
கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன் என்ற வரியில் ‘ஒரு தலைவனில் ஒரு தடவையும் ‘இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன் என்ற இடத்திலுமாக இரண்டு தடவைகள் வெட்டு விழுந்திருந்தன.
‘இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன் என்ற வரி இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன் என்றும் தலைவன் என்ற சொல் கடவுள் என்றும் திரைப்படத்தில் மாற்றம் செயயப் பட்டது.
அறிஞர் அண்ணா நம்நாடு பத்திரிகையில் அருமைத் தம்பி என்று விழித்து தொடராக கடித இலக்கியம் எழுதிக் கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த தாய்க்குப் பின் தாரம் திரைப்படத்தில் மருதகாசி எழுதிய பாடல் வரிகள் இசைத்தட்டில் இப்படி இருந்தன,
‘மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா அருமைத் தம்பி – இது
மாறுவதெப்போ தீருவதெப்போ ஏழைத் தம்பி’
அருமைத் தம்பிக்கு தணிக்கைக் குழுவின் கத்தரி விழுந்ததால் திரைப்படத்தில்,
‘மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே – இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை’ என்று இடம் பெற்றிருந்தது.
அன்பே வா திரைப்படத்தில் ‘உதய சூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே’ என்ற வரிகளில் உதயசூரியன் புதிய சூரியனாக மாற்றப் பட்டது. பெற்றால்தான் பிள்ளையா என்ற திரைப்படத்தில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’ என்ற வரியில் அறிஞர் அண்ணாவை எடுத்து விட்டு திரு.வி.க. என்று மாற்றி இருந்தார்கள்.
எம்ஜிஆரின் அரசியற் பாடல்களில் மட்டுமல்ல, காதல் பாடல்களிலும் கத்தரி போட்டார்கள். படகோட்டி திரைப்படத்தில், அருகில் வராமல் அள்ளித் தராமல் ஆசை விடுவதில்லை என்ற வரி ஆபாசமாக இருக்கிறது என்று தணிக்கைக் குழு சொல்ல நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை என்று திரைப்படத்தில் மாற்றி இருந்தார்கள்.
பெற்றால்தான் பிள்ளையா திரைப் படத்தில்,
‘தோகை மயிலின் தோளை அணைத்து
பள்ளி கொள்வது சுகமோ’ என்ற வரியில் பள்ளி கொள்வது ஆபாசம் என்று சொல்லி பள்ளியில் தணிக்கை குழு கத்தரி போட,
‘தோகை மயிலின் தோளை அணைத்து
பழகிக் கொள்வது சுகமோ’ என திரைப்படத்தில் வரும்.
இதே பாடலில்
‘உறவைச் சொல்லி நான் வரவோ
என் உதட்டில் உள்ளதைத் தரவோ’ என்ற வரியும் ஆபாசம் என்று தணிக்கைக் குழு சொல்ல,
உறவைச் சொல்லி நான் வரவோ
என் உயிரை உன்னிடம் தரவோ என்று மாற்றி இருந்தார்கள்.
பணம் படைத்தவன் திரைப்படத்தில்,
‘அந்த மாப்பிளை காதலிச்சான்
கையைப் பிடிச்சான் என்ற பாடலில் இசைத்தட்டில்,
‘அம்மம்மா என்ன சுகம்
அத்தனையும் கன்னி சுகம்’ என்று ஆண் பாடுவதாக இருக்கும். திரையில்
அம்மம்மா என்ன சுகம்
அத்தனையும் கண்டதில்லை என்று மாற்றி இருப்பார்கள்.
எம்ஜிஆர் பாடல்களில் மட்டுமல்லாமல், பொதுவாக ஆபாசம் அல்லது சமூகத்துக்கு முரணான கருத்துகள் கொண்ட மற்றையவர்களுடைய திரைப்படப் பாடல்களிலும் கத்தரி விழுந்து கொண்டுதான் இருந்தன.
வாழ்க்கைப் படகு திரைப் படத்தில்,
‘பொல்லாத பெண்களடா
புன்னகையில் வேசமடா
நன்றி கெட்ட மாதரடா – நான்
அறிந்த பாடமடா என்ற வரிகள் பெண்களுக்கு அவமரியாதை செய்கிறது என்று தணிக்கை கத்தரி போட,
‘பொல்லாத கண்களடா
புன்னகையில் வேசமடா
நன்றி கெட்ட மாந்தரடா – நான்
அறிந்த பாடமடா’ என்று பெண்கள் கண்களாகவும், மாதர் மாந்தராகவும் திரையில் மாற்றம் பெற்றிருக்கும்.
கடவுள் இருக்கின்றான் என்ற திரைப் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாட்டு
‘கொஞ்சம் தள்ளிக்கணும்
அங்கே நிக்கணும்
சொல்லாமல் தெரிஞ்சிக்கணும்’ என்று இசைத் தட்டில் இருக்கிறது. தள்ளிக்கணும் என்ற வார்த்தை தணிக்கையானதால் கொஞ்சம் சிந்திக்கணும் என்று திரைப்படத்தில் மாற்றி இருந்தார்கள். இதே பாடலில்,
‘பாக்குற பார்வையில் விளங்கலையா
நான் பயப்படுறேனே தெரியலையா
ஷாக் அடிச்சா புள்ள நடுங்கலையா
நான் பேகடிச்சேனே புரியலையா’ என்ற வரிகளும் ஆபாசம் என்று தணிக்கை செய்ய,
‘பாக்குற பார்வையில் விளங்கலையா
நான் பயப்படுறேனே தெரியலையா
கேக்கிற கேள்வியும் புரியலையே –அந்தக்
கேள்விக்குப் பதிலும் தெரியலையே’ என்று திரைப்படத்தில் மாற்றி இருப்பார்கள்.
நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தின் இசைத்தட்டில் கண்ணன் வரும் நேரம் இது என்ற பாடலில் வரும் ‘இடையோடு விளையாட வருவாய் கண்ணா’ என்ற வரியில் உள்ள இடையோடு என்ற வார்த்தையை எடுத்து விட்டு ‘என்னோடு விளையாட வருவாய் கண்ணா’ என திரைப்படத்தில் மாற்றி இருப்பார்கள்.
ஆபாசமாக மட்டுமல்ல, பிராமணரைக் குறை சொன்னாலும் கத்தரி விழத்தான் செய்தது. பாவமன்னிப்பு திரைப்படத்தின் இசைத்தட்டில் இடம் பெற்ற பாலிருக்கும் பழமிருக்கும் பாடலில்,
‘வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே –அது
வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே’ என்ற வரிகள் திரைப்படத்தில்
‘வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே –அது
மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே’
என்று மாற்றம் அடைந்திருக்கும்.
இப்படி ஏகத்துக்குப் பல பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இன்று இசைத்தட்டுகளைச் சுழல விட வாய்ப்புகள் இல்லாததால் இவற்றை எல்லாம் கேட்க வாய்ப்பில்லை. திரைப்படங்களில் இருந்து பிரதி எடுத்த பாடல்களையே கேட்கக் கூடியதாக இருக்கிறது.
ஆபாசம் என்று கருதப்பட்டு இலை மறை காயாகச் சொன்ன சின்னச் சின்ன சங்கதிகள் எல்லாம் திமுக ஆட்சி ஆரம்பித்த பொழுது வெள்ளிடை மழையாகின. வாலியின் ஆபாசப் பாடல்கள் அதுவும் எம்ஜிஆர் படங்களில் மெதுவாக அரங்கேற ஆரம்பமாயின.
‘மடல்வாழைத் தொடை இருக்க
மச்சம் ஒன்று அங்கிருக்க..’,
துணி போட்டு மறைச்சாலும் பெண்ணே
பளிச்சென்று தெரியாதோ இள மாங்காய் முன்னே..’
‘தேன் குடங்கள் இருபுறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ’ என்றெல்லாம் பாடல்களில் வரிகள் இடம்பெற ஆரம்பித்தன.
முன்னர்
‘உறவைச் சொல்லி நான் வரவோ
என் உதட்டில் உள்ளதைத் தரவோ’ என்ற வரிகள் ஆபாசம் என்று தடை விதித்தார்கள். பின்னர் வந்த பாடலில்
‘இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்’ என்றதை இலக்கிய வர்ணனை என்று அனுமதித்தார்கள்.
–ஆழ்வாப்பிள்ளை
1,146 total views, 1 views today
1 thought on “வம்பு வார்த்தைகள் ஏனோ?”