திடீர்ப் பிரதமர்’ மகிந்த ராஜபக்ஷ ஆட்சியை தக்கவைப்பாரா?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திடீர் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ ஆட்சியை அமைத்து ஒரு மாதம் கடந்துள்ள போதிலும், கொழும்பு அரசியல் இன்னும் அதிர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியாமல் அவர் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியை அவரால் தொடர முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நான்காவது தடவையாகவும் கடந்த வெள்ளிக்கிழமை (23-11-2018 இல்) பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது.
பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனத்தில்தான் இந்தத் தோல்வி அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த நியமனத்தில் ஆளும் – எதிர்க்கட்சிகள் இடையில் சபையில் கடும் சர்ச்சை நிலவியது. சபையின் பொது உடன்பாடு எட்டப்படாத நிலையில் சபாநாயகரின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை கடுமையாக ஆளும் கட்சி எதிர்த்த நிலையில், சபாநாயகர் அறிவிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆளும் கட்சியிலினர் சபையிலிருந்து வெளியேறிய நிலையில் நடந்த இந்த வாக்கெடுப்பில் 121 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். அதன் மூலம் அந்த அறிவிப்பு நிறைவேற்றப்பட்டது.
ஒரு மாத காலத்துக்குள் மகிந்த தரப்புக்கு பாராளுமன்றத்தில் கிடைத்த நான்காவது தோல்வியாக இரு பதியப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிராத ஒரு தரப்பு அரசாங்கத்தை அமைத்திருப்பது இப்போதைய நெருக்கடிகளுக்கு அடிப்படை. தொடர்ச்சியாக இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் உட்பட நான்கு தடவைகள் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அந்த அரசாங்கம் தொடர்வது உலகில் எங்கும் நடக்க முடியாத ஒன்று. ஆளும் கட்சியினர் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தது மற்றொரு ஆச்சரியமான விடயம். பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில் எதிரணியினர் வெளிநடப்புச் செய்வது வழமை. ஆனால், பிரதமர், அமைச்சர்கள் உட்பட அரசாங்கத் தரப்பினர் சபையை விட்டு வெளிநடப்புச் செய்திருப்பது இதுதான் முதல் தடவையாக இருக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள கட்சி அரசாங்கத்தை அமைத்துக் கொள்வது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. இந்த அடிப்படையை மீறி அரசியலமைப்பிற்கு முரணான முறையில் செயற்படுவதற்கு ஜனாதிபதி முற்பட்டதுதான் தற்போதைய அரசியலமைப்பு பிரச்சனைகளுக்கு காரணம். அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார் மஹிந்த ராஜபக்ச தரப்பு பாராளுமன்றத்தில் தங்களுடைய பெரும்பான்மையும் நிலைநிறுத்துவதற்காக எடுத்துக்கொண்ட அத்தன்னை முயற்சிகளும் தோல்வி அடைந்திருக்கிறது.
பாராளுமன்றத்தில் அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பது நான்கு தடவைகள் வெளிப்படையாக உறுதிப்படுத்தப்படுகின்றது. இறுதியாக வெள்ளிக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் மொத்தமாகவுள்ள 225 வாக்குகளில் எதிர்க்கட்சித் தரப்பில் 121 வாக்குகள் கிடைத்திருப்பது பெரும்பான்மையை யார் கொண்டுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.
அரசாங்கத் தரப்பு பெரும்பான்மை பலம் தமக்கு இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட நிலையில்தான் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தது. பெரும்பான்மை பலம் அவர்களிடம் இருந்திருக்குமாயின் வாக்கெடுப்பில் எதிரணியைத் தோற்கடித்திருக்க முடியும். ஆனால், அரசியலமைப்பு, நிலையியற் கட்டளைகளை மீறியதாக சபாநாயகரின் செயற்பாடுகள் காணப்படுவதாக அவர் மீதான குற்றச்சாட்டுக்களையே அரச தரப்பு முன்வைத்து வருகின்றது. அதனைவிட, பாராளுமன்றத்தில் எத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றினாலும், தாம் ஆட்சி அதிகாரத்தைக் கைவிடாது தொடர்ந்தும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லப்போவதாகவும் அரசாங்கத்தை அமைத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.
ஐ.ம.சு.கூ.வின் இந்த அறிவிப்பு இரண்டு விடயங்களைத் தெளிவாகக் காட்டுகின்றது. ஒன்று – இணக்கப்பாடு ஒன்றுக்கு அவர்கள் தயாராக இல்லை. அதனால் முரண்பாடுகள் தொடரத்தான் போகின்றது என்பது. இரண்டு – பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பற்றி கவலைப்பாடாமல் அரசாங்கத்தைத் தொடரும் உறுதிப்பாட்டில் அவர்கள் இருக்கின்றார்கள் என்பது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தமக்கு ஆதரவானவராக இருப்பதால், பாராளுமன்றப் பெரும்பான்மை இல்லையென்றாரும் தம்மால் அதிகாரத்தைக் கொண்டு செல்ல முடியும் என அவர்கள் கருதுகின்றார்கள். அதற்காக முற்படுகின்றார்கள். “நிறைவேற்று அதிகார” ஜனாதிபதியும் அதற்கு இசைவாகவே செயற்படுகின்றார்.
இப்போது எழும்கேள்வி என்னவென்றால், எவ்வளவு காலத்துக்கு இவ்வாறு செயற்பட முடியும்?
தெரிவுக்குழு விவகாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. இது இறுதியல்ல. ஒரு ஆரம்பமாகவே பார்க்கப்பட வேண்டும். அரசாங்கத்துக்குப் பெரும்பான்மை இல்லை என்பது இன்று உலகம் முழுக்கத் தெரிந்த உண்மை. பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்திருப்பது கூட பகிரங்கம். இந்தப் பின்னணியில் தொடர்ந்தும் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படக்கூடிய திட்டங்கள் அனைத்தும் தோற்கடிக்கப்படலாம். குறிப்பாக அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தினம் இந்தக் குழப்பங்களால் தாண்டிப்போய்விட்டது. இது பாரிய பொருளாதார நெருக்கடிகளைக் கொண்டுவரப்போகின்றது. ஆக, இந்த நிலை தொடர்வது ஆபத்தானது.
அரசாங்கத் தரப்பினர் தேர்தல் ஒன்றை விரும்புகின்றார்கள் என்பதும், தமது அதிகாரம் இருக்கும் நிலையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை விரும்புகின்றார்கள் என்பதும் அவர்களுடைய செயற்பாடுகள் மூலமாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. மாகாண சபைகளுக்கான தேர்தல்களை வருடக்கணக்காக தாமதப்படுத்திய தரப்பினர், பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையிலேயே அதனைக் கலைத்து தேர்தலை நடத்த முற்படுகின்றார்கள். இது மக்களுடைய ஜனநாயகத்தைப் பாதுகாக்கவா அல்லது தமது அதிகாரத்தைப் பாதுகாக்கவா என்ற கேள்வி எழுகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவுடன் தனக்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த அரசியலமைப்புச் சதிக்கு மைத்திரி இணங்கினார். இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களம் இறங்கும் மைத்திரியின் விருப்பத்தை நிறைவேற்ற ரணில் தயாராக இருக்கவில்லை. தான் களம் இறங்குவதுதான் ரணலின் திட்டமாக இருந்தது. மைத்திரியை களம் இறக்க தான் தயாராக இருப்பதாக மகிந்த வழங்கிய உறுதியையடுத்தே ரணிலைத் தூக்கி எறிவதற்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்த மைத்திரி இணங்கியதாக கொழும்பு அரசியலில் வட்டாரங்கள் சொல்கின்றன.
தனது குடும்பத்தினர் மீதான வழக்கு விசாரணைகள் இறுதிக்கட்டத்துக்கு வருவதற்கு முன்னர் அதிகாரத்தைக் கைப்பற்ற மகிந்த துடித்தார். அந்த அவசரம் அவருக்கு இருந்தது. அதற்கு மைத்திரியை அவர் பயன்படுத்திக்கொண்டார். பாராளுமன்றத்தில் மேலும் 15 பேருடைய ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என மகிந்த எதிர்பார்த்தார். எஸ்.பி.திசாநாயக்க போன்றவர்கள் இதற்கான வாக்குறுதியைக் கொடுத்திருந்தார்கள். ஆனால், 50 கோடி வரையில் பேரம்பேசியும் வியாழேந்திரனைத் தவிர வேறு யாரையும் அவர்களால் வாங்க முடியவில்லை.
மகிந்த தரப்பு ஆட்சியை அமைத்தாலும் பாராளுமன்றத்தில் எதனையும் செய்ய முடியாமலிருப்பதற்கு அதுதான் காரணம். தமக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவருவதைத் தடுப்பதற்காகவே அரச தரப்பு பாராளுமன்றத்தில் 4 தினங்களாக குழப்பத்தை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்ததில் அரச அரப்பே குழப்பங்களை ஏற்படுத்துவது கூட வரலாற்றில் இதுதான் முதல் தடவையாக இருக்கலாம். பாராளுமன்றப் பெரும்பான்மை இல்லாமல் அரசாங்கத்தைக் கொண்டு நடத்த முடியாது என்பதுதான் இந்தக் குழப்பங்கள்.
இந்தக் குழப்பங்களுக்கான முடிவு ஜனாதிபதியின் கைகளில்தான் உள்ளது. ரணிலைத் தவிர்ந்த மற்றொருவர் பெயரைத் தந்தால் அவரைப் பிரதமராக்க தான் தயார் என மைத்திரி கூறியிருக்கின்றார். மகிந்தவை தான் நியமித்தது தவறு என்பதை இதன் மூலம் அவர் மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றார். அதேவேளையில், மீண்டும் ரணிலை பிரதமராக்க அவரது “ஈகோ” இடம்கொடுப்பதாகவும் இல்லை. ஆக, பாராளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான இந்தப் போட்டிக்கு நீதிமன்றம்தான் தீர்புக் கொடுக்க வேண்டிய நிலை வரலாம்!
– பாரதி
860 total views, 1 views today