மீண்டும் ரணில்; இனவாதத்தை கையில் எடுக்கும் மகிந்த..
கொழும்பு அரசியல் 50 நாட்களாகத் தொடர்ந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்திருக்கின்றது. அக்டோபர் 26 இல் திடீர்ப் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ, தான் ‘வகிக்காத’ பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகியுள்ளார். ரணில் தொடர்பில் தனது கடுமையான நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.
“கடவுளே வந்து கெஞ்சினாலும் ரணிலைப் பிரதமராக்கமாட்டேன்” என உறுதியாக இருந்த ஜனாதிபதி மைத்திரி தனது பிடியைத் தளர்த்திக்கொண்டமைக்கு காரணம் என்ன என்பதையிட்டும், எதிர்க்கட்சித் தலைமையில் கண்வைத்துள்ள மகிந்த ராஜபக்ஷவின் அடுத்த கட்ட அரசியல் உபாயம் என்ன என்பதையிட்டும் சுருக்கமாகப் பார்ப்போம்.
மைத்திரி – மகிந்த முன்னெடுத்த அரசியலமைப்பு சதியின் தோல்விக்கு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும், நீதிமன்றத் தீர்ப்புக்களும்தான் காரணம். குறிப்பாக டிசெம்பர் 12 இல் ரணில் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கைப் பிரேரணையுடன் அவர்களுடைய வீழ்ச்சி உறுதியாகியது.
ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரேரணை கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கு இறுதி நிமிடம் வரையில் ஜனாதிபதி முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இரண்டு முனைகளில் இதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ரணில் மீது வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்வது முதலாவது. த.தே.கூட்டமைப்பை நடுநிலை வகிக்கச் செய்வது இரண்டாவது. கூட்டமைப்பை வழிக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியை மைத்திரி தன்னுடைய கைகளிலேயே எடுத்திருந்தார்.
டிசெம்பர் 12 புதன்கிழமை நம்பிக்கைத் தீர்மானம் வரவிருந்த நிலையில், செவ்வாய்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைத் தொடர்புகொண்டார் ஜனாதிபதி. பாராளுமன்ற சமநிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடுதான் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. ரணில் விடயத்தில் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது முன்னரே உறுதியாகத் தெரிந்திருந்தது. அவ்வாறான நிலையிலும், ரணில் விடயத்தில் நடுநிலை வகிக்குமாறு வலியுறுத்துவதற்குத்தான் சம்பந்தனுடன் ஜனாதிபதி பேசினார்.
கூட்டமைப்பு நடுநிலை வகித்தால் ரணிலுக்கு ஆதரவாக 103 வாக்குகள்தான் கிடைக்கும். அதன்மூலம் பிரேரணையை நிறைவேற்ற முடியாது போய்விடும். இந்த எதிர்பார்ப்புடன்தான் சம்பந்தனுடன் மைத்திரி தொடர்புகொண்டார். கூட்டமைப்பை வழிக்குக் கொண்டுவருவதற்கு அரசியல் கைதிகள் விவகாரத்தையும் பயன்படுத்த முற்பட்டார்கள். அங்கஜனுடன் நாமல் ராஜபக்ஷ வெலிக்கடை சென்று கைதிகளைப் பார்வையிட்டார். அவசரமாக கைதிகள் விடுதலைக்காக என ஒரு குழு அமைக்கப்பட்டது. கைதிகள் மூலமாகவும் கூட்டமைப்பின் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க எடுக்க முயற்சிகள் பிசுபிசுத்துப்போனது.
இந்தநிலையில் புதன்கிழமை காலை பாராளுமன்றம் செல்வதற்கு முன்னதாக ஜனாதிபதியை கொழும்பு -7 இல் உள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேரில் சென்று சந்தித்த சம்பந்தன், தன்னுடைய முடிவை உறுதியாகத் தெரிவித்தார். சம்பந்தனுடன் மாவை சேனாதிராஜாவும், த.சித்தார்த்தனும் சென்றிருந்தார்கள். இதன்போதும் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் என மைத்திரி வலியுறுத்தியதாகத் தெரிகின்றது. ஆனால், “இந்த விடயத்தில் நாங்கள் உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கின்றோம்” என நிலைமையை விளக்கிய சம்பந்தன், அங்கிருந்து நேராக பாராளுமன்றத்துக்குப் புறப்பட்டார்.
சம்பந்தனின் பதில் அரசியலில் தனது பிடிகள் கையை விட்டுச் செல்கிறது என்பதை ஜனாதிபதிக்குத் தெளிவாக உணர்த்தியது. அந்த நிலையிலும், ரணிலைப் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியில் ஜனாதிபதி கூறினார்.
ரணில்தான் பிரதமர் என்பதில் ஐ.தே.மு. உறுதியாகஇருந்தது. மறுபுறத்தில் ரணிலுக்கு இடமளிப்பதில்லை என்பதை மைத்திரி உறுதியாகச் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் மகிந்த அரசு மீதான இடைக்காலத் தடையையை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தித் தீர்பளித்துவிட்டது. இந்தத் தீர்ப்பு ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டதுதான். இதனால், மகிந்த ராஜினாமா செய்ய வேண்டியது தவிர்க்க முடியாததாகியது. இந்த நிலையில் இரு தரப்பினரும் தமது பிடியைத் தளர்த்தாவிட்டால், நாடு கடுமையான நெருக்கடிக்குள் செல்லும் என்பதும், குழப்பங்கள் தொடரும் என்பதும் தெளிவாகியது.
இந்தப் பின்னணியில்தான் சபாநாயகர் கரு ஜயசூரிய முக்கியமான காய்நகர்த்தல் ஒன்றை வியாழக்கிழமை இரவு மேற்கொண்டார். நள்ளிரவில் ரணில், கரு ஆகியோர் ஜனாதிபதியின் வாஸஸ்தலம் வந்தார்கள். ஜனாதிபதியுடனான அவர்களுடைய சந்திப்பு 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. ஆனால், 50 நாட்களாகத் தொடர்ந்த நெருக்கடிக்கு முடிவைக்கொண்டுவருவதாக அந்தச் சந்திப்பு அமைந்தது. ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க இதன்போது மைத்திரி இணங்கியதாகத் தெரிகின்றது.
திடீர்ப் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த அரசுக்கு எதிராக 3 தடவை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, ரணிலுக்கு ஆதரவாகக்கொண்டுவரப்பட்ட நம்பிக்கைப் பிரேரணை என்பவற்றுடன் நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புக்களும் ஜனாதிபதிக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தது. அந்த நிலையிலும், பிரதமராக நீங்கள் பதவியேற்க முடியாதா என இறுதியாக ஒரு தடவை கருவிடம் ஜனாதிபதி கேட்டுப்பார்த்திருக்கின்றார். அவர் அதனை மீண்டும் மறுக்க மைத்திரிக்கு மாற்று வழி இருக்கவில்லை.
இந்த நிலையிலும் ரணிலைப் பிரதமராக்க மறுத்தால் ஐ.தே.மு. இரண்டு நகர்வுகளை மேற்கொள்ளும் என்பது ஜனாதிபதிக்குத் தெரிந்திருந்தது. இந்த இரண்டு நகர்வுகளும் அவருக்கு அச்சத்தைக்கொடுத்தது.
ஒன்று – தனக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்றைக் கொண்டுவர ஐ.தே.மு. முற்படும் என ஜனாதிபதி அஞ்சினார். சம்பந்தனுடனான சந்திப்பின்போது அவ்வாறு குற்றப்பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் அதனை நீங்கள் ஆதரிப்பீர்களா என அவர் கேட்டிருந்தமை இவ்விடயத்தில் அவர் எந்தளவுக்கு அச்சமடைந்திருந்தார் என்பதைக் காட்டியது. அப்போது சம்பந்தன் மைத்திரிக்குச் சாதகமாகவே பதிலளித்தார். அவாவது அவ்வாறான பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் அதனை தான் ஆதரிக்கப்போவதில்லை என சம்பந்தன் அப்போது உறுதியளித்தார்.
இவ்வாறான குற்றப்பிரேரணை பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்ற முடியாமல் போனாலும் கூட அவ்வாறான பிரேரணை ஒன்று வருவதே தன்னுடைய நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடும் என மைத்திரி அஞ்சினார். அது குறித்த பதிவு தன்னுடைய அரசியல் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடும் என அவர் கருதியிருக்கலாம். அதனைவிட, அரசியலமைப்பை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டுக்கள் கூட தன்னைக் கடுமையாகப் பாதிக்கலாம் என்ற அச்சமும் இவருக்கு இருந்தது.
இரண்டு- கொழும்பில் பாரிய மக்கள் பேரணிகளை ஏற்பாடு செய்து தன்னுடைய செயலகத்தையும், வாஸஸ்தலத்தையும் சுற்றிவளைப்பதற்கு ஐ.தே.மு. ஏற்பாடு செய்திருந்தது. இதுவும் பெருமெடுப்பில் இடம்பெற்றால் தன்னைக் கடுமையாகப் பாதிக்கும் என அவர் கருதினார். தனது பிடியை அவர் தளர்த்திக்கொள்ள இந்த இரண்டும்தான் பிரதான காரணம் என்றாலும், அதற்கு சில துணைக்காரங்களும் உள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தன்னுடன் முழுமையாக நிற்குமா என்ற கேள்வியும் மைத்திரிக்கு இருந்தது. மகிந்த ராஜபக்ஷ அமைத்த பொதுஜன பெரமுனவுடன் அவருக்கு ஏற்கனவே சில முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. இந்தப் பின்னணியில் மகிந்த ராஜபக்ஷவும் (தான் வகிக்காத பிரதமர்) பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். ரணிலைவிட தம்மிடம் வேறு தெரிவுகள் இல்லை என்பதில் ஐ.தே.க. தலைமை உறுதியாக நின்றதும் மைத்திரிக்கு நெருக்கடியைக் கொடுத்தது. இதற்கு மேலும் பிடிவாதமாக ரணிலை நியமிக்கமாட்டேன் என பிடிதாவமாக நிற்பது தனக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மைத்திரி உணர்ந்தார்.
ரணில் மீண்டும் பிரதமராகியுள்ள நிலையில் மைத்திரியும், மகிந்தவும் மீண்டும் இனவாதத்தைக் கைகளில் எடுத்திருக்கின்றார்கள். தனது “பதவி துறப்பு” நிகழ்வில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, புதிய அரசியலமைப்பின் மூலமாக ரணில் நாட்டைப் பிளவுபடுத்தப்போவதாகச் சொன்னார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பணயக்கைதியாக ஐ.தே.க. உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல, ரணிலின் பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரி, இராணுவ அதிகாரிகளையும், பௌத்த பிக்குகளையும் ரணில் சிறையில் அடைத்ததாகக் குற்றஞ்சாட்டினார். ஆக, இருவருமே தமது அரசியல் எதிர்காலத்துக்காக இனவாதத்தை கைகளில் எடுத்துள்ளார்கள்.
-பாரதி (இலங்கை)
675 total views, 1 views today
1 thought on “மீண்டும் ரணில்; இனவாதத்தை கையில் எடுக்கும் மகிந்த..”