மனித உடலில் தங்கமா?
அம்மா மார்கள் அவர்களின் பிள்ளைகளை அல்லது பேரப்பிள்ளைகளை „என் தங்கம்“ என்று கூப்பிடுவதை நிச்சயமாகப் பார்த்திருப்பீர்கள். எனது அம்மா என்னை இன்று கூட அப்படித் தான் அழைப்பார். அதே போன்று „தங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் நானே“ என்று பாடல் வரிகள் கூட இருக்கின்றன. ஆனால் இப்படி தங்கம் தங்கம் என்று ஒருவரை அழைக்கின்றோமே, இந்த விஷயத்தில் எவ்வளவு உண்மை அடங்கி இருக்கின்றது என்பதை எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா? அடடா, இது என்னடா வழக்கம் போல் மர்மமாகப் பேச ஆரம்பித்து விட்டேன் என்று யோசிக்கின்றீர்களா? சரி சரி கவலையை விடுங்கள். நானும் தங்கம் தான், அதே போல் நீங்களும் தங்கம் தான். இதற்குப் பின்னால் அப்படி என்ன தான் மர்மம் இருக்கின்றது என்பதை நீங்களும் அறிய விரும்பினால் கண்டிப்பாக தொடர்ந்து படியுங்கள்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாம் அனைவரும் இந்த உலகில் பிறக்கும் பொழுதே நமக்கு சொந்தமாகக் கொஞ்சம் தங்கத்தையும் எடுத்துக் கொண்டே வருகிறோம்! ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், நமது உடலில் 0,0002 கிராம் தங்கத் துகள்கள் உள்ளன. இதில் பெரும்பான்மையான தங்கத் துகள்கள் நமது இரத்தத்தில் தான் கலந்து இருக்கிறது. எனவே, இரத்தத்தில் கலந்திருக்கும் தங்கத் துகள்களை வைத்து நீங்கள் ஒரு 8g கொண்ட தங்கக் கட்டியை செய்யப் போகின்றீர்கள் என்றால், அதற்குச் சுமார் 40,000 மக்களின் இரத்தத்தை உறிஞ்சி எடுத்தால் தான் முடியும். எனவே, தயவு செய்து அப்படி ஒன்றமே செய்துவிடாதீர்கள் நண்பர்களே!
மனித உடலில் மட்டும் இல்லை, வேறு எதிர்பாராத இடங்களிலும் கூட தங்கத்தைக் கண்டுபிடிக்கலாம். டக்லஸ் பிர் (Douglas Fir) மற்றும் கனிசக்கில் (Honeysuckle) போன்ற சில தாவரங்கள், மண்ணிலிருந்து தங்கத்தை உறிஞ்சி எடுக்கிறது. ஆனால் இந்தத் தாவரங்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பது என்றால் அது மிகவும் கஷ்டமான விஷயம். அப்படித் தங்கத்தைப் பிரித்து எடுப்பதற்குத் தேவைப்படும் பணம், அதில் இருக்கும் தங்கத்தின் பெறுமதியை விட அதிகமானது. எனவே இந்தத் தாவரங்களில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பதில் ஒரு லாபமும் கிடையாது.
ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகிலேயே அதிகமாகத் தங்கத்தைக் கொண்ட சுரங்கம், கடல் தான். கடலில் 2 கோடி டன் கும் மேல் தங்கத் துகள்கள் அங்கும் இங்கும் என்று பரவி மிதந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் என்ன, அந்தக் கடல் நீரில் உள்ள தங்கத்தை பிரித்தெடுப்பது மிகவும் கஷ்டம். எனவே அதில் எங்களுக்கு ஒரு லாபமும் கிடைக்காது.
என்ன நண்பர்களே, நானும் தங்கம், அதே போல் நீங்களும் தங்கம் தான் என்று நான் ஆரம்பத்தில் சொன்னது சரி தானே? இந்த விஷயம் ஆச்சரியமாக இல்லையா?
விமானத்தில் பறக்கும் பொழுது நிலநடுக்கத்தை உணர முடியுமா?
வெளிநாடொன்றுக்கு உல்லாசப் பயணம் போவதற்காக ஒரு விமானத்தில் போகின்றீர்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள். பொதுவாக பயணிகளைக் கொண்டு செல்லும் ஒரு விமானம் 10 கிலோ மீட்டர் உயரத்துக்கும் மேல் பறக்கும். அப்படிப் பறந்து போகும் பொழுது, திடீரென்று பார்த்தால் கீழே, நில நடுக்கம் ஏற்படுகின்றது. அப்படி ஏற்பட்டால் என்ன நடக்கும்? விமானத்தில் பறக்கும் உங்களால் அந்த நில நடுக்கத்தை உணர முடியுமா? அட… உணர முடியுமா என்கிற கேள்வியை விட, அந்த நில நடுக்கம் விமானத்துக்கு ஏதும் பாதிப்பை ஏற்படுத்துமா? இதைப் பற்றி எப்பொழுதாவது சிந்தித் துப்பார்த்திருக்கின்றீர்களா? இல்லையா? சரி பரவாயில்லை, அதுக்கு தானே நான் இருக்கிறேன். இந்தக் சுவாரசியமான கேள்விக்குப் பதிலை நீங்களும் அறிய விரும்பினால், கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்.
விமானத்தில் பறக்கும் பயணிகளால் ஒரு நில நடுக்கத்தை உணர முடியுமா? இதற்குப பதில் தெரிய முதல், பூமி எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பார்ப்போம். நமது பூமியில் நிலம் மற்றும் மலைகள் மட்டும் இல்லை, அதைத் தொடர்ந்து பரந்துவிரிந்த கடல்களும், பல்லாயிரம் கிலோ மீட்டருக்கும் உயர்ந்த புவியின் வளிமண்டலமும் நான்கு புறமும் சூழ்ந்திருக்கிறது.
உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது போல், பூமியின் அடியில் நடுக்கம் ஏற்படும் பொழுது, அதன் அதிர்ச்சி அலைகள், கடல் அடி மட்டத்தைத் தாக்குவதால், பூமிக்கு மேலே அலைகள் சுனாமியாய் எழுகின்றன. இப்படி இருக்கும் பொழுது, ஏன் இந்த அதிர்ச்சி வளி மண்டலத்தை எட்டக் கூடாது?
பொதுவாக ஒரு பூகம்பம் ஏற்படும் பொழுது இரு வகையான அலைகள் தோன்றும். ஒன்று P அலை அதாவது Primary அல்லது Pressure அலை, இரண்டாவது S அலை, அதாவது Secondary அலை. இந்த இரு வகை அலைகளிலும் உள்ள விசேஷம் என்ன தெரியுமா? P அலைகள் ஒரு பிரச்சனையும் இல்லாமல், திடப் பொருள், நீர்மம் மற்றும் வாயு ஆகிய அனைத்தின் ஊடாகவும் செல்லக்கூடியது, ஆனால் S அலைகளால் திடப் பொருள் ஊடாக மட்டும் தான் செல்ல முடியும். எனவே, கடலின் அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தினால் ஏற்படும் இந்த இரு வகை அலைகளிலும் நிலம் ஆகிய திடப் பொருளைக் கடந்து, கடலுக்குள் செல்லக்கூடியது P அலைகளால் மட்டும் தான். அப்படி கடலூடாகச் செல்லும் இந்தப் P அலைகள் கடைசியில் வளிமண்டலத்துக்குள் நுழையும். ஆனால் அப்படி நுழையும் போது, என்ன நடக்கும் தெரியுமா? அந்தப் P அலைகள், ஒலி அலைகளாக, அதாவது ளழரனெ றயஎநள ஆக மாறிவிடுகின்றன.
ஆனால் இந்த ஒலி அலைகளின் அதிர்வெண், அதாவது frequency 20 HZF கீழே உள்ளதால் மனிதர்களால் அந்த ஒலியைக் கேட்க முடியாது. இப்படி 20HZF கீழே உள்ள ஒலியை ஆங்கிலத்தில் infrasound என்றும் அழைப்பார்கள். சரி பரவாயில்லை, இந்த ஒலியை நம்மால் கேட்க முடியும் என்றே எடுத்துக்கொள்வோம். அப்படி இருந்தாலும், இந்த ஒலி வாயு மண்டலத்தைக் கடந்து மேலே பறந்துகொண்டு இருக்கும் விமானத்தை அடைந்தாலும் கூட, அதன் சத்தம் குறைந்து தான் அடையும். அது ஏன் என்றால் அந்த ஒலி புவியின் நிலத்தில் இருந்து 10 KMF மேல் மேல்நோக்கி செல்லவேண்டும். அப்படிச் சென்று விமானத்தை அடையும் infrasound கடைசியில் விமானத்தின் விசையாழி, அதாவது Turbinesஇன் பலத்த ஒலியால் முற்றிலும் அடக்கப் படுகின்றது.
எனவே பூமியில் நில நடுக்கம் ஏற்பட்டால், அதன் விளைவை நம்மால் ஒரு விமானத்தில் இருக்கும் போது உணரவோ, அல்லது கேட்கவோ முடியாது. அவ்வளவு தான்!
சரி நண்பர்களே, இனி நீங்கள் கூறுங்கள்! இந்த விஷயம் உங்களுக்கு முன்பே தெரியுமா? இதற்குரிய பதிலை மட்டும் இல்லை, எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில் (www.facebook.com/scinirosh) அறியத் தாருங்கள்!
–டாக்டர்.நிரோஷன்.யேர்மனி
813 total views, 1 views today
1 thought on “மனித உடலில் தங்கமா?”