கனா கண்டேன் தோழி!

முல்லைப்பூ போலே வெள்ளைக்கசவு அணிந்த மலையாளப் பெண்மணிகள் கூட்டமாய் எதிர் நிற்கின்றனர் போலும் என்று எண்ணவைக்கும் நாட்கள் ஐரோப்பாவில் பனி பெய்யும் நாட்கள், உலகில் சின்ன சின்ன ஆசைகளை பட்டியலிட்டால் அதில் “திசம்பர் – ஜனவரி” மாதங்களில் தினமும் காலை எழுந்து சாளரத்தின் திரையை நீக்கி அன்று வெண்பனி வந்ததா?” என்று பார்ப்பதை ஒன்றாய்ச் சேர்க்கலாம். (தோழி)

கயல்விழிக்கு அந்த பழக்கம் தொற்றிக்கொண்டிருந்தது, நிதம் எழுந்ததும் சாளரத்தின் திரையை நீக்கிப் பார்ப்பாள், பனி இல்லையெனில் அது நாளை வருமென மனதில் நினைத்துக்கொண்டு செல்வாள். இவ்வாறு மார்கழியும் முடிந்து தையும் வந்துவிட்டது பனி பெய்வதாய் தெரியவில்லை.

கல்யாணப் பருவமெய்தி மணவாளனுக்கு காத்திருக்கும் பெண்களின் நிலை இரு தலைக்கொள்ளி எறும்பைப்போல் தான், அதுவும் மனதில் காதலை கொண்டு நடக்கும் பெண்களுக்கு மன இறுக்கத்தை அதிகம் தரும் காலம், கயல்விழிக்கு தெய்வாதீனமாய் வேலை நிமித்தமாய் ஐரோப்பா வந்த தருணம் கவலைகள் மறந்து சற்றே ஆசுவாசத்தை தந்திருந்தது. பெரிய கவலைகளை சிறிய சந்தோஷ தருணங்களில் அவள் மறந்திருந்தாள், ஐரோப்பாவின் புது சூழலும் புது மனிதர்களும் அவளுக்கு உலகமெனும் பெரிய வீட்டை கண்முன் காட்டியிருந்தது.

சில நாட்கள் வார இறுதிநாட்கள் மகிழ்ச்சியாக நொடியென கடந்து சென்றுவிடும், சில நாட்கள் அது ஒரு யுகம்போலே இருக்கும், அந்த வார இறுதி உற்ற தோழி டென்சி ஊரில் இல்லை, அடுத்த நாள் வழக்கம் போலே அலுவலகத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். என்ன கயல்விழி முகம் வாட்டமாயிருக்கு ? வெண்பனி வரவில்லையா ? அது தான் கவலையா என்றாள் டென்சி. சிறுமுறுவலுடன் ஆமாம் வெண்பனியும் வரவில்லை, வரவேண்டிய செய்தியும் வரவில்லை என்றாள். அட அவ்வளவு தானே இண்டைக்கு வீட்டுக்குப் போய் வெண்பனி, வேண்டியது, வேண்டாதது எல்லாத்தையும் ஒரு சீட்டில் எழுதி தலையணையின் அடியில் வைத்துவிட்டு தூங்கு அதுவே கனவில் வரும் நாளை நனவாகும் மாறும் என்றாள்.

“போ டென்சி எப்போதும் உனக்கு விளையாட்டு தான்” என்றாள், அட உண்மையை தான் சொல்கிறேன் வாய் கிழிய இலக்கியம் பேசும் உனக்கு தெரியாத இந்த கனவெல்லாம் பற்றி ? என்றாள் டென்சி, தெரியாது நீ தான் சொல்லேன் என்று கயல்விழி வினவ தொடர்ந்து அவள் சொன்னாள்.

மதுரைக்கு அப்புறத்தே திருவில்லிபுத்தூர் என்றொரு ஊர் உண்டு குயில்கள் கூட அந்த வீட்டு வாசலுக்கு வந்துதான் பாட கற்றுக்கொள்ளுமாம் அப்படிப்பட்ட வீடு அந்த பெண்ணுடைய வீடு, பேர் கோதை, அவள் நெடுநாள் கண்ணனை காதலித்தாள், இதென்ன மடமை எப்போதோ பிறந்த கண்ணனை அதுவும் தெய்வத்தை எப்படி இந்தப் பெண் காதலித்து மணம்முடிப்பாள் அனைவரும் கேலி செய்திருந்தனர், ஆனால் அவளோ அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை கனவு கண்டாள் அதை பாட்டாகவும் எழுதி வைத்தாள். இதோ ஒரு பாட்டு சொல்கிறேன் கேள்
“நாளை வதுவை-மணம் என்று நாள் இட்டு
பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்”
இந்த ஊராரெல்லாம் சொல்கிறார்களே அவர்கள் வாய்கள் எல்லாம் அடைத்தார்த் போலே, நாளை திருமணம் என்று நிச்சயித்து பாக்கும் கமுகும் கொண்டு அலங்கரித்த பந்தலுக்கு காளை போன்ற அவன் வரக்கண்டேன் தோழி என்று தன்னுடைய கனவை உரைக்கிறாள்.
இப்படி கனவு கண்டவள் தான் கடைசியில் காதலித்தவனையே கைப்பிடித்தாள் என்று நீ கேள்விபட்டதில்லையா ? என்றாள், சிரித்தவளாய் கயல்விழி சொல்வாள் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இந்நேரத்தில் உன்வாயால் கேட்டது அந்த கோதையே வந்து தன்கதை சொன்னது போல இருந்தது என்றாள்.

வழக்கமாய் ட்ராமில் ஏறி அவரவர் நிறுத்தங்களில் இறங்கி இல்லங்கள் சேர்கின்றனர், கயல்விழி பலநாள் கழித்து டென்சி சொன்ன நாச்சியார்திருமொழியின் பக்கங்களை திருப்புகிறாள், மனதில் எண்ண ஓட்டங்களுக்கு ஆசுவாசமாக அமைந்தது அந்த வரிகள், அயர்ந்து உறங்கிவிட அடுத்தநாள் எழுந்து சாளரத்தின் திரைநீக்க வெள்ளை உடுத்தியிருந்தது ஆம்ஸ்ட்ராடம் நகரம், அதே சமயம் ஓரமாக அடித்த கைபேசியை எடுத்து காதில் வைத்த அவளுக்கு நல்லசெய்தியும் காத்திருந்தது ! தூரத்தில் அந்த வாரணமாயிரம் புத்தகத்தின் பக்கங்கள் மெல்ல “கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்” என்ற வரிகளை காட்டி நின்றது.

— தனசேகர். பிரபாகரன்.

746 total views, 1 views today

1 thought on “கனா கண்டேன் தோழி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *