ஹோட்டல் சாப்பாடு
பாபுவின் பிள்ளைகள் ஹோட்டலில் ஒருபோதும் சாப்பிட்டதில்லை. பள்ளிக்கூடத்தில் நண்பர்கள், “நான் மலேசியா றெஸ்ற்றோரண்டில் சாப்பிட்டேன்… நான் சைனீஷில் சாப்பிட்டேன்…. நான் கொரியனில் சாப்பிட்டேன்” என்று சொல்லும்போது அவர்கள் வாய் ஊறும்.
“ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஆகாது. ஒரே கொழும்பு” என்று சொல்லுவார் தந்தை பாபு. சமயத்தில் சில ஹோட்டல் வீடியோக்கிளிப்புகளையும் எடுத்து விடுவார். அது ஹோட்டல் வண்டவாளங்களையெல்லாம் புட்டுப் புட்டு வைக்கும்.
மனைவி சித்திரா ஒரு அப்பிராணி. ஏதோ ஹோட்டல் சாப்பாடு தனக்கும் ஒத்துவராது என்பதுமாப்போல் இருந்துவிடுவாள்.
ஒருநாள் பாபுவின் மனம் கல்லுக்குள் ஈரம் என்பதுமாப் போல் இளகியது. எந்த ஹோட்டல் நல்லது என நெட்டில் உசாவினார்.
“அப்பா… தாய்” என்றால் மகள். “தோசா கட்” என்றாள் மனைவி. சித்திராவின் எத்தனைநாள் ஆசை அது. கேட்க நினைத்து அடக்கி வைத்த ஆசைகளில் அதுவும் ஒன்று. இரண்டு பையன்களும் எதுவும் சரி என்று பேசாமல் இருந்தார்கள். கடைசியில் ‘கோல்டன் லீவ்’ என்ற சைனீஸ் ரெஸ்ற்ரோரன் செல்வது என முடிவு செய்தார்கள். ‘தங்க இலை’ என்ற அந்த சாப்பாட்டு விடுதியை நெட்டில் தேடினார் பாபு. அதன் விலைப்பட்டியலைப் பெற்றுக் கொண்டார். இருவர் சாப்பிட குறைந்தது 38 டொலர்கள் போதும். நூறுக்குள் அமுக்கிவிடாலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டார்.
எல்லோரும் புறப்படத் தயாரானார்கள். ரெஸ்ற்ரோரண்டில் வர்ணவிளக்குகள் பளிச்சிட்டன. விளக்கு வெளிச்சத்தில் எவரைப் பார்த்தாலும் அழகாகவே தென்பட்டார்கள். அவர்கள் முன்னே காட்சி தரும் சாப்பாட்டு வகைகளும் அப்படியே.
முன் தொட்டிக்குள் உயிருள்ள மீன்கள் நண்டுகள் லொப்ஸ்ரர்கள் அசைந்தன. மகள் தன் மொபைல்போனிற்குள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டாள். தொட்டி முன்னே ஷெல்பி எடுத்துக் கொண்டார்கள். வட்டவடிவ மேசை ஒன்றில் அமர்ந்து கொண்டார்கள். ‘மெனு’க் காட்டை நோண்டியபடி இருந்த பாபுவின் முகம் திடீரெனக் கறுத்தது. அழகான பெண்ணின் முகத்தில் ஒரு கருப்பு மச்சம் இருப்பது போல் சித்திராவிற்கு பாபு தென்பட்டார். பாபு அங்கு உலாவிய பரிசாரகர் ஒருவரைக் கூப்பிட்டு, தான் நெட்டில் பார்த்த சாப்பாட்டின் விலை, மெனுக்காட்டில் இரட்டிப்பாக இருப்பதாகச் சொன்னார். பரிசாரகர் பாபுவை அமைதி காக்கும்படி கூறிவிட்டு காசு வாங்கும் கல்லாவிற்குப் போய் உள்ளே விசாரித்தார். போன வேகத்தில் திரும்பிய பரிசாரகர், “அது சேர் பழையது. கடந்த இரண்டு வருடங்களாக வெப்பை அப்டேட் செய்யவில்லை. எல்லாம் விலையேறிவிட்டது” என்று சொன்னார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு ’மெனு’க் காட்டை மீண்டும் ஆராய்ச்சி செய்தார் பாபு.
திடீரென்று மேசையை விட்டு எழுந்தார் பாபு. பரிசாரகன் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தான்.
“அம்மாவிற்கு சீரியஸ் என்று ரெலிபோன் கோல் வந்தது. அம்மாவை அம்புலன்ஸில் ஹொஸ்பிற்றல் கொண்டு போய்விட்டார்கள். நாங்கள் இன்னொருநாள் வருகின்றோம்” சொல்லியபடி ஹோட்டலை விட்டு வெளியேறினார் பாபு. அப்படியொரு அம்மா இல்லை என்பதை ஏலவே தெரிந்திருந்த மனைவியும் பிள்ளைகளும் அவருக்கு முன்னாலே ஹோட்டலை விட்டு வெளியேறி வாசலில் காத்திருந்தார்கள். தங்க இலையை அன்று அவர்கள் காணாதது அவர்களுக்கு மனவருத்தத்தைக் கொடுத்தது.
“நான் ஒரு நல்ல ஐடியா வைத்திருக்கின்றேன். உங்கள் எல்லாரையும் இப்படியே ஒரு இரவு மார்க்கெட்டிற்குக் கூட்டிப் போகப் போகின்றேன். ஹோட்டல் சாப்பாட்டின் விலையை விட கால்வாசிக்கு சாப்பாடு செய்யும் விதத்தில் அங்கே பொருட்களை வாங்கலாம். விதம் விதமாகச் சமைத்துச் சாப்பிடலாம். காசும் மிச்சம். உடம்புக்கும் ஹெல்தி” சொல்லியபடியே காரை முடுக்கினார்.
அப்படியே இரவு மார்க்கெட்டும் வர்ணவிளக்குகளில் ஜொலித்தது. அங்கும் மக்கள் அழகாகவே தென்பட்டார்கள். அழுகிய மரக்கறிகளும் அழகாகத் தென்பட்டன. ஒரே ஆரவாரம். ஆட்டிறச்சி, விதம் விதமான மீன் வகைகள், முயல், கோழி, நண்டு, கணவாய் அது இது எண்டு எல்லாவற்றையும் வாங்கினார். நூறு டொலர்கள் வர வாங்குவதை நிற்பாட்டினார். மனைவி வாய் திறக்கவில்லை. எத்தனை வருடங்கள் திறக்காத வாய் அது?
“அப்பா… இதுகளையெல்லாம் ஆர் சமைக்கிறது?” மகள் கேட்டாள்.
“ஏன் … அம்மாதான்.”
“அம்மாவுக்கும் றெஸ்ற் வேணும். ஒருநாளாவது சமையல் மிச்சமெண்டுதானே ஹோட்டலுக்கே வந்தனாங்கள்.”
“நானும் உதவி செய்கின்றேன்”
“நீங்கள் பாத்திரங்கள் மாத்திரம்தான் கழுவிவியள். மிச்சமெல்லாம் அம்மாதானே செய்ய வேண்டும்.” என்றார்கள் பையன்கள் இருவரும்.
வீட்டிற்கு வந்து எல்லாம் கழுவி வெட்டி சமைத்து முடிய நான்கு மணித்தியாலங்கள் எடுத்தன.
”பாவி மனிசன்! திடீரென்று ஆசையைக் காட்டிப்போட்டு எண்டுமில்லாதவாறு மூண்டுமடங்கு வேலை வாங்கிப் போட்டுது” மூச்சிரைத்தாள் சித்திரா.
சாப்பாடு தயார் என மனைவி சொல்லும்போது பிள்ளைகள் குறட்டை விட்டு நித்திரை கொண்டிருந்தார்கள். தங்க இலையைத் தடவிப் பார்க்கமுடியாமல் நித்திரையைத் தழுவி இருந்தார்கள் அவர்கள். அவர்களைத் தட்டி எழுப்பிக் கழைத்துப் போன அப்பாவும் அம்மாவும் சாப்பிட உட்கார்ந்தார்கள். சமைத்த களைப்பில் சித்திராவிற்குப் பசி போய்விட்டது. பாபு மாத்திரம் வீடு என்னும் ஹோட்டலில் சுவையாக, ஹெல்த்தியாகச் சாப்பிட்டார். சாப்பிட்டு ஏப்பம் வந்ததும் நண்பனுக்கு தொலைபேசி எடுத்தார். தன்னுடைய ‘அந்தநாள்’ திறமையைப் பறை சாற்றினார்.
“எட அ….! இதைத்தானே நாங்கள் ஒவ்வொருநாளும் வீட்டிலை சாப்பிடுகின்றோம். ஒருக்கா உன்ரை குடும்பத்தைக் ஹோட்டலுக்குக் கூட்டிப் போடா” என்ற சத்தம் மறுமுனையில் ரெலிபோன் வாயில் இருந்து அலறியது.
– சுருதி –
791 total views, 1 views today
1 thought on “ஹோட்டல் சாப்பாடு”