நமக்கென்று சில கடமைகள் உண்டு. அதை நம்கையால் செய்வது நன்று!
இவ்வுலகில் நாம் கடவுளாக வணங்க வேண்டியவர்கள் நமது பெற்றோர்கள். பிள்ளைகள் பிறந்ததிலிருந்தேஅவர்களுக்குப் பிடித்தவற்றையும் எவையெல்லாம் நல்லதாகவும் தேவையாக இருக்கும் என நினைத்துப் பார்த்துப் பார்த்துச் செய்யும் பெற்றோர்களுக்கு நாம் என் செய்யமுடியும்?
எம்மால் முயன்றவற்றை செய்யவேண்டுமல்லவா? பணம் கொடுப்பதனால் சரியாகிவிடுமா? அன்பினை நாம் காசால் வாங்கமுடியுமா? பொருட்கள் வாங்குவது போல் நம்மால் பாசத்தை வாங்கமுடியாது.
அன்பு என்பதனை அன்பினாலே பெற்றுக் கொள்ளுங்கள். அன்பு நிறைய உள்ளவர்கள் மேலோர்.
அன்பின் மறு உருவம் தாய் தந்தையரே!
ஆகவே உங்களால் இயன்ற அளவு உங்கள் பெற்றோருக்கு உதவி செய்யுங்கள்.
முதலில் நாம் அவர்கள் துன்பப் படும் அளவில் உரையாடக்கூடாது. நாவை அடக்காவிடின், சொற்களைக் கூறிய பின் நாமும் வருந்துவோம் அல்லவா. எதிர் மாறாக உரையாடாமல் இருந்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவர்.
புலம் பெயர் நாட்டில் வாழும் நம் பெற்றோருக்கு இங்கு பிறந்து வளர்ந்த நாம் அவர்களின் பெரிய பிரச்சினையாக இருக்கும் மொழியினைக் குறைக்க வேண்டும். அதாவது அவர்கள் மருத்துவரிடம் செல்லும் போது அல்லது வங்கிக்குச் செல்லும் போது துணைக்குச் சென்று பொருமையோடு மொழிபெயர்ப்பினைச் செய்யவேண்டும்.
அதே போன்று வரும் அஞ்சல்களையும் மொழி பெயர்க்க வேண்டும்.
ஒழுங்காக வாசித்துச் செயற்படவில்லையென்றால் சில சமயங்களில் இக்கட்டான சூழ்நிலை வந்துவிடும். அவர்களுக்கு மொழியினையும் சொல்லிக் கொடுக்கலாம். மொழி தெரியாத நாட்டில் வாழ்வது கடினம்.
நம் பெற்றோர்கள் எங்களுக்காகவே வாழ்பவர்கள். விடுமுறைக்குச் சிலர் செல்வதும் இல்லை. பிள்ளைகளுக்காகவே வாழ்பவர்கள். இவர்களை பிள்ளைகள் ஆகிய நாம் விடுமுறைக்குக் கூட்டிச் செல்லலாம் அல்லவா? புதியவற்றைக் காட்டி மகிழ்விக்கலாம்.
அவர்களின் உறவினரையும் தாய் தந்தையரையும் விட்டு புலம் பெயர் நாட்டுக்கு வந்து இருக்கும் நம் பெற்றோருக்கு மன அழுத்தம் என்பது ஒரு பெரிய பிரச்சினை. இவ்வழுத்தம் நீங்க நாம் அவர்களுடன் உரையாட வேண்டும். அவர்களின் தாய் நாட்டைப் பற்றியும் உறவினர் பற்றியும் உரையாட வேண்டும்.
இவ்வழுத்தம் நீPங்குவதற்காகவே சுற்றுலா செல்லலாம். அவர்களின் கவலைகள் குறையும். தாய் நாட்டுக்கும் கூட்டிச் செல்லலாம்.
வீட்டில் இருக்கும் பொழுது சிறிய வேலைகள் செய்து கொடத்தல் மற்றும் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குதல் மிகவும் உதவியாக இருக்கும்.
முக்கியமாக நாம் குழந்தைகளாக இருக்கும் போது நம்மை நன்றாகப் பார்த்த எங்கள் பெற்றோர்கள் குழந்தைகளாக மாறும்பொழுது அதாவது முதியவர்களாக ஆகும்போது அவர்களைப் பராமரிப்பதும் கவனமாகப் பார்ப்பதும் எங்கள் கடமை?
நம் வீட்டிலே அவர்களைப் பார்ப்பது போல் வராதல்லவா? எங்களுடன் எங்கள் வீட்டிலே இருந்தால் துணை எங்களுக்கும் இருக்கிறார்கள் என்று நினைத்து ஆறுதல் அடைவார்கள்.
எந்த வகையில் உதவி செய்ய முடியுமோ செய்யுங்கள். இதுவே நம் கடமையாகும்.
கடைகளுக்குச் சென்றால் நீங்கள் மறவாது அவர்களுக்கும் முக்கியமாக வெற்றிமணிப் பத்திரிகையை எடுத்துச் செல்லுங்கள். அவர்கள் 25 வருட வாசகர்கள் நிச்சயம் மகிழ்வார்கள்.
எந்த சூழ்நிலையிலும் சுயநலத்தோடு சிந்திக்காது எங்களை விட்டுக் கொடுக்காத எம் தாய் தந்தையரை நாமும் ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது!
-றஜினா தர்மராஜா
1,248 total views, 1 views today
1 thought on “நமக்கென்று சில கடமைகள் உண்டு. அதை நம்கையால் செய்வது நன்று!”