இருட்டடிப்பால் உலகம் இருண்டு கிடக்கிறது

எந்தக் கல்வெட்டும்
சுமந்ததில்லை
உழைத்தவரின் பெயர்களை

பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கவிதையின் வரிகள் மனதுக்குள் மெல்ல மெல்ல மிதக்கின்றன. வரலாறுகளில் புதைக்கப்பட்டு காணாமல் போன மனிதர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. புதைக்கப்பட்ட அந்த வரலாறுகளின் நெற்றிகளில் தான் வேறு சில பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவையே வரலாற்றில் இடம்பிடிக்கின்றன. அவையே வரலாறுகளாகவும் இடம் பிடிக்கின்றன. மற்றவை வரலாற்றை உருவாக்குகின்றன.

அசோகர் சாலையோரங்களில் மரங்களை நட்டார் என படிக்கும் போது, அந்த மரக்கன்றுகளை நட குழிகளை வெட்டிய நபர்களை நாம் நினைக்கிறோமா ? மரங்களை நட்ட உழைப்பாளிகளை நினைக்கிறோமா ? அதற்கு நீரூற்றிப் பேணி வளர்த்த பணியாளர்களை நினைக்கிறோமா ? இல்லை என்பதே பதில் ! ஆனால் அசோகர் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்.

கலிங்கம் கொண்டான் எனு பட்டப்பெயரை மணிமுடியாய் சூட்டி அழகுபார்க்கிறோம். குருதியின் பிசுபிசுப்போடும், வீரத் தழும்புகளோடும், புறமுதுகிடா ஆண்மையோடும் களம் கண்ட ஆயிரக்கணக்கானோரை நாம் மறந்து விடுகிறோம்.

அதோ நீளமாய்த் தெரிகிறதே அந்த பாலம் ! அதைக் கட்டியவர்களின் பட்டியலில் என்றேனும் ஒரு உழைப்பாளனின் பெயர் இடம்பெற்றதுண்டா ? அதோ அந்த மிகப்பெரிய கோயிலைக் கட்டியவர்களின் பெயர்களில் ஏதேனும் தொழிலாளியின் பெயர் இடம்பெற்றதுண்டா ? கட்டளையிடுபவனைப் புல்லரிக்க வைக்கும் உலகம், கட்டளையை செயல்படுத்தியவனை செல்லரிக்க விடுகிறது.

இது வரலாற்றின் கதைகள் மட்டுமல்ல. எப்போதும் நடந்து கொண்டே இருக்கும் நிகழ்வுகள் தான். தலைவர்களும், அரசியல்வாதிகளும் தங்களுக்கென கல்வெட்டுகளை உருவாக்கும் முனைப்பில் இருக்கும் போது, பணியாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். திறமைசாலிகளின் இரத்தமும், சிந்தனையும் உறிஞ்சப்பட்டு , அவர்களுடைய உரிமைகளின் மேல் இன்னொருவர் வந்தமர்வதே காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

இருட்டடிப்பு செய்வதற்கு நவீனம் பல வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறது. வெளிச்சத்தைப் புதைத்து, இருளை வெளிச்சமாய்க் காட்டுவது ஒரு யுத்தி. யாரைப் பாராட்ட வேண்டுமோ, யாரை அங்கீகரிக்க வேண்டுமோ அவர்களை விலக்கி விட்டு, இருள் வந்து அந்த இருக்கைகளில் அமர்ந்து கொள்கிறது. பாராட்ட வேண்டியவனை நிராகரித்து, இன்னொருவரைப் பாராட்டுவது இந்த யுத்தி.

தேவையான இடத்தில் வெளிச்சத்தின் அளவை குறைப்பதும், தேவையற்ற இடத்தில் வெளிச்சத்தை அதிகரிப்பதும் இன்னொரு யுத்தி. காட்டுத் தீ பற்றி எரியும் இடத்தில், அகல் விளக்கின் ஒளி அறியப்படுவதில்லை. உண்மையான பணி செய்தவனை ஒப்புக்குப் பாராட்டி விட்டு, இன்னொருவருன்னு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி விழா எடுப்பதைப் போல என வைத்துக் கொள்ளலாம். செய்தித்தாளின் எட்டாம்பக்கத்தில் ஓரமாய் சாதனையாளன் நாலுவரியில் அறிமுகப்படுத்தப்பட, முதல் பக்க தலைப்புச் செய்தியில் இன்னொருவன் அதற்குரிய புகழைப் பெற்றுச் செல்வான்.

ஒருவனுடைய பெயரை இருட்டடிப்பு செய்வது என்பது வழிப்பறிக்குச் சமம். பகல் நேர வழிப்பறி என்று சொல்லலாம். வாய்க்கால் வெட்டி நதியைக் கடத்திச் செல்வதைப் போன்றது அது. வயலுக்குள் பாயவேண்டிய நீரைக் கடத்தி பாலை நிலத்தில் பாய விடுவதைப் போன்றது அது ! பாராட்ட வேண்டிய ஒருவனைப் பாராட்டாமல் இருப்பதும், பாராட்டத் தேவையற்ற ஒருவனைப் பாராட்டுவதும் ஒற்றை வாளின் இரண்டு கூர்மைப் பக்கங்களைப் போன்றது. இரண்டுமே அழிவுக்கான ஏற்பாடுகளே.

சிலருடைய புகழ்ச்சிக்கு முன் புகழ்ச்சியே வெட்கப்படும். மேடைகளில் அவர்கள் முழங்கும் புகழ் மழைக்கு முன்னால் மைக்கே கூட தாங்க முடியாமல் தலை கவிழும். புகழ்மாலை சூடுபவர்கள் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. தேவையற்ற புகழ்ச்சி செய்பவர்கள் ஏதோ ஒரு எதிர்பார்ப்பின் சந்தில் நின்று கொண்டு தூண்டில் போடுபவர்களாகத் தான் இருக்கிறார்கள். சிலவேளைகளில் அது வெளிப்படையாய் தெரியும், சிலவேளைகளில் பசுந்தோல் போர்த்திய ஓநாயாய் ஒளிந்திருக்கும்.

வீணாய் ஒருவனைப் புகழும் போது, ஒரு திறமைசாலிக்குக் கிடைக்கவேண்டிய அங்கீகாரம் திருடப்படுகிறது. ஒருவனைப் புகழ மறுத்து நகரும் போது ஒளிகொடுக்க வேண்டிய அவனது திறமைகள் மங்கிப் போகின்றன. இரண்டுமே குற்றங்களே.

எனவே, இருட்டடிப்பால் இருண்டு கிடக்கின்ற உலகுக்கு(உலகம்) ஒளிகொடுக்க வேண்டிய கட்டாயம் நம் ஒவ்வொருவர் கரத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் மக்களைக் கவனிப்போம். நம்மோடு பணியாற்றும் சக பயணிகளைப் பார்ப்போம். நமது குடும்பங்களில் இருக்கும் உறவுகளை நினைப்போம். யாரைப் புகழவேண்டும், யாரை உயர்த்த வேண்டும் என்பது நமக்கே தெரியும்.

இது தான் துவக்கம். இது தான் ஆதிமூலம். இருட்டடிப்பு சிந்தனைகளை முதலில் நாம் ஒதுக்கி வைக்க வேண்டியது இங்கே தான். சரியான நபர்களை பாராட்டத் துவங்குவோம். அவர்களுக்கான அங்கீகாரங்களை கொடுக்கத் துவங்குவோம். வெளிச்சம் முதலில் புள்ளியாகத் தான் தோன்றும். பிறகு தான் அது பற்றிப் படர்ந்து விஸ்வரூபமெடுக்கும். மழை முதலில் ஒற்றைத் துளியில் தான் பயணத்தைத் துவங்கும், ஊரையே மூழ்கடிக்கவும் அதால் முடியும். எனவே துவங்குவோம்.

இருட்டடிப்பு என்பது சாதாரண விஷயமல்ல என்பதைப் புரிந்து கொள்வோம். வெளிச்சம் வீசுவதே தேவையான செயல் என்பதையும் அறிந்து கொள்வோம். இருட்டைப் புதைப்போம், வெளிச்சத்தை அறுவடை செய்வோம்.

-சேவியர்.

941 total views, 1 views today

1 thought on “இருட்டடிப்பால் உலகம் இருண்டு கிடக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *