யவனர் தேசம் கிரேக்கம்!
மேற்கத்திய கலாச்சாரத்திற்கு முகவரி கொடுத்த நாடுகள் எதுவென்று தேடிப் பார்த்தால் ,ரண்டு நாடுகளை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். ஒன்று கிரேக்கம் மற்றொன்று ரோமாபுரி. உலக வரலாற்றையே புரட்டிப் போட்ட ,வ்விரு நாடுகள் ,ன்னும் தங்கள் பழமையை தாங்கிக்கொண்டு வரலாற்று சாட்சியாக காட்சியளிக்கின்றன. சமீபத்தில் ஏதென்ஸ் நகரம் சென்று அதனை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
கடலோரத்தில் மலைகள் சூழ ஆலிவ் மரங்களின் காடுகளின் நடுவே கம்பீரமாய் காட்சியளிக்கிறது ஏதென்ஸ் நகரம்.
மதுரை – கிழக்கின் ஏதென்ஸ்
மாயோன் உந்தித்தாமரை போல அரசன் கோயிலும் அதை சுற்றி வீதிகளும் கொண்ட மதுரையை எதென்ஸ் நகரோடு ஒப்பிடுவர் ! அக்ரோபோலிஸ் மலையே இந்நகருக்கு நடுநாயகம். எங்கிருந்து பார்த்தாலும் ஏத்தேனா தேவி கோவில் தெரிகிறது. மதுரையில் நீங்கள் எங்கிருந்து பார்த்தாலும் இதே போன்று நான்கு கோபுரங்கள் உங்கள் கண்களில் நிறையும். அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் தொடர்ந்து வாழ்ந்துவரும் நகரங்களாக மதுரையும் இந்நகரமும் விளங்குகின்றன.
கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 400 – 500 ஆண்டுகளுக்கு முன்னர் உலகமே வியக்க இந்த மலைமேலே கிரேக்கர்கள் விண்ணுயர் பெரியகோயில் பணித்தனர். பாரசீகர்களை வெற்றிகொண்டதன் நினைவாக அதனை அமைத்தனர். கிரேக்கர்களின் பொற்காலமாக அந்த காலகட்டம் குறிக்கப்படுகிறது !
இந்த நகரம் கிரேக்க தெய்வம் ஏத்தனாவின் பெயரால் அழைக்கப்படுகிறது. இதற்கு பின்னால் ஒரு அருமையான கதை சொல்லப்படுகிறது.
ஏத்தனா ஆலீவ் மரம் !
ஏதென்ஸ் நகரம் அமைக்கப்பட்டபோது அதற்கு யாரை காவல் தெய்வமாகக் கொள்வதென அரசனும் மக்களும் யோசித்தனர், ஏத்தனா தேவியும் பொசைடன் என இரு கருத்துகள் நிலவ, அக்ரோபோலிஸ் மலைமீது இருவருக்கும் போட்டி வைக்கமுடிவு செய்யப்பட்டது. இருவருள் நகரத்திற்கு சிறப்பான பரிசு தருவோரே வெற்றியாளராகவும் காவல் தெய்வமாகவும் சிறப்பிக்கப்படுவர் !
பொசைடன் தன்னுடைய திரிசூலத்தில் நிலத்தை கீர, தண்ணீர் ஊற்றெடுத்தது ஆனால் பொசைடன் கடலரசனாதலின் அந்நீர் உப்புநீராய் வெளிப்பட்டது. உப்புநீர் எதற்குமே பயன்படவில்லை. ஆனால் ஏத்தனா தேவியோ ஒரு ஆலிவ் மரத்தை வளரச்செய்தாள். அது எண்ணெய்யை தரும் பயனுள்ளதாக இருந்ததால் (இன்றும் கிரேக்கத்தில் மக்கள் ஆலிவ் எண்ணெய்யை மிகுதியாக பயன்படுத்துகின்றனர்)அவளே வெற்றிபெற்று மலைமேலே குடியேறி காவல் தெய்வம் ஆயினாள். அவளுக்கு மலைமேல் அழகிய தூண்களோடு பெரியகோவிலொன்றை கிரேக்கர்கள் அமைத்தனர், காலவெள்ளத்தில் படையெடுப்புகளாலும், இன்ன பிற காரணங்களாலும் அவை பழுதடைந்து போயின. எனினும் அந்த 2500 ஆண்டுகால எச்சமாய் இன்றும் அக்ரோபோலிஸ் மலையும் பார்த்தினான் கோவிலும் இன்றும் விளங்குகின்றன.
தப்பிப்பிழைத்த ஒரே கிரேக்க கோயில் !
பாகன் ஆலயங்கள் என்று கிரேக்கத்திலும் ரோமாபுரியிலும் பல கோயில்கள் ,டிக்கப்பட்டுவிட்டன அவற்றுள் சில தப்பிப்பிழைத்தும் சில கடவுளர் சிலைகள் கையறுப்பட்டும் மூக்குடைக்கப்பட்டும் உலகின் பல அருங்காட்சியங்களில் விற்கப்பட்ட நிலைமை தான் இன்று !
உலகமே வியக்கும் கோவில்களும் கலைகளும் செழித்திருந்தது பண்டைய கிரேக்கத்தில் ! மலைமேல் இருக்கும் ஏத்தனா கோயில் போலவே நகரில் பல தெய்வங்களுக்கு கோயில்கள் இருந்தன.
ஒலிம்பஸ் திருமலைமேல் வாழும் பன்னிரண்டு தெய்வங்களுள் ஒருவரான எப்பெஸ்டஸ் கொல்லர்கள் மற்றும் உலோக தொழில்களின் தெய்வம், எனவே பொ.யு.மு 449 (டீ.ஊ) இல் அந்த பகுதியில் வாழந்த கொல்லர்கள் மற்றும் உலோகத்தொழிலாளிகள் இக்கோவிலை கட்டி எப்பெஸ்டஸ் தெய்வத்திற்கு அர்ப்பணித்தார்.
காலப்போக்கில் படையெடுப்புகளால் கோயில் சிதைவுற்றது, கி.பி 7 ஆம் நூற்றாண்டில் இக்கட்டிடம் கிறிஸ்தவ தேவாலயமாகப் – சென் ஜோர்ஜ் தேவாலயமாக – பயன்படுத்தப்பட்டது, இக்கட்டிடம் நல்ல நிலையிலிருப்பதற்கு முக்கிய காரணமாகும். எனினும் இதே காரணம் ,தன் உட்புறத்தின் பழங்கால அம்சங்கள் அகற்றப்பட்டு கிறித்தவ தேவாலயத்துக்கேற்ற புதிய உட்புறம் அமைவதற்கு ஏதுவாகியது.
தேவாலயாமாக மாறியதால் இக்கோவில் காலவெள்ளத்தில் தப்பிப்பிழைத்தது இ,ன்று வெறும் கோயில் மட்டுமே எப்பெஸ்டஸ் இல்லாமல் !
பின்னிரவில் சற்றே ஆலிவ் மரங்கள் சூழந்த ஏதன்ஸ் நகர சாலைகளில் நடந்தால்… நீங்கள் முதலில் காணும் காட்சி இதுதான் ! ஆயிரமாயிரம் நூற்றாண்டுகள் கடந்தும் அவளுடைய பெயரை சொல்லிகொண்டு அந்த மண்டபத்தின் தூண்கள் அசையாமல் நிற்கின்றன ! சியூஸின் சிரிப்பும் ஹீரோவின் மந்திரபுன்னகையும் ஹெர்குலிஸின் கர்ஜனையும் காலச்சக்கரத்தை பின்னே சுழலவைத்து உங்களை வியக்கவைக்கும் ! அக்ரோபோலிஸ் மலைக்கு ஓர் ஈர்ப்பின் சக்தி இருக்கத்தான் செய்கிறது !
— தனசேகர்.பிரபாகரன்
1,226 total views, 1 views today
1 thought on “யவனர் தேசம் கிரேக்கம்!”