இருகோடுகளில் ஒரு கோடு
கே.பாலச்சந்தரின் நாடகங்களைப் பார்த்து அவரின் திறமையை அறிந்து சத்யா மூவிஸ் தயாரித்த ‘தெய்வத்தாய்’ திரைப்படத்தில் கதை வசனம் எழுத வைத்தவர் எம்.ஜி.ஆர்.
தனது ‘மேஜர் சந்திரகாந்’ நாடகத்தை எம்.ஜி.ஆரை வைத்து திரைப்படமாக்க கே.பாலச்சந்தருக்கு ஒரு விருப்பம் இருந்தது. ஆனால் அது எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமான கதை அல்ல என்ற எண்ணத்தால் அதை அவர் கைவிட்டு விட்டார். தன்னை அறிமுகம் செய்த எம்.ஜி.ஆரை வைத்து அவர் ஒரு படமும் இயக்கவில்லை. ‘இருவரும் சேர்ந்து படம் பண்ணினால் அது எம்ஜி.ஆர் படமாகவும் இருக்காது, பாலச்சந்தர் படமாகவும் இருக்காது’ என்பது அவரது அபிப்பிராயமாக இருந்தது. தன்னை திரையுலகத்திற்கு அறிமுகம் செய்த எம்.ஜி.ஆரிடத்தில் அவர் இறுதிவரை மரியாதை வைத்திருந்தார் என்பதை அவர் தனது பேட்டிகளில் பலமுறை சொல்லி இருக்கிறார்.
எம்.ஜி.ஆருக்கு ‘தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதியவர், சிவாஜி கணேசனுக்காக ‘நீலவானம்’ படத்திற்கு வசனம் எழுதினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து அவர் ‘எதிரொலி’ என்ற படத்தை இயக்கும் ‘பொழுது எல்லோரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. நடிப்பின் சிகரமும் இயக்குனர் சிகரமும் இணைகிறார்கள் என்று பத்திரிகைகள் ஊதிப் பெரிதாக்க, அது இரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. ஆனால் படம் வெற்றி பெறவில்லை. ‘பெரிய நடிகர்களை வைத்து இயக்கும் பொழுது, அது எனது படமாகவோ அவர்கள் படமாகவோ இல்லாமல், இரண்டும் கெட்டான் நிலைக்குப் போய் விடுகிறது’ என்று தனது கருத்தைச் சொன்னார். அது உண்மையாகவே இருந்தது. அன்றைய இளம் நாயகர்களாக இருந்த ரவிச்சந்திரன், ஜெய்சங்கரை இணைத்து வண்ணத்தில் அவர் எடுத்த ‘நான்கு சுவர்கள்’ என்ற திரைப்படத்தின் தோல்வியும் அதற்கு ஒரு சான்று.
நாகேஸ் அவரது திரைப்படத்தில் முக்கிய நாயகனாக சில காலங்கள் வலம் வந்தார். ஆரம்ப காலங்களில் அவரது படத்திற்கான இசைக்கு வி. குமாரைப் பயன்படுத்தினார். ஒரு நிலைக்கு வந்த பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையை தன் படங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார்.
சிறிய பட்ஜெட் படங்களே அவருக்கு முதலில் கைகொடுத்தன. ஒரு படம் எவ்வாறு உருவாகிறது என்பதை ‘சர்வர் சுந்தரம்’ என்ற திரைப்படத்தில் அவர் சொல்லி இருப்பார். இதனால் பெரிய நாயகர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் இருந்து அதிருப்தியை அப்பொழுது சம்பாதித்துக் கொண்டார்.
நாகேஸ், ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், பாலையா, ஜெயந்தி, சௌகார் ஜானகி என அவருக்கு என்று அன்று நடிகர்கள் இருந்தார்கள். நாகேஸ், ஜெமினி கணேசன், ஜெயசங்கர் ஆகியோரையே அவர் அதிகமாக அப்பொழுது பயன்படுத்தினார். இதனால் இம் மூவரும் பாலச்சந்தரின் (சிவன், விஸ்ணு, பிரம்மா) மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்டனர்.
குடும்ப பாங்கான திரைப்படங்கள் என அப்பொழுது பலராலும் பரிந்துரைக்கப்பட்ட படங்களாக இவரது படங்கள் இருந்திருக்கின்றன. இவரது படங்கள் நாடகங்களில் இருந்து உள்வாங்கப் பட்டதாலோ அல்லது நாடக உலகில் இருந்து இவர் வந்ததாலோ என்னவோ நாடகப் பாணிகளாகவே இருக்கும். ஆனாலும் அதை யாருமே ஒரு பொருட்டாக அன்று கருதவில்லை.
ஜெமினி கணேசனுக்காக ‘நான் அவனில்லை’, சௌகார்ஜானகிக்காக ‘காவியத்தலைவி’, ஆலங்குடி சோமுவுக்காக ‘பத்தாம் பசலி’ என்று தன்னுடன் நெருங்கியவர்களுக்கு அவர்கள் தயாரிப்பில் இவர் படம் செய்து கொடுத்திருக்கிறார்.
கே.பாலச்சந்தரின் வெற்றி பெற்ற படங்களில் ‘அவள் ஒரு தொடர் கதை’யும் ஒன்று. இரண்டு கதாநாயகிகள். அதில் இரண்டு பெண்களை மையப்படுத்தி இருப்பார். ஒருத்தி ஆங்கில நாவல்கள் படிக்கிறாள். மற்றவள் ஜெயகாந்தனின் நாவல்கள் படிக்கிறாள். ஆங்கில நாவல் படிப்பவளை வெற்றி பெறுபவளாகவும் ஜெயகாந்தனின் நாவல்களைப் படிக்கும் நாயகியை தோல்வி கண்ட பெண்ணாகவும் திரைப்படத்தில் காட்டி இருப்பார். இது பாலச்சந்தருக்கு தேவை இல்லாத வேலை என அன்று எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு புயல் கிளம்பி இருந்தது. ஆனாலும் திரைப்படத்தில் ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற நாவலைக் காட்டியதால் அந்நாவல் இலங்கையில் விற்பனையில் சாதனை படைத்தது என்பது உண்மை.
‘இருகோடுகள்’ திரைப்படமும் அன்று பலரால் பேசப்பட்டது. சௌகார் ஜானகி கடைந எங்கே? என்று கேட்க, அது தொலைந்துவிட்டது என ஜெமினி பதில் தருவார். அதற்கு நான் டகைந ஐயே தொலைத்து விட்டேன் என சௌகார் ஜானகி சொல்வார். நான் கடைந ஐப் பற்றிச் சொல்கிறேன் என்று ஜெமினி இடைமறிக்க, கடைந க்கும் டகைந க்கும் ஒரே எழுத்துதான், ஆனால் இடம் மாறி இருக்கின்றன என சௌகார் ஜானகி பதில் சொல்வார். இது அன்று பெரிதும் பாராட்டுப் பெற்ற உரையாடல்.
‘எதிர் நீச்சல்’ நூறாவது நாளுக்கு கேடயங்கள் வழங்கி வாழ்த்தியவர் அன்றைய முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாத்துரை. ‘இருகோடுகள்’ படம் தயாரிப்பில் இருக்கும் பொழுது அறிஞர் அண்ணாத்துரை காலமாகிப் போனார். அவரின் மீது கொண்ட ஈடுபாட்டால் ‘இருகோடுகள்’ படத்தில் கலெக்டராக நடிக்கும் சௌகார் ஜானகி முதல்வருடன் பேசும் காட்சி ஒன்றை படத்தில் உருவாக்கி இருப்பார். அந்தக் காட்சியில் முதல்வரைக் காட்டாது, அறிஞர் அண்ணாத்துரையின் குரலை மட்டும் ஒலிக்கச் செய்து புதுமை படைத்திருப்பார். பலராலும் பாராட்டுப் பெற்ற காட்சி அது.
‘எதிர் நீச்சல்’ படத்தில் இருமல் தாத்தா என்ற ஒரு பாத்திரத்தையும் உருவாக்கியிருந்தார். கடைசி வரையில் அந்தப் பாத்திரத்தை அவர் காட்டவேயில்லை. இருமலை மட்டும் கேட்க வைத்து புதுமை படைத்தார். இப்படி அன்று இயக்கத்தில் சிகரமாக நின்று பல சாதனைகள் செய்திருந்தாலும், தனது படத்தில் பிரச்சனையான விடயங்களைச் சொல்லி இருந்தாலும், கதை முடிவில் தீர்வை ஆழமாகச் சொல்லி விடாமல் நழுவி விடுவார். உதாரணத்துக்கு அரங்கேற்றம் திரைப்படத்தை எடுத்துக் கொண்டால், சந்தர்ப்ப வசத்தால் விபச்சாரத்துக்குள் தள்ளப்படும் ஒரு பெண்ணுக்கு வாழ்வு தருவதாக கதையை அமைத்து, இறுதியில் அவளை பைத்தியமாகக் காட்டி இருப்பார். ஆனாலும் படத்தின் கதை நகர்வைத் திறமையாகக் கையாண்டு அந்தப் படத்தில் வெற்றி பெற்றிருப்பார். அரங்கேற்றம் திரைப்படமும் அதில் இடம் பெற்ற பாடல்களும் இன்றும் மறக்க முடியாதவை.
இப்படி இவரைப் பற்றி நிறையவே சொல்லிக் கொண்டே போகலாம். இவர் இயக்கிய ஒவ்வொரு படத்தைப் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம்.
இரு கோடுகளில் ஒரு கோட்டை அழிக்காமல் அதை எப்படி சின்னக் கோடாக்குவது என்ற கேள்வியை எழுப்பி ஒரு தத்துவத்தை இலகுவாகப் புரிய வைத்திருப்பார். ஆனால் இவரின் இழப்பை (24.12.2014) சின்னதாக்க முடியாமல் இருக்கிறது என்பதுதானே உண்மையாக இருக்கிறது. நன்றி :மன ஓசை 24.12.2014
–ஆழ்வாப்பிள்ளை
973 total views, 1 views today
1 thought on “இருகோடுகளில் ஒரு கோடு”