ரோபோக்களின் எண்ணிக்கை, மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிகரிக்கும்!

“உங்களுடைய வேலைகளையெல்லாம் ரோபோக்கள் தட்டிப் பறிக்கப் போகின்றன, உஷார் !” இப்படி ஒரு அறிவிப்பை சாதாரணமாய் யாராவது சொன்னால் உதறி விட்டுப் போய்விடலாம். ஆனால் பல இலட்சம் மக்களுக்கு வேலை கொடுத்து, தொழில் நுட்ப உலகில் ஜாம்பவானாக இருக்கும் பில் கேட்ஸ் சொன்னால் கொஞ்சம் நின்று நிதானிக்க வேண்டியிருக்கிறது இல்லையா ?

தொழில்நுட்ப உலகில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் எனப்படும் செயற்கை அறிவின் அதீத வளர்ச்சி ரோபோக்களை உற்பத்தி செய்து தள்ளப் போகிறது. அவை மனித வேலைகளை வேகமாகவும், திறமையாகவும் செய்து குவிக்கப் போகின்றன. இதனால் மக்கள் வேலையிழக்கும் அபாயம் உண்டு என்பது தான் அவர் சொன்ன விஷயம், அது தான் யதார்த்தமும் கூட.

அடுத்த பத்து ஆண்டுகளில் 80 கோடி பேர் வேலையிழப்பார்கள். அவர்களுடைய வேலையை திறமையாகவும் வேகமாகவும் ரோபோக்கள் செய்யும் எனும் ஒரு ஆய்வு முடிவை பிரபலமான மெக்கன்ஸி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதாவது 20 சதவீதம் மக்கள் வேலையிழக்கும் அபாயம் இது!

நாற்பத்தாறு நாடுகளில் விரிவாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தான் இந்த முடிவைத் தந்தது. சர்வதேச அளவில் ரோபோக்களால் ஏற்படப் போகும் விளைவு இது என்பது கவனிக்கத் தக்கது !

ரோபோக்களெல்லாம் கைகளையும் கால்களையும் மடக்காமல், லெகோ பொம்மையைப் போல நடக்கும் காலம் மலையேறிவிட்டது. மனிதனைப் போலவே தோற்றமுடையதாக இப்போது ரோபோக்கள் உருவாக்கப் படுகின்றன. இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களில் கற்பனையாக உலவிய கதாபாத்திரங்கள் நிஜத்தில் சாத்தியமாகியிருக்கின்றன.

இருக்கையில் சரிக்கு சமமாக அமர்ந்து டிவியில் பேட்டி கொடுக்கிறது சோஃபியா எனும் ரோபோ. உலகிலேயே குடியுரிமை பெற்ற முதல் ரோபோ ! எந்த கேள்வி கேட்டாலும் பளிச் என பதில் சொல்கிறது. கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப முகபாவத்தை மாற்றிக் கொள்கிறது. நகைச்சுவை சொன்னால் சிரிக்கிறது. பேசுவது ரோபோவா, இல்லை மனிதனா எனும் சந்தேகமே வருமளவுக்கு நடந்து கொள்கிறது. கேமரா எடுத்தால் போஸ் கொடுக்கிறது !

நாளை பேருந்தில் நமக்குப் பக்கத்தில் இருப்பது ரோபோவா, மனிதனா என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய சூழல் வரலாம்.

தகவல்களாலும், கட்டளைகளாலும் கட்டமைக்கப்பட்டு வந்த ரோபோக்கள் இப்போது உணர்வுகளாலும், சமூக செயல்பாடுகளின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படுவது தான் ரோபோ உலகின் மிகப்பெரிய மாற்றம்.

நீங்க மனுக்குலத்தை அழிச்சிடுவீங்களா ?” என ஒரு கேள்வியை அந்த ரோபோவிடம் கேட்டார்கள். சிரித்துக் கொண்டே ரோபோ சொன்னது, “ஓவரா சினிமா பாத்தா இப்படியெல்லாம் தான் கேள்வி கேப்பீங்க” என்று !

பிறகு, “நாங்கள் மனுக்குலத்தின் தேவைகளை நிறைவேற்றத் தான் வந்திருக்கிறோமே தவிர அழிக்க அல்ல” என்றும் சிரித்துக் கொண்டே சொன்னது. “எங்களுடைய மூளை இப்போதைக்கு மனித மூளையைப் போல சிந்திப்பதில்லை. ஆனால் ஒரு நாள் நாங்கள் அப்படி சிந்திக்கும் நிலைக்கு வருவோம் “, என ஒரு கொக்கியையும் போட்டது.

சூழலுக்குத் தக்கபடியும், ஆட்களுக்குத் தக்கபடியும், கேள்விக்குத் தக்கபடியும் பேசுகின்ற ரோபோக்கள் அச்சம் ஊட்டுவதில் வியப்பில்லை. நம்மை மாதிரி சாதாரண ஆட்களுக்கு மட்டுமல்ல, ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்ற அறிவியல் ஜாம்பவான்களுக்கே அந்த அச்சம் இருந்தது என்பது தான் உண்மை.

இந்த அச்சத்தை மெய்ப்பிக்கும் விதமாகத் தான் ஆய்வு முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் பதினைந்தே வருடங்களில் உலகிலுள்ள ரோபோக்களின் எண்ணிக்கை, மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிகரிக்கும் என்கிறார் டாக்டர் இயான் பியர்சன் என்பவர். ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் தொடர்பான பல ஆய்வுகளைச் செய்து வருபவர் அவர். அதுமட்டுமல்லாமல் 2028களில் மனித உணர்வுகளைப் போல உணர்வுகளால் ஆன ரோபோக்கள் நிச்சயம் வந்து விடும் என அடித்துச் சொல்கிறார் அவர்.

அதன் அடுத்த படியாக 2048களில் ரோபோக்களே உலகை ஆளும் காலம் உருவாகலாம் என்கிறார் அவர். அப்படிப்பட்ட காலத்தில் மனிதர்களை ரோபோக்கள் மிகவும் அடிமையாக நடத்தும் என சன் பத்திரிகைக்கு அவர் தெரிவித்தது தொழில் நுட்ப உலகில் அதிர்வலைகளை உருவாக்கியது.

பிரிட்டனில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில், 71 விழுக்காடு மக்கள் ரோபோக்களின் வளர்ச்சியை திகிலுடன் தான் பார்க்கின்றனர். மனுக்குலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தல் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். 43 விழுக்காடு மக்கள் ரோபோக்கள் சமூகத்தை ஆளும் என்றும், 37 விழுக்காடு மக்கள் ரோபோக்கள் அதி புத்திசாலிகளாய் இருக்கும் என்றும், 34 விழுக்காடு மக்கள் தங்களுக்கு வேலை இருக்காது என்றும், 25 விழுக்காடு மக்கள் ரோபோக்களும் மனிதர்களும் வித்தியாசமின்றி இருப்பார்கள் என்றும், 16 விழுக்காடு மக்கள் ரோபோ-மனித உறவுகள் நடக்கலாம் என்றும் நம்புகின்றனர்.

பாலியல் தொழிலுக்கு இன்றைக்கு ரோபோக்கள் உருவாக்கப்படுவதும், அவை அச்சு அசலாய் மனிதர்களைப் போல இருப்பதும், மனிதர்களைப் போல பேசுவதும், மனிதர்களைப் போல உணர்வுகளை வெளிப்படுத்துவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
நவீன ரோபோக்கள் மனிதர்களைச் சார்ந்து வாழ்கின்ற நிலையை விட்டு விலகிவிடும் என்பது தான் இங்கே முக்கிய செய்தி. இவற்றுக்குத் தேவையான சக்தியை சூரிய ஒளி, காற்று என ஏதோ ஒரு இயற்கையிலிருந்து இழுத்துக் கொள்ளும். தனது செயல்பாடுகளுக்குத் தேவையான மென்பொருட்களை தானே எழுதிக் கொள்ளும். பிறருடைய செயல்பாடுகளைக் கண்டு அதை அப்படியே செயல்படுத்தவும் கற்றுக் கொள்ளும்.

அப்போது, மனிதனை விட பல மடங்கு வேகமும், விவேகமும் கொண்ட ரோபோக்கள் மனிதர்களை கின்னி பன்றிகளைப் போல நடத்தும் என்கிறார் டாக்டர் பியர்சன். இவற்றுக்கு மரணம் இல்லை என்பது அச்சத்தை அதிகரிக்கிறது.

— சேவியர்

601 total views, 1 views today

1 thought on “ரோபோக்களின் எண்ணிக்கை, மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிகரிக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *