பயம்
கமல்ஹாசன் ஒரு ஈழத்தமிழன் கதாபாத்திரம் ஏற்று நடித்த தெனாலி திரைப்படத்தில் வரும் “எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம்.. ஆனா எனக்கு எல்லாம் பயம் மயம்” என்று தொடங்கும் வசனத்தை யாரும் பயத்திலும் மறந்திருக்க மாட்டார்கள். சாதாரண மனிதர்கள் எல்லோரும் எதற்கோ இல்லை யாருக்கோ பயப்பிடுவார்கள், பயமறியாத மனிதர்களை யுகப் புருஷர்களாக உலகம் கொண்டாடும்.
“பயம் என்பது வாழ்க்கையின் பாதுகாப்பு” என்று தனது இரும்புக்குதிரைகள் நாவலில் எங்கோ ஒரு இடத்தில் பாலகுமாரன் எழுதியதாக ஞாபகம். உண்மைதான், பயம் தான் நம்மை பல விஷயங்களில் கவனமாக இறங்கவும், சில விஷயங்களை செய்யாமலே விடவும் காரணியாக அமைந்து விடுகிறது.
வாழ்க்கையில் சின்னனிலேயே பயத்தை முதல் முதலாக விதைத்தது அம்மாவாகத் தான் இருக்க வேண்டும். “படி..படி..படி” என்று பூவரசம் தடியாலும் விறகாலும் அடித்து அடித்து படிக்க வைக்க அம்மா ஊட்டியதும் பயம் தான்.
நடேசபிள்ளையும் சிதம்பரப்பிள்ளையும் எழுதிய கணிதப் பயிற்சிப் புத்தகத்தை திரும்ப திரும்ப செய்ய வைத்து, கணிதத்தில் புலியாகா விட்டாலும் பரவாயில்லை, என்னை பேராதனை பல்கலைக்கழகத்திற்கு போய் ஒரு பொறியியலாளனாக வரவைக்க ஆசைப்பட்ட அம்மா கையில் எடுத்த ஆயுதமும் பயம் தான்.
ஒழுக்கநெறிகளில் பரி யோவான் தான் தலைசிறந்த பள்ளியென்று பெயரெடுத்தது என்றால், அதற்கு அடித்தளமாக அமைந்தது , மாணவர்களை வழிநடத்த பரி யோவானின் systeத்தில் ஊறிப் போயிருந்த கருமம் பயம் தான்.
பரி யோவான் வளாகத்தில், வெள்ளையும் சொள்ளையுமாய் ஆனந்தராஜா மாஸ்டர் கம்பீரமாக நடந்து வருவதை பார்க்கும் போதும் பயம் வரும். Primary school துரைச்சாமி மாஸ்டர் கண்டிக்கும் போது பயம் வரும் , குழப்படி செய்யும் போது தேவதாசன் மாஸ்டர் ஓங்கி அறையும் போதும் பயம் வரும்.
Middle school ற்கு வந்தால் style ஆக நடந்து வந்து, நுனி நாக்கில் Englishபேசி, பரி யோவானின் ஒழுக்கக் கோவையை கண்மணி போல் காத்த தனபாலன் மாஸ்டரால் “கவனிக்கப்படும்” போதும் பயம் வரும்.
பிரபாகரன் மாஸ்டர் male staff room ஆல் இறங்கி, ஒரு பக்கம் சாய்த்து கொண்டே தானெடுக்கப் போகும் வகுப்பை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்க, அருளானந்தம் Block லும் ராஜசிங்கம் blockலும் இருக்கும் அத்தனை வகுப்புகளும் அலை அடித்து ஓய்ந்த கரையைப் போல நிசப்தமாவதும் இந்தப் பயத்தால் தான்.
கோட்டையில் இருந்து கூவிக் கொண்டே வரும் ஷெல்லுக்கும், பலாலியில் இருந்து பறந்து வரும் ஆட்டிலெறிக்கும், ஹெலியடிக்கும் 50 கலிபருக்கும், பொம்மரின் குத்துக் கரணத்திற்கும், சகடையின் பீக்குண்டிற்கும் பயந்து பயந்தே கழித்த இளமைப் பருவத்தை இன்று நினைத்தாலும் வருவதும் பயம் தான்.
வடமராட்சியை பிடித்த ஆமி, யாழ்ப்பாணத்திற்கும் வரப் போகுதாம் என்று பயந்து கொண்டிருக்க, பறந்து வந்து பருப்பு போட்ட இந்தியாவின் இராணுவம், எங்களது ஊர்களிலும் வீதிகளிலும் நிலையெடுத்து பயப்பிடுத்திய நாட்களை இன்று நினைத்தாலும் வருவதும் அதே பயம் தான்.
அதிகாலையில் இந்திய இராணுவம் சுற்றி வளைத்து, படுக்கையால் தட்டியெழுப்பி, சந்தியில் குந்த வைத்து, முகமூடிக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தும் போது பயம் பேய் பயமாகும்.
இந்திய இராணுவ காவலரணைக் கடக்கும் போது, சைக்கிளால் இறங்கி நடந்து போகும் போது, அந்த நாய் கூப்பிடக் கூடாது என்று மனதுக்குள் கர்த்தரைக் கும்பிட்டுக் கொண்டு போகும் போதும், கூடவே வருவதும் பயம் தான்.
எண்பதுகளின் இறுதியில், இந்திய இராணுவத்தோடு இணைந்த மண்டையன் குழு, கட்டாய ஆட்சேர்ப்பிற்கென பிள்ளை பிடி வண்டிகளில் யாழ் நகரெங்கும் அலைந்து திரிந்த நாட்களில், பாடசாலைக்கும் போக முடியாமல், ட்யூஷனிற்கும் வர முடியாமல், வீட்டுக்குள் முடங்கியே இருந்த போதிலும், எங்களோடு அகலாமல் இருந்தது பயம் மட்டும் தான்.
முப்பதாண்டுகளிற்கு முன்னர் எங்களை பயங்காட்டி பயமுறுத்தி வீட்டுக்குள் வைத்திருந்த பாவத்திற்குத் தான், புலிகளால் ஞானஸ்னானம் வழங்கி பாவ விமோசனம் பெற்றும், இன்றும் மண்டையன் குழுவின் சுரேஷ் பிரேமச்சந்திரனின் பெயரைக் கேட்டாலே அந்தப் பய நாட்களின் பயம் நினைவுக்கு வந்து பயமுறுத்துகிறது.
OL, AL, பரீட்சை நாட்கள் வந்து விட்டாலே பயம் தொடங்கி விடும். அந்தக் கேள்வி வருமா இந்த யசநயவில் வருமா என்று மனம் ஒரு பக்கம் பயத்தில்
பதைபதைக்க, பரீட்சை பெறுபேறுகள் மீதான குடும்பத்தாரின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பு வேறு பயத்தை பலமடாக்கி விடும்.
கொழும்பு வீதிகளில் உலாவத் தொடங்கினால், பொலிஸிற்கும் ஆமிக்கும் பயம். நடந்து போனால் நிற்பாட்டி IC கேட்டு விசாரிக்கும் போதும், பஸ்ஸால் இறக்கி உடம்பை தடவிப் பார்த்து சோதிக்கும் போதும், இனமானத்தால் தூண்டிவிடப்பட்ட கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும், பயம் அந்த கோபத்தை மேவி விட, பயத்துடனே அந்த நீண்ட பொழுதுகள் கடக்கும்.
பருவம் வந்து காதல் தொற்றிக் கொள்ள, பார்க்கும் பெட்டையை தூரத்தில் கண்டாலே, ஏதோ ஒரு பயம் ஏனோ வந்து ஒட்டிக் கொண்டு விடும். “ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்” என்ற பாட்டின் BGM மனதில் ஒலித்தாலும், இதயம் படபடக்கும், நாக்கு உலரும், தொண்டைக்குள் ஏதோ அடைக்கும், அந்தப் பெட்டையை கடந்து போகும் வரை பயமும் கூடவே பயணிக்கும்.
கல்யாணம் கட்டி குடும்பம் நடாத்த தொடங்கினால், மனிசியும் பயப்பிடுத்த தொடங்கி விடும். அம்மாக்கு பயந்து, ஆசிரியருக்கு பயந்து, ஆமிக்கு பயந்து பழகிய வாழ்க்கையும், இயல்பாகவே இந்தப் புதிய பயத்திற்கும் இயைபாக்கம் அடைந்து விடும்.
மனிசிக்கு பயந்தது போல் பாசாங்கு செய்து கொண்டே பயப்பிடாமல் செய்ய வேண்டியவற்றை செய்து கொண்டு போவதும் ஒரு அழகிய கலை தான்.
அண்மையில், நமக்கு பழக்கமான அண்ணர் ஒருத்தரை Party முடிந்து அவரது வீட்டில் இறக்கி விட்டோம். காரால் இறங்கியதும் அண்ணருக்கு மனிசியின் நினைவோ பயமோ வந்து விட்டது. “உள்ளுக்க புலியொன்று படுத்திருக்கடா” வீட்டை காட்டி அண்ணர் சொன்னார் “இப்ப ஒரு சிங்கம் வீட்டுக்குள்ளே போக போது பாரடா”, நாங்களும் பயத்தோடு பார்த்திருந்தோம்.
அண்ணர் கதவை தட்டுவதும் “darling.. I am here..please open the door..darling” என்று iவெநசஉழஅ ல் கெஞ்சுவதும் நமது காதுகளில் ஒலிக்க தொடங்க, நாங்கள் காரை நகர்த்த தொடங்கினோம், நமக்கும் பயம் வரத் தொடங்கியிருந்தது.
வாழ்க்கைச் சக்கரத்தில் கடைசியாக இணைந்து பயப்பிடுத்த தொடங்கியிருக்கும் சீவன்கள், ஆசை ஆசையாய் பெத்து வளர்த்த பொடிப் பிள்ளையள் தான். Party போனால் அப்பர் தண்ணியடிக்கிறாரா என்று வேவு பார்ப்பது, பிறகு காரில் வரும் போது நக்கலாக “அப்பா ஏன் நீங்க னசiஎந பண்ணேல்ல” என்று விசாரிப்பது, பிறகு alcohol is bad for health என்று பள்ளியில் சொல்லிக் கொடுத்ததை அப்படியே பிரசங்கமாக ஒப்புவித்து விசரேற்றுவது, என்று தங்கள் பாணியில் அவங்களும் பயங்காட்ட தொடங்கி விட்டதை நினைக்க பயமாகத் தானிருக்கிறது.
பள்ளியிலும் உறவுகளின் பாலும் வரும் பயத்தை சும்மா பயமாக மட்டுமே பார்க்க கூடாது. பயம் என்பது, நாங்கள் ஒழுக்கத்தோடும் கட்டுப்பாட்டோடும் வாழ, எங்களை சுற்றி போடப்படும் அன்பு வேலியாகவே அணுக வேண்டும்.
வேலியில்லாத மிருகங்கள் கட்டாக்காலியாகி அலைவதைப் போல, எங்களது வாழ்வும் தறிகெட்டு போகாமல் இருக்க ஆண்டவன் அமைத்துத் தந்த வேலிக்குப் பெயர் தான் பயம்.
— JUDE பிரகாஷ்
894 total views, 1 views today
2 thoughts on “பயம்”