இனி மாற்ற முடியாத மாற்றங்கள்.
நானும் பாக்கிறேன் நீங்கள் தமிழ் பிள்ளைகள்தானே! நீங்க இருவரும் சகோதரர்கள்தானே! ஏன் இப்படி யேர்மன் மொழியில் பேசுகின்றீர்கள். வெளியில் போகும்போது, அல்லது கடையில் நிறக்கும்போது யேர்மன் மொழியில் பேசினால், அங்கு நிற்பவர்கள் ஒரு மாதிரிப்பார்ப்பர்கள் என்று சொல்கிறீங்கள். சரி இப்ப வீட்டில் உங்களைப் பெற்ற அம்மாவும், அப்பாவும்கூடவா ஒருமாதியாக உங்களைப் பார்ப்பார்கள்?
வீட்டில் தமிழில் பேசுங்கோ! இந்த பேச்சு இன்று நடைபெறத வீடுகள் இல்லை. அப்படி நடைபெறவில்லை என்றால், ஒன்று முன்பு சொல்லிச் சொல்லி முடியாது என்று கைவிட்டிருக்கவேண்டும். அல்லது யேர்மன் மொழியில் பேசுவது எமக்கு பெருமைதானே என்ற ஒரு வித பெருமிதம் காரணமாக இருக்கவேண்டும்.
இப்ப சொல்வருவது என்னவென்றால் நாம் தலைகீழாக நின்றாலும் இந்த மாற்றம் இனி மாற்ற முடியாத ஒரு மாற்றமே! சும்மா ஊருக்குபோனால் அல்லது பிற நாடுகளுக்கு போனால் பிள்ளைகள் எல்லாம் தமிழில்தான் பேசுவினம் என்று சொல்வது, எம்மை நாமே சும்மா உசுப்பேத்தி மகிழ்விப்பதாகவே அமையும்.
இன்னும் சிறுதுகாலத்தில் தமிழில் பேசுங்கள் என்று சொல்லும் பெருசுகள் மறைந்துவிடுவார்கள். பிறமொழியில் பேசுபவர்கள் எந்த தடங்கலும் இன்றிப் பேசுவார்கள்.
இதற்கு பிள்ளைகள் மட்டும் பிழையல்ல. காலம் சூழல் இவற்றை நாம் அமைத்துகொடுத்துவிட்டு நாம் நொந்து பயன் இல்லை. நமது பிள்ளைகளுடன் சரி அவர்களது பிள்ளைகளுடன் அவர்கள் தாய்மொழியில் பேச மாட்டார்கள். அவர்கள் வாழும் நாட்டு மொழியே தாய்மொழியாகிவிடும். இது மாற்ற முடியாத மாற்றம்.
திருமணங்கள்
சரி தாய்மொழிக்கு இந்த நிலை என்றால் நம் கலாச்சாரம் கரைந்து வேறுவடிவமர் வார்க்கப்பட்டுவிட்டது. இதனை தமிழர் திருமணங்களில் பார்க்கலாம்.
மணமகன் மணமகள் உடைகள் எல்லாம் மும்பாய் ஆச்சு. ஆட்டம் பாட்டம் இவையும் அவர்கள் ஆச்சு. முதலிரவு என்றபெயர் கனிமூன் ஆச்சு. முன்பின் கண்டு தெரியாதவர்கள் எல்லாம் அரசியல் கூட்டணி அமைத்தால் போல் ஆங்காகே ஒன்றாக அமர்ந்து இருக்க. உணவு பரிமாறுபவர்கள் இலக்கம் பார்த்து தவறாது சிற்றூண்டி பரிமாற. திருமணம் ஓகோ என்று முடியும். மணமக்களின் பெற்றோர் உறவினர்கள் யார் யார் என்பதனை புகைப்படம் எடுக்கும் வரிசைவைத்து தெரிந்து கொள்ளலாம். அல்லது கன்னிகாதானம் செய்யும்போது அறிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் சிற்றூண்டி உணவு பந்தியில் பரிமாறும் வேளை உறவினர்கள் நண்பர்களை ஒவ்வொருவராக நலம் விசாரித்து. எப்படி அப்பா இருக்கிறார். அம்மா என்ன செய்யிறா. அந்தக்காலத்தில் உங்கள் அம்மா உங்க வீட்டுக்கு வந்தால் எங்களை சாபபாடு தராமல் விட மாட்டா இப்பவும் உங்கள் அம்மாவைக்கும் உருளைக்கிழங்கு பிரட்டல் அப்பப்பா!!! என்று சொல்லியபடியே பந்தியில் இருப்பவருக்கு குழம்பு விட்டால் பரிமாறுபவர் மனமும் உண்பவர் மனமும் துள்ளும். அந்த சுகம் இப்ப இல்லை. காதலிப்பது மட்டும் தான் அன்று நாமாக இருந்தோம். ஆனால் திருமண ஒழுங்கு முழுவதும் பெற்றவர் கரங்களிலேயே இருந்தது. பலகாரச்சூடு அதற்கு வரும் சொந்தங்கள். அலங்காரம் அது பிள்ளைகளின் நண்பர்கள். இப்படி உறவுகள் நண்பர்களின் கொண்டாட்டமாக இருந்தது. இப்போ பெற்றோரே மண்டபத்திற்கு விருந்தினர்போல் வந்து போகிறார்கள். அதுமட்டுமன்றி தமிழர் தமிழர்களைத்தான் திருமணம் செய்வேண்டும் என்று எண்ணம் காணாமல் போகும். காதல் இயல்பாக வருவது அது இயல்பாகவே வருங்காலத்திலும் வரும். எனவே இவையாவும் இனி மாற்ற முடியாத மாற்றம்.
ஆலயங்களை எடுத்துக்கொண்டால் ஒரு சிறு கிராமத்தில்கூட பல ஆலயம் இருக்கும். சிவன்கோவில் அம்மன் கோவில், பிள்ளையார் கோவில்,முருகன் கோவில்,காளிகோவில்,வயிரவர், கோவில்,நாகம்மாகோவில்,கிருஷ்ணன்கோவில், இங்கே இன்று அனைத்தும் ஒரே கூரையின் கீழ் வந்துள்ளது. இது போக்குவரத்து நேரத்தை மீதப்படுத்துவதற்காகவும் அமைந்திருக்கலாம். அது மட்டுமன்றி வழிபாட்டுமுறைகளும் பாரிய மாற்றத்திற்குள்ளாகிவிட்டது. தெய்வங்களும் தாயகத்தில் நாம் காணாத வழிபாடாத பல தெய்வங்களாக இன்று பிரகணப்படுத்தப்பட்டு வழிபடப்படுகின்றது. (கடவுள் எங்கும் உள்ளார் எனவும் கொள்லாம்.) இவை இனி மாற்றமுடியாத மாற்றமாகிவிட்டது.
முகப்புத்தகம்.
முகப்புத்தகத்தில் தாயகத்தில் வறுமையான மக்களுக்கு உதவுவது அவர்கள்; நன்றியோடு அவற்றை பெற்றுக் கொள்வது. கால் ஊனமுற்றவர்களுக்கு நாற்காலி வண்டில் வழங்குவது. இப்படி பல அரியதொண்டுகள்ளை நம்மவர்கள் செய்கிறார்கள். அதே சமயம் அதனை படம் எடுத்து முகப்புத்தகத்தில் போட்டும் விடுவார்கள். கேட்டால் மற்றவர்களும் செய்ய இது ஊக்கமளிக்கம்; என்பார்கள். பெறுபவர்களது மனநிலை புரியாது. தன் சொந்த தாயாக தந்தையாக அண்ணனாக தங்கையாக அவர்கள் இருப்பின் அப்படி போடுவார்களா? இது கேள்வியோடு மட்டும் நிற்கப்போகும் வினா மட்டுமே.
ஆனால் இன்று சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்தனைச் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
அதனால் பெரும்பான்மை மக்கள் செய்தால் அது சரியென்ற கணிப்பே இன்று உலகில் உயர்ந்து நிற்கின்றது.
எனவே இந்த முகப்புத்தகத்தில் படம்போட்டுக்காட்டும் செயல் தானாக உணர்ந்து மாறினால் அன்றி இனி மாற்றமுடியாத மாற்றமாகிவிட்டது.
புதுவருடக்கொண்டாட்டம்.
இலங்கையில் சித்திரை வருடப்பிறப்பே. அன்று ஆலயங்களுக்கு சென்று மருத்துநீர் வைத்து தோய்ந்து புத்தாடை அணிந்து கோவில் செல்வது வழக்கம். தை முதலாம் திகதி வியாபார ஸ்தாபனங்களுக்கு புதிய கணக்கு எழுதும் மாதமாகவும். பாடசாலைகளில் புதிய வகுப்பில் புகும் நேரமாகவும். இருக்கும். இது தவிர Happy New Year சொன்து கிடையாது.
ஆனால் இன்று தை முதலாம் திகதி பிறப்பதற்கு முன்னமே முன்கூட்டியே வாழ்த்துக்கள் பின்பு பிறக்கும் கணத்தில் வாழ்த்துக்கள் பின் காலை ஆலயங்கள் எல்லாம் அர்ச்சனைகள். இதற்கு முக்கியகாரணம். புலம்பெயர் தேசத்தில் சித்திரை புத்தாண்டுக்கு விடுமுறை விடுவதில்லை என்பதே யாகும்.
இங்கும் சித்திரைப் புத்தாண்டுக்கும் தைப்பொங்கலுக்கும் ஆடிப்பிறப்புக்கும் விடுமுறைவிட்டால் கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும். இதனை முன்மெடாழியும் நாம் நினைத்தால் அந்த ஒருதினம் விடுமுறை எடுக்கலாம். ஆனால் நாம் எடுக்க மாட்டோம். இங்கு முஸ்லீம் (துருக்கி) சமூகத்தினர் தமது 40 நாள் நோன்பை அரச விடுமுறையின்றியும் சிறப்பாக இங்கு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் எதற்கும் முதல் எதிர்ப்போம். பின்பு மௌனமாக இருப்போம். பின் எதனை எதிர்த்தோமோ அதனை விமர்சையாகச் செய்வோம். எமக்கு அந்த நேரத்தில் கைகொடுப்பது ஊரொடு ஒத்து வாழ் என்னும் பழமொழியே.
எனவே இனி புதுவருடம் தை முதலாம் திகதி அது மாற்ற முடியாத மாற்றமாகிவிட்டது என்பதே உண்மை.
பிறந்தநாள்
பிறந்தநாள் கேக் வெட்டி மெழுகுதிரி கொழுத்தி கொண்டாடுவது எமது மரபு அல்ல. விளக்கை அணைப்பது அபசகுனம். நாம் விளக்கேற்றியே பழக்கப்பட்டவர்கள். ஆனால் இனி அது மாற்முடியாத கொண்டாட்ட மாவிட்டது.
அடுத்து Mother’s day, fathers day, lover’s day இது எல்லாம் நாம் தினம், தினம், கணமும் கொண்டாடியவை ஆனால் இன்று வருடத்தில் ஒரு முறை என்றாவிட்டது. முன்பு எல்லாம் இன்று காதலர்தினம் என்று ஒரு பெண்ணுக்கு பூக்கொடுத்தால் அப்ப நேற்றும் நளையும் என்ன என்பாள். அம்மா இன்று உங்கள் தினம் என்றால் அவள் எந்தத் தினத்தை எதிர்பார்த்துச் செய்தாள்.
ஆனால் இத்தினங்கள் இனி நாட்டுக்கு நாடு திகதி வேறுபட்டாலும் நடந்தே தீரும். இதனையும் இனி மாற்றமுடியாத மாற்றமாகக்கொள்ளலாம்.
உணவு:
எமது பாரம்பரிய உணவுகள் யாவும் மேற்கத்திய நாட்டவர்கள் புதிய பெயருடன் செய்வதும் அதற்கான காப்புரிமையை பெற்றுதமதாக்கிகொள்வதும் ஒரு புறம் நடக்க.நாம் அவர்களுடைய உணவை நாகரீகமாக நாவுக்கு படைக்கின்றோம். புலம்பெயர் தேசத்தில் நம்மவர்கள் எத்தனைபேர் நமது தாயக உணவை செய்கின்றனர். இத்தாலியரையே மிஞ்சுமளவிற்கு பீட்ஷா கடைவைத்திருக்கின்றோம். இந்த உணவுப்பழக்கமும் இனி மாற்றமுடியாத மாற்றங்களே!
இன்னும் எழுதுவது என்றால் குடும்ப உறவு,காதல்,கல்வி,விழாக்கள், சுயவிளம்பரங்கள், என பல மாற்றமுடியாத மாற்றங்களைத் தாங்கிக்கொண்டு உலாவருகின்றன.
இவையாவும் குற்றப்பத்திரிகையல்ல. நடைமுறையில் உள்ளவற்றை ஏற்றுக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றாமல் மிகுதிக்காலத்தை கடக்க இது உதவும் என்பதனால் மட்டுமே சொல்லப்பட்டவை.
– மாற்ற முடியாத மாற்றங்கள் – இப்படி இன்னும் ஒரு கட்டுரை இன்று நடப்பவை இன்னும் 10 வருடங்களில் மாறிவிடும்போது வெளிவர வாப்புள்ளது என்பதும் மறுக்கமுடியாத உண்மையே!
–மாதவி
761 total views, 1 views today
2 thoughts on “இனி மாற்ற முடியாத மாற்றங்கள்.”