இருள்காலமும் உளச்சோர்வும்
குளிர் காலம் வந்துவிட்டால், கட்டிலில் இருந்து எழுந்திருப்பதே பெரும் பிரயத்தனமாக தோன்றலாம். வேலையில் உற்சாகமாக, சுறுசுறுப்பாக இருப்பது கடினமாக தோன்றலாம். எம் ஊர் விட்டு இவ்வளவு தொலைவில் இருக்கும் இந்த நாட்டுக்கு ஏன் வந்தோம் என்று கூட நாம் மனவருத்தப்படலாம். இப்படி எல்லாம் தோன்றுவதற்கு காரணம் இருக்கிறது. ஏனென்றால், நம் உலகை எம் புலன்களால் தான் நாம் அனுபவிக்கிறோம். எங்கள் இயக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் சூரியன் ஒரு முக்கிய காரணம்.
சூரிய ஒளியில் குறைபாடு ஏற்படும்போது, எங்களுக்கும் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. Circadian rhythm என்று அறிந்திருப்போம் – 24 மணிநேரத்தில் எமக்கு ஒரு குறிப்பிட்ட நாள்-பொழுதில் நல்ல உற்சாகமாகவும் ஒரு குறிப்பிட்ட நாள்-பொழுதில் உடல் அலுப்பாகவும் இருக்கிறதல்லவா? உடலின் Circadian rhythm தான் இதற்கு காரணம். எங்கள் மூளையின் பின்புலத்தில் இருந்து எங்கள் உறக்கத்தையும் விழிப்பையும் ஒழுங்குபடுத்தும் ஒரு 24-மணி நேர உடல்-கடிகாரம் இது. எங்கள் சூழலின் இருளும், ஒளியும் எங்கள் உடல்-கடிகாரத்தை கட்டுப்படுத்துகிறது. சூரிய ஒளியில் குறைபாடு ஏற்படும்போது எங்கள் மூளையின் இரசாயனத்தில் மாற்றம் ஏற்படுவதோடு உடல்-கடிகாரமும் மந்தம் அடைகிறது.
பிரகாசமான சூரிய ஒளி இல்லாது போகும்போது, மூளை, நித்திரைக்குரிய ஹோர்மோன் Melatonin இனை தொடர்ச்சியாக குறைந்த அளவில் சுரக்க ஆரம்பிக்கிறது. காலையில் எழுந்தபின், அப்படியே கட்டிலில் திரும்பவும் விழுந்து படுக்கலாம் என்று தோன்றினால், அது Melatonin இன் குற்றமே! உடல் சோர்வும் களைப்பும் இரவில் நித்திரைக்கு போகும் போது அற்புதமாக இருக்கும், ஆனால், பல முக்கியமான விடயங்களை முடிக்கவேண்டிய ஒரு வேலை நாள் என்றால், என்ன செய்வது?
ஒளி குறைந்த நாட்களில், மூளை Serotonin என்ற ஹோர்மோன் இனையும் குறைவாகவே சுரக்கிறது. Serotonin க்கும் எங்கள் உள உணர்வுகளுக்கும், மற்றும் பசி உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. Serotonin குறைபாடு, இனிப்பான மற்றும் ஆரோக்கியமற்ற மாப்பொருட்களில் நாட்டத்தை அதிகரிப்பதால், இருள்காலங்களில் உணவுப்பழக்கங்களும் ஆரோக்கியம் குறைந்ததாக மாறுகிறது. இத்தோடு, உளச் சோர்வும் சேர்ந்தால் மேலும் கடினம் தான்.
முகில் மூட்டமான நாட்கள் நீண்டுகொண்டு போகும் போது, vitamin D குறைபாடும் ஒரு எதிர்மறையான காரணியாகிறது. ஏவையஅin னு யின் முக்கியத்துவம் பல ஆய்வுகளில் தெளிவாகியிருக்கும் ஒன்று. மனிதர்கள் கூடுதலாக இயற்கையோடும், வெளிச்சூழலோடும் வாழ்ந்தவர்கள். இப்பொழுது, எங்கள் கூடுதல் பொழுது நான்கு சுவர்களுக்குள் கழிகிறது. சூரியன் மறைந்துவிடும் போது உடலில் இயல்பாக இருக்கும் vitamin D அளவும் மறைந்துவிடுகிறது.
மந்தாரமான நாட்களில் ஏற்படும் சோர்வான உணர்வை தடுக்க, vitamin D எடுக்கலாம் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள். vitamin D எலும்பு ஆரோக்கியம், மற்றும் இருதய ஆரோக்கியத்தோடு தொடர்புபட்டிருக்கிறது. மற்றும் Type 2 Diabetes உடல் பருமன், புற்றுநோய், இறப்பு சாத்தியக்கூறுகளோடு vitamin D குறைபாடு தொடர்புபட்டிருக்கிறது. அத்தோடு vitamin D மூளை தொழிற்பாட்டையும் Serotonin சுரப்பினையும் சீர்செய்கிறது. வைத்தியர் பரிந்துரை இல்லாமலேயே, Melatonin வாங்கி பாவிக்கமுடியம் என வைத்தியர்கள் கருதுகிறார்கள். இரவு நித்திரைக்கு முன் Melatonin எடுப்பது எம் உடல்-கடிகாரத்தை சீர்செய்ய உதவலாம்.
சிலரில், ஒளி குறைந்த நாட்களில் ஏற்படும் உளசோர்வு ஒரு நோய்-நிலையாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. Seasonal Affective Disorder [SAD] எனும் இந்த நோய்-நிலையால் கிட்டத்தட்ட 5% அமெரிக்கர்கள், வருடத்தின் 40% காலம் வருந்துவதாக 2012 இல் வெளியான American Academy of Family Physicians கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பிட்ட மாதங்களோ, பருவக்காலங்களோ என்றில்லாமல், சூரிய ஒளி குறைந்த மாதங்களில், ஏன் புரட்டாதி மாதத்தில் கூட இந்த நிலை சிலரை தாக்குகிறது.
SAD இருப்பவர்கள், Light therapy மூலம் உதவி பெறுகிறார்கள். இந்த சிகிச்சைமுறை எளிமையானது – பிரகாசமான ஒளியின் முன் ஒவ்வொரு காலையும் 20 இலிருந்து 60 நிமிடம் வரை இருக்கவேண்டும். ஒரு முறை, 20 நிமிடம் இந்த சிகிச்சை பெற்றவர்களே, பலனடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒளி குறைவான நாட்கள் உங்கள் மனதை சோர்வடைய செய்கிறதோ இல்லையோ, உங்கள் உற்சாகத்திற்கும் திருப்திக்கும் உதவியாக சில எளிமையான வழிமுறைகளே போதியதாக இருக்கிறது.
தினமும், முடிந்தால் காலை நேரத்தில், ஒரு மணி நேரமாவது, வெளியில் ஒளியில், நேரம் செலவிடுங்கள்.
சமூக தொடர்பாடல்களை பேண முயற்சி செய்யுங்கள்.
உடற்பயிற்சியை தொடர்ந்து பேண முயற்சி செய்யுங்கள்.
இருள் அகன்று சூரியன் தோன்றத்தானே வேண்டும்?
— Dr.புஷ்பா கனகரட்ணம்.
730 total views, 1 views today
1 thought on “இருள்காலமும் உளச்சோர்வும்”