முதுமையில் முதிர்ந்த காதல்

காதல் எனும் வார்த்தையைக் கேட்டதும் மனசுக்குள் என்னென்ன காட்சிகள் வருகின்றன ? இரண்டு இளசுகள் கரம் கோர்த்துக் கடற்கரையில் நடக்கிறார்களா ? சூரியன் பின்னணியில் மறைய இரண்டு சின்னஞ் சிறுசுகள் அரவணைத்துக் கொள்கிறார்களா ? காற்றுக்கே வெட்கம் வரும் வகையில் இரண்டு இதழ்கள் ஒரே நேரத்தில் கவிதை எழுதுகின்றனவா ? இப்படி ஏதோ ஒரு காட்சி தானே மனக்கண்ணில் விரிகிறது ?
காரணம் இல்லாமல் இல்லை. அப்படித்தான் நமது ஊடகங்களும், திரைப்படங்களும், இலக்கியங்களும் நமக்கு போதித்திருக்கின்றன. அந்த இலக்கணத்தை மீறித் தெறிக்கும் காதல்கள் கவனிக்கப்படுவதும் இல்லை. உண்மையில் காதல் என்பது இளசுகளுக்குள் உதித்து, இளசுகளோடு முடிந்து விடுவதா ?
காதல் என்பது வயதுகளை மீறிய வசீகரம். வருடங்களுக்குள் அடங்கி விடாத வசந்தம். அதை காலத்தின் சுழற்சியோடோ, பருவத்தின் மலர்ச்சியோடோ அடக்கி விட முடியாது. அது துவக்கத்துக்கும் முன்பே துவங்கி, முடிவுக்குப் பிறகும் தொடரும் ஒரு புரியாத புதிர்.
காதல் ஒரு விதை என வைத்துக் கொண்டால், அது எந்த நிலத்தில் விழுந்தாலும் முளைத்தெழும்புகிறது. இளைய நிலத்தில் விழுந்த விதை மாங்கனியையும், முதிய நிலத்தில் விழுந்த விதை பலாக்கனியையும் கொடுப்பதில்லை. விழுகின்ற விதைகளுக்கேற்ப மரங்கள் கனி கொடுக்கின்றன.
உண்மையில் முதுமைக் காதல் என்பது காதலின் வளர்ச்சி நிலை. முதுமைக் காதல் என்பது காதலின் வரம். முதுமைக் காதல் என்பது மானுடத்தின் மகத்துவம்.
சிறுவயதில் முளைவிட்டு, இளவயதில் கிளைவிட்டு, முதிர் வயதில் விழுதிறக்கிக் கிடக்கும் காதல்கள் கடவுளின் கருணையைக் கணக்கின்றிப் பெற்றவைகள். அப்படிப்பட்ட காதல் வாய்க்கப்பெற்றவர்கள் சிலரே. அவர்களே அடுத்த தலைமுறைக்கு உண்மைக் காதலின் அழியாச் சுவடுகளை வழங்கிச் செல்பவர்கள்.
சிறுவயதில் காதல் பாறையாய் இருக்கிறது. அதை காலம் தனது உளிக் கரங்களால் செதுக்கத் துவங்குகிறது. வாழ்வின் அனுபவ அடிகளைத் தாங்கிக் கொண்டு ஒத்துழைக்கின்ற உளியும், பாறையும் சிலையை நோக்கிப் பயணிக்கின்றன. வலிகளைத் தாங்காமல் பிரிந்து விடும் பாறைகள், சிலைகளைப் பிரசவிக்க முடியாமல் சிதைந்து விடுகின்றன. முதுமை, காதலின் சிலையைப் பிரசவிக்கிறது. காதலின் உன்னத நிலையை தரிசிக்கிறது.
இளவயதுக் காதல் தனது பயணத்தைக் கடற்கரையில் ஆரம்பிக்கிறது. வாழ்க்கை அலைகள் அவர்களை அலைக்கழிக்கின்றன. அலைகளின் எதிர்பாய்ச்சலை எதிர்கொண்டு பயணிக்கின்ற படகுகள், அலைகளைத் தாண்டிய அமைதிப் பாதைக்குள் பாதம் பதிக்கின்றன. பாதியிலேயே முடங்கி விடுகின்ற பயணங்கள் மீண்டும் கரைகளிலே தஞ்சமடைந்து விடுகின்றன. அவர்கள் இலட்சிய எல்லையான முதுமைக் காதலை முகர்ந்து பார்ப்பதில்லை.
இளமை உடலின் வலிமையைக் கொண்டு மனதில் வெற்றிடத்தை நிரப்ப முனைகிறது. முதுமை மனதின் வலிமையைக் கொண்டு உடலில் இயலாமையை இட்டு நிரப்பி நடக்கிறது. விழிகளின் கவர்ச்சியிலும், ஈர்ப்பின் கிளர்ச்சியிலும் மட்டுமே காதலை நுகரும் காதலர்கள் முதுமையின் மலர்ச்சோலைகளில் இளைப்பாறுவதில்லை.
இளமைக்காதல் எதிர்பார்ப்புகளின் மேல் கட்டப்பட்ட வீடாக இருக்கிறது, முதுமைக்காதலோ எதிர்பார்ப்புகளற்ற உறவின் மேல் கட்டப்பட்ட ஆலயமாய் இருக்கிறது. எதிர்பார்ப்புகளின் எல்லைகளைத் தாண்டிய காதலில் புனிதத்தின் வாசனை மெலிதாய்க் கிளம்புகிறது.
ஈகோவின் முதுகில் ஏறி சவாரி செய்யும் இளமைக் காதல், முதுமையில் மறைந்து விடுகிறது. ஈஸி கோயிங் என ஈகோ தனக்கென ஒரு புதிய விளக்கத்தை எழுதிக் கொள்கிறது. விட்டுக் கொடுத்தல் சர்வ சாதாரணமாய் முதுமை மனங்களுக்கு சாத்தியமாகிறது. இதனால் தான் முதுமைக் காதல் முதன்மைக் காதலாகிவிடுகிறது.
இளமைக் காதலுக்கு வாழ்க்கைப் போராட்டங்கள் மாபெரும் சுமை. பொருளாதாரப் போர்களுக்கும், தேவைகளுக்கான தேடல்களுக்கும் அவை ஓடித் திரியும். மிஞ்சிய நேரங்களில் பகிர்வதாகவே காதல் அமையும். முதுமையோ காதலைப் பகிர்வதிலேயே காலத்தைக் கடத்தும். காதலில் கசிந்துருகுவது இளமையெனில், காதலாகிக் கசிந்துருகுவது முதுமைக் காதல் எனலாம்.
இளமைக் காதல் செயல்களில் கட்டப்பட்ட உணர்வுகளின் பயணம். முதுமைக்காதல் உணர்வுகளில் கட்டப்பட்ட செயல்களின் பயணம். காதலின் பயணத்தில் இளமைக் காதல் சுமைகளைத் தாங்கும். முதுமைக் காதலை சுமைகளே தாங்கும். உறவுகளின் பிணைப்பு இருக்கும் போது, சுமைகளின் தவிப்பு தெரிவதில்லை.
நிபந்தனைகளற்ற அன்பு முதுமையின் கிளைகளில் தான் பூத்துக் குலுங்கும். அனுபவத்தின் ஆணிவேர்கள் வாழ்வின் நிலத்திலிருந்து பூக்களுக்கான புத்துணர்ச்சியை பிரித்தெடுத்துக் கொள்கின்றன. பண்டமாற்று முறையிலான சிந்தனைகள் அழிந்து போய், ஒருவரில் ஒருவர் சரணடைந்து கூடு விட்டுக் கூடுபாயும் உயிர்மாற்றுக் காதல் உருவாகிவிடுகிறது.
முதுமையின் சுருக்கங்களுக்கு இளமையின் பளபளப்பை விடப் பக்குவமான உணர்வுகள் எழுகின்றன. அவை அன்பினால் தோய்ந்து, வேற்றுமைகளை புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் வெளிப்படுகின்றன. அடுத்தவரைக் காயப்படுத்தாத உரையாடல்களினால் அழகுபடுத்தப்படுகின்றன. கரம் கோர்த்த மௌனத்தில் புனிதமடைகின்றன. சுயநலமற்ற சிந்தனைகளினால் முழுமையடைகின்றன.
சந்தேகங்களின் போராட்டக்களத்தை விட்டு விட்டு, நம்பிக்கையின் விளைநிலத்தில் முதுமை வந்தடைகிறது. வார்த்தைகளின் போராட்டத்தைக் குறைத்து விட்டு மௌனத்தின் மொழிபெயர்ப்புகளில் நடைபோடுகின்றன. பதட்டத்தின் பாதைகளை விட்டு விட்டு, பாதுகாப்பின் நிச்சயத்தில் இளைப்பாறுகின்றன.
காதல் எப்போது வேண்டுமானாலும் முளை விடட்டும், அது முதுமையின் கடைசிப் படிக்கட்டு வரை பூக்கள் விடுக்க வேண்டும்.
காதல் எப்போது வேண்டுமானாலும் முதல் சுவடை வைக்கட்டும், ஆனால் அது முதுமையின் கடைசிக் கோடு வரை நடை போடட்டும்.
முதுமையில் முதிர்ந்த காதல்,
இளமையின் இலட்சியப் பரிசு.
காதலுடன் நடைபோடுவோம்
முதுமையின் நதிக் கரைகளில்,
இளமையின் முகவரிகளில்.
— சேவியர்
3,388 total views, 3 views today
2 thoughts on “முதுமையில் முதிர்ந்த காதல்”