எண்ணங்களே விதியாகும் எண்ணங்களில் கவனமாயிருங்கள்!!
“எண்ணம் போல் வாழ்க்கை” “மனம் கொண்டதே மாளிகை” என்று பலவாறு வாழ்வினுடைய தொடக்கத்தை எண்ணங்களிலிருந்தே புள்ளி வைத்து ஆரம்பித்துச் செல்வதாகக் கூறியிருக்கிறார்கள்.
மனம் என்பது என்ன? அது எங்கே இருக்கிறது? அது எவ்வளவு ஆற்றல் மிக்கது? என்று பார்த்தால் மனம் என்பது அனுபவங்களின் திரட்டலால் உருவானதே. குழந்தை கருவிலேயே சில அனுபவங்களைப் பெற்றுவிடும். தாயினுடைய இதயத் துடிப்பு, உடலின் கதகதப்பு, தாய் பேசும்போது ஏற்படும் அதிர்வுகள் போன்றன. பிறந்தவுடன் சூழலில் கிடைக்கின்ற விபரங்களை வைத்து மனமானது விரிவடைகிறது. தகவல்கள் அதிகரிக்கின்றன.
எண்ணங்களுக்கு ஆற்றல் இருப்பதை பண்டைக்காலமே சித்தர்கள் மரபுவழியாக ஆணித்தரமாக கூறிவந்தனர். இன்று நவீன யுகமும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது. எண்ணங்களின் அதிர்வலைகளை கொண்டே அந்த எண்ணங்களுக்கு உரியவரின் சக்தி வளையம் ( Aura) உருவாகிறது. அத்தோடு மட்டுமன்றி அது உடலிலும், மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. நேர்மறை எண்ணங்கள் உடையவர்களுடைய சக்தி வளையம் மிக ஆற்றல் வாய்ந்ததாகவும், ஒரு அடி தொடக்கம் பல தூரம் வரை பரந்திருக்கும் என கூறப்படுகின்றது. அவரவர் எண்ண வலிமைகளுக்கு ஏற்ப அவை உருவாகியிருக்கும். மகான்களுடைய சக்தி ஆற்றல் அந்த சூழல் அனைத்துக்குமே நன்மை பயக்கக் கூடியது. சக்தி வளையத்தை ( Aura) படம்பிடிக்கும் நவீன கமரா கூட இன்று உள்ளது.
சரி இந்த நேர்மறை, மற்றும் எதிர் மறை எண்ணங்களால் என்ன விளைவு ஏற்படுகின்றது என பார்ப்போம்.
“விதி ” என்ற சொல் தொன்று தொட்டே புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த விதியை வடிவமைப்பவர் யார்? எவ்வாறு இந்த விதி நல்தாகவோ அல்லது அதற்கு நேர்மாறாகவோ உருவாகிறது எனப் பார்த்தால். அதற்கு மூல காரண கர்த்தாவாக இருப்பது அவரவர் எண்ணங்களே. இதனை “ஈர்ப்பு விதி” என்று கூறலாம். எண்ணமானது எதை அதிகம் விரும்புகின்றதோ அல்லது வெறுக்கின்றதோ அந்த எண்ணம் மீண்டும் மீண்டும் உதயமாகும் போது அந்த எண்ணத்தில் சக்தி குவிகிறது. சக்தி இங்கே எங்கே வந்தது என்று கேள்வி வரலாம். எல்லா விடயங்களும் பிரபஞ்ச சக்தியால் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அதற்கு விஞ்ஞான பெயர் கொடுத்தாலோ இல்லை மெஞ்ஞானப் பெயர் கொடுத்தாலோ அது தன்னிலையில் மாற்றம் கொள்வதில்லை. இந்த நிலையில் எண்ணங்களின் ஆற்றலுக்கு ஏற்ப எதை நாம் அதிகம் சிந்திக்கின்றோமோ அதை நோக்கி நகர்த்தப்படுகிறோம். அந்த விடயங்களும் எம்மை நோக்கி ஈர்க்கப் படுகின்றது. இந்த ஈர்ப்பு விதி மட்டுமே என்றும் மாறாமல் உள்ளது. இதற்கு நல்ல விதி , கேடு கெட்ட விதி என்ற பாகுபாடு இல்லை. எந்த எண்ணத்தை அதிகம் அழுத்தம் கொடுக்கிறீர்களோ அது எதிர்கால விதியாக உங்கள் முன் தோற்றம் பெறப் போகிறது.
நேர்மறை எண்ணங்கள் அதிகம் நிறைந்தவருடைய சக்தி அதிர்வுகள் எதிர்மறை எண்ணங்கள் உடையோர்களை விட முற்றிலும் மாறுபட்டது. இந்த சக்தி அதிர்வுகள் இரண்டுமே அவரவர்க்கும் அவர்களை சுற்றியுள்ள சூழலுக்கும் அதன் தன்மைக்கு ஏற்ப தாக்கத்தை ஏற்படுத்தும். அதீத நேர்மறை ஆற்றல் எதிர்மறை ஆற்றலை சீராக்கி தன் ஆற்றலால் நிறைக்கும். அது போலவே எதிர்மறை ஆற்றலும் செயற்படும். எனவேதான் மகான்களையும், நேர்மறை ஆற்றல்கள் நிறைந்த பகுதிகளையும் தேடிச் சென்று தமது ஆற்றலை சீர்படுத்தும் நோக்கில் பலர் தெரிந்தோ தெரியாமலோ அனுகூலமடைகின்றனர் இதில் காவி கட்டினால் மட்டுமே மகான்கள் என்ற பொருள் கொள்ள வேண்டாம். சின்னஞ்சிறு பாலகன் கூட அதீத நேர்மறை ஆற்றலால் நிறைந்திருக்கும் வாய்ப்புக்கள் உண்டு. சிலர் வீட்டிற்கு சென்று வந்தாலே ஏதோ ஒரு புத்துணர்வு பெருகும் .
சிலர் எப்போதும் சோகம் விரும்பிகளாகவே காணப்படுபவர். இன்னும் சிலர் தமக்கு எப்போதும் ஏதாவது இடையூறு வருவதாகவே நம்பிக்கை கொண்டிருப்பார்கள். தனக்கு மட்டுமே இப்படி நடக்கிறது என எண்ணுபவர்களும் உண்டு. இதுதான் மிகவும் ஆபத்தானது. அவர்கள் வடிவமைப்பது எதிர்கால விதி என்பதை மறந்து ஏற்பட்ட சோகங்களை மீட்டு மீட்டு சுகம் பெறுவர். இதனையே அவர்கள் ஈர்த்துக் கொள்வதால் மீண்டும் அதே நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டிய தருணம் அமைந்து விடுகிறது. நம்பிக்கை என்ற புள்ளிக்கு இன்னும் ஆற்றல் அதிகம் என்பதை மறந்துவிட வேண்டாம். எனவேதான் இப்படியானோர்கள் வாழ்வில் தொடர் சோகங்கள் சம்பவிப்பதை காண முடிகிறது.
அப்படியானால் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள தீர்வே இல்லையா? ஏற்கனவே ஏக்கர் கணக்கில் எண்ணிவிட்ட எதிர்மறை சிந்தனைகளை என்ன செய்வது என்று பதற்றப்படத் தேவையில்லை. தீர்வுகளை வைத்துக் கொண்டுதான் பிரச்சனைகள் உருப்பெற்றன. ஒரே வழி தான் இப்போது உள்ள எண்ணத்தை நேர்மறையாக மாற்றி விடுவதே வழி. அதாவது எந்நிலையில் இருந்தாலும் அந்நிலையை தளர்வான மனதோடு ஏற்றுக் கொண்டு எது நடந்தால் எங்களுக்கு பிடிக்குமோ அது நடப்பதாகவே எண்ணிக் கொண்டால் அதை நோக்கி நாம் நகர்வது மட்டுமன்றி அந்த விடயமும் எம்மை நோக்கி ஈர்க்கப்படத் தொடங்கி விடும். இதனையே எண்ணம் போல் வாழ்க்கை என்றனர். நேர்மறை நம்பிக்கை வளர்த்து கொடிய நோயிலிருந்து மீண்டவர்களும் உண்டு. எண்ணங்களுக்கு ஏற்பவே உடலில் இரசாயன மாற்றங்கள் உருவாகி உடல் தன்னை தொழிற்பட வைக்கிறது. உதாரணமாக மாங்காயோ புளியம்பழத்தையோ உண்டு பார்த்தவர்கள் அது இல்லாத போதும் கூட அதைப்பற்றி நினைக்கும் போது அதனை உண்மையிலேயே உட்கிரகித்துக் கொள்வதற்காக உமிழ்நீர் சுரப்பதில்லையா அதுபோல. சம்பவம் இல்லாவிட்டாலும். எண்ணத்தால் தாக்கம் இடம்பெறும். உணர்ச்சி மிக்க சந்தோசத்தினால் அதிகப்படியான நேர்மறை ஆற்றல்களைப் பெற முடியும். காரணமல்லாத விடயங்களையும் கொண்டாட்டமாக மாற்றுவதால்த்தான் குழந்தைகளால் அவ்வளவு மலர்ச்சியாக இருக்க முடிகிறது. எனவே வாழ்வில் எங்கெல்லாம் மகிழ்ச்சி பொங்க முடிகிறதோ அப்போதெல்லாம் புத்துணர்வு கிடைக்கப்பெறும்.
எந்நேரமும் கலகலப்பாகவே இருக்கும் நபர் கெட்டவராக இருப்பினும் கூட என்றும் அதே கலகலப்போடு வாழ்வதையும் காண்கிறோம். அதே மிக்க நல்ல மனிதர் எப்போதும் இருண்ட வாழ்வோடு போராடுவதையும் காண்கிறோம். இங்குதான் சிந்திக்க வேண்டும். விதியானது நல்வினை தீவினையை விட எண்ணங்களின் ஈர்ப்புக்கு ஏற்பவே வடிவமைக்கப்படுகிறது. நல்வினையில் ஏற்படும் ஆன்ம திருப்தியும், தீவினையால் ஏற்படும் குற்ற உணர்வும் எண்ணத்தில் தாக்கம் புரிந்து தான் விதியை வடிவமைக்கின்றன. நல்வினையால் எண்ணத்தில் எந்த மாற்றமும் உருவாகாமலும், செய்த தீவினையால் எந்த குற்ற உணர்வுமே எண்ணிக்கொள்ள முடியாதவர்களுடைய விதியை இந்த எண்ண ஆற்றல் சென்று சேர்வது மிகவும் குறைவாகவே உள்ளது எனலாம். குற்றம் புரிந்தவர்களோ அல்லது எதிர்மறை சிந்தனை நிறைந்தவர்களோ தமது வாழ்வை மகிழ்வாக நேர்மறையாக மாற்ற வேண்டுமெனில் முதலில் செய்ய வேண்டியது குற்ற உணர்வை எண்ணத்திலிருந்து அகற்ற வேண்டும். ஏனெனில் அந்த குற்ற உணர்வே மோசமான விதியை உருவாக்கித் தந்துவிடும். எனவே குற்ற உணர்வை நீக்கி நேர்மறையான சிந்தனையில் எண்ணத்தை செலுத்தி செயற்படும் போது அவை வாழ்வில் விரும்பிய மாற்றங்களின் சம்பவங்களோடு முன் வந்து நிற்கும்.
இதுவே எண்ணங்களின்(எண்ணம் ) ஈர்ப்பு விதியோடு கூடிய நாமே வகுத்த எமக்கான தலைவிதி.
அப்படியானால் எமக்கு அப்பாற்பட்ட சக்தி என்ற ஒன்றும் இல்லையா? என்ற கேள்விக்கு உண்டு என்பதே பதில் . இவை எல்லாம் எப்படி உருவாக்கப்பட ஒரு சக்தி தொழிற்படுகிறதோ அதுவே அந்த பிரபஞ்ச சக்தி. உங்களுக்கு விரும்பிய பெயரை நீங்கள் சூட்டிக் கொள்வதில் அச்சக்திக்கு ஆட்சேபனை ஏதுமில்லை.
கரிணி
2,344 total views, 1 views today
1 thought on “எண்ணங்களே விதியாகும் எண்ணங்களில் கவனமாயிருங்கள்!!”