காதல்
பூவைவிட காமம் மெல்லியது.
அதன் உண்மையை அறிந்தால் வாழ்க்கை அழகு
காதலர் தினம் பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடப்படுவதன் காரணம் பற்றி சென்ற ஆண்டு கட்டுரையில் நான் விளக்கியிருக்கின்றேன். ஆனால், இந்த காதலர் தினம் கொண்டாடப்படுதல் அவசியமா? என்ற கேள்வியுடன் பல நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார்கள். வியாபார நோக்கத்துடன் காதலர் தினத்தை விலையுயர்ந்த ஒரு விழாவாக மாற்றிவிடுகின்றார்கள் என்றும் இவ்விழா கலாசாரத்தை சீர்குலைக்கின்றது என்றும் பலவாறான எதிர்ப்புகள் நிலவுகின்றன. இந்நிலையில் காதலர் தினத்தின் முக்கியத்துவம் பற்றி சிறிது மனம் பதிப்போம்.
காதல் என்பது உலகத்து உயிர்கள் அத்தனையையும் தன் பிடிக்குள் அடக்கியுள்ளது. உடற்பசி, உள்ளப்பசி, உயிர்ப்பசி, பிறவிப்பசியே காதல் என்பர். அஃறிணைக்காதல் கல்லாக்காமம், இயற்கையின்வீறு. மனிதர்களிடத்தில் தோன்றும் காதல் நினைவில் இனித்து, அறிவில் விளங்கி, கல்வியில் வளர்வது என்று வ.சு.ப. மாணிக்கனார் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். சங்கநூல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு மொத்தம் 2381 பாடல்கள். இதில் 1862 பாடல்கள் அக்த்திணையையே குறிக்கின்றன. இவ் அகத்திணை வயப்பட்ட காதலை தொல்காப்பியர் களவியல், கற்பியல் என அகத்திணை பற்றிய செய்திகளை இரண்டாகப் பிரிக்கின்றார்.
புலவனுக்கு மதம் எனப்படுவது ஆண்பெண் காதலே. அக்காதல் இலக்கியத்தின் வற்றாத ஊற்றிடங்களுள் ஒன்று. கவிதை எண்ணத்தை உருவாக்கும் சார்புகளுள் ஒன்று. இயற்கை இன்பத்தின்பால் உலகை ஆட்டிப்படைக்கும் காதல் இன்பத்தைக் களிப்பான நாளாகக் கொண்டு விழா எடுப்பதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன்.
ஆண் பெண் இருபாலாரிடையே வெளிப்படும் காமத்தோடு கூடிய காதல் சங்கம் தொட்டு இன்று வரை பாடல்களின் மூலம் அழகாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. காமம் கடந்த காதல், காமத்தோடு கூடிய காதல் என்னும் போது இயற்கையைக் காதலித்தல், செய்யும் தொழிலைக் காதலித்தல், கற்கும் கல்வியைக் காதலித்தல், தன்னைத்தான் காதலித்தல், வயதான தம்பதியினரின் உச்சம்தொட்ட அன்பின் வெளிப்பாடு என காமம் கடந்த காதல் வெளிப்படுகின்றது. தெய்வீகக் காதல் ஆண்டாள் பாடல்களில் அழகாக எடுத்துக்காட்டப்பட்டு இருக்கின்றது. ஆயினும் அவற்றிலும் கூட காமம் வெளிப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
~~குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சயணத்தில் மேலேறி
நற்பிண்ணை கொங்கை மேல் வைத்துக் கிடந்த
மலர் மார்பா வாய்திறவாய் ||
என்று திருமாலை நினைத்து ஆண்டாள் பாடுவதாக இப்பாடல் வந்திருக்கின்றது. திருமணத்தை மறுக்கப்பட்ட பெண்களின் குறியீடாகவே பெரியாழ்வாரின் கற்பனைப் பாத்திரப் படைப்பே ஆண்டாளாக இருக்கலாம் என்பது ஆராய்வுக்குறிப்பு. ஆயினும் ஆண்டாள் பாடல்கள் தெய்வீகக் காதலைப் புலப்படுத்தியிருப்பது காணக்கூடியதாக இருக்கின்றது. காதல் அடைதல் இயற்கை. அது கட்டில் அகப்;படும் தன்மையதோ என்று பாரதிதாசன் எடுத்துரைக்க, காமம் என்ற சொல் காதலுக்கு பயன்படுத்தப்படுவது அறியக்கிடக்கின்றது.
“காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே”
அக்காமம் என்பது, வருத்தமும் நோயும் அன்று. மேட்டு நிலத்தில் தழைத்த, முதிராத இளைய புல்லை, முதிய பசு, நாவால் தடவி இன்புற்றாற்போல நினைக்குங் காலத்தில் அக்காமம் புதிய இன்பத்தை யுடையதாகும்.
எனக் காமமாவது எமது அறிவு நிலைக்கு உட்பட்டது என குறுந்தொகையில் கூறப்பட்டுள்ளது.
வெகுளிப்பெண் படத்தில் கண்ணதாசன் காதலாலே போதை வந்தது, காதலால் கவிதை வந்தது, ஆதலாலே காதல் செய்வது, ஆணும் பெண்ணும் ஆசை கொள்வது|| என்று எழுதியிருக்கின்றார். வைரமுத்து ~~உலகமெல்லாம் ஒரு சொல். ஒரு சொல்லில் உலகம். காதல் கற்காலம் தொடங்கி இன்ரநெற் வரையில் அன்றும் இன்றும் என்றென்று காதல், காதலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும், வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்… காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்… செத்துக் கொண்டே வாழவும் முடியுமே… அதற்காக வேணும்… காதலித்துப் பார்! என்றார்.
காதல் பற்றி மகாகாவி பாரதியார் சொல்கின்றபோது தனது குயில்பாட்டிலே
“காதல் காதல் காதல்
காதல் காதல்போயிற் காதல்போயிற்
சாதல் சாதல் சாதல்” என்றார்.
இவ்வாறான காதல் ஆண்பெண் இருபாலாரிடையே தோன்றும் போது செம்மண்ணில் மழைநீர் சேர்கின்றபோது, அந்நீரும் செந்நீராவது போல் இரண்டறக்கலக்கும் எனக் குறுந்தொகையில்
“யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே”
செம்புலப்பெயல் நீரார் பாடியிருக்கின்றார்.
இதனையே பாரதியும் கண்ணம்மா என் காதலியில்
“அன்னிய மாகநம்முள் எண்ணுவதில்லை – இரண்
டாவியுமொன் றாகுமெனக் கொண்டதில்லையோ? என்கிறார்.
வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம், செப்பல்(தனக்குள் பேசிக்கொள்ளல்) நாணு வரை இறத்தல்(வெட்கம் இல்லாமல் போதல்) நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு (காதல் கைகூடாவிடத்து சாக நினைத்தல்) என தொல்காப்பியர் பொருளதிகாரத்திலே களவொழுக்கம் பற்றி அழகாக எடுத்துக்காட்டுகின்றார்.
இவ்வாறான பண்புகளைக் கொண்ட காதலானது பெண்களிடத்து மென்மையானது, ஆண்களின் காதல் பாதுகாப்பானது. பெண்களின் காதல் அப்படியில்லை. எந்த நேரத்திலும் அழிந்து போகலாம் என்பதற்கு அத்தாட்சியாக குறிஞ்சிநிலத்துத் தோழி தன் வாயிலாக தலைவனுக்குப் புலப்படுத்துகின்றாள்.
“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே”
அதாவது, வேரிலே பழுக்கின்ற பலாப்பழங்களையுடைய மலைச்சாரலையுடைய மன்னனே. இங்கே பெரிய பலாமரமொன்றின் சிறிய கொம்பில் சிறிய காம்பில் பெரிய பழம் தொங்குவதுபோல் தலைவியின் காமம் என்கிறாள்.
இதனையே வள்ளுவரும்,
~~மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்||
எல்லாவற்றிலும் மெல்லியதாகிய பூவைவிட காமம் மெல்லியது. அதன் உண்மையை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே எனக் கூறும் வள்ளுவரை நிலைநிறுத்தி, ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையே எழும் காதல் நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது, நீரை விட அளவற்றது எனக்கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
— கௌசி.
2,925 total views, 2 views today
1 thought on “காதல்”