திடீர் புத்தர் சிலைகள்: ஆக்கிரமிக்க இனங்காணப்பட்ட 117 இடங்கள்!
வடக்கு – கிழக்கில் இப்போது புத்தர் சிலைகளின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியிருக்கின்றது. கடந்த இரு மாதகாலமாக வடக்கு – கிழக்கை கொதி நிலையில் வைத்திருக்கும் செய்தி இதுதான். அதாவது திடீர் புத்தர் சிலைகள்!
இரண்டு இலக்குகளுடன் திடீர் புத்தர் சிலைகள் இரவோடிரவாக வருகின்றன. தமிழ்ப் பகுதிகளை சிங்கள மயமாக்குவதற்குவதும், வடக்கு கிழக்கு இணைப்பை நிரந்தரமாகவே துண்டிப்பதும்தான் அந்த இலக்குகள். இந்த இலக்குளை அடைவதற்காக அரசாங்கம் புதிதானக் கண்டுபிடித்துள்ள அகிம்சை மார்க்கம்தான் இது. இரத்தம் இன்றி- கத்தி இன்றி போர் செய்வது எனச் சொல்வார்கள். அந்த வகையில் சமாதானத்தைப் போதித்த புத்தரையே நில ஆக்கிரமிப்புக்கான ஒரு கருவியாக அரசாங்கம் பயன்படுத்துகின்றது.
நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளவில் சில வாரங்களுக்கு முன்னர் வைக்கப்பட்ட புத்தர் சிலை அங்கு அச்சநிலையை ஏற்படுத்தியது. கேந்திர முக்கியமான ஒரு இடத்தில்தான் இந்த ஆலயம் உள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் உள்ளது. வடக்கையும், கிழக்கையும் இணைக்கின்ற ஒரு பகுதி இது. இந்தப் பகுதி இப்போது கொதி நிலையில் இருக்கின்றது.
நீராவியடியில் இரவோடு இரவாக இரகசியமாகக் கொண்டுவந்து வைக்கப்பட்டது முதலாவது புத்தர் சிலையல்ல. இது இறுதியானதாகவும் இருக்கப்போவதில்லை. ஏனெனில் இவ்வாறு புத்தர் சிலைகளை வைத்து தமிழ்ப் பகுதிகளை சிங்கள மயமாக்குவதற்கு 100 இடங்கள் வடபகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ளது.
தமிழ் பகுதிகளில் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் மிகவும் ஆபத்தான ஒரு திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. இது வெறுமனே அரசியல்வாதிகளின் திட்டம் அல்ல. அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் சிங்கள தொல்பொருள் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பிக்குகள், இராணுவம், பொலிஸ் என்பவற்றின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டம்தான் இது. இதனை நுணுக்கமாக ஆராயும்போது மிகவும் துல்லியமான திட்டமிடலுடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது.
நேரடியாகவே சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுப்பதிலுள்ள அரசியல் சிக்கல்கள் காரணமாக கண்டறியப்பட்டுள்ள புதிய உபாயம்தான் இது. தொல்பொருள் பகுதி என இனங்காணப்படும் ஒரு பகுதியை, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, முதல்கட்டமாக புத்தர் சிலைகளை அமைத்து, அடுத்த கட்டமாக அதனை சிங்களவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த பிரதேசமாகக் காட்டி விகாரைகள், சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதுதான் இவர்களின் திட்டம்.
தொல்பொருள் திணைக்களம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. அதனால், மாகாண சபை அதில் தலையிட முடியாது. காணி அதிகாரமும் மத்திய அரசிடமே உள்ளது. இருந்தபோதிலும் கூட, இதில் அத்துமீறல்கள் பல உள்ளன. ஒரு பகுதியில் பௌத்த அடையாளங்கள் காணப்படுவதாகச் சொல்லப்பட்டால், அந்தப் பகுதியைப் பாதுகாப்பதற்கும், மேலதிக ஆய்வுகளை முன்னெடுப்பதற்குமான அதிகாரம் மட்டுமே தொல்பொருள் திணைக்களத்துக்கு உள்ளது. அதில் புதிதான புத்தர் சிலைகள், விகாரைகளை அமைப்பதற்கான அதிகாரம் தொல்பொருள் திணைக்களத்துக்கு இல்லை.
பௌத்த சின்னங்கள் காணப்படுவதாக தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்படும்போது, அது உடனடியாக சிங்கள பௌத்தர்களின் பாரம்பரிய வாழ்விடயங்களாத் திரிவுபடுத்தப்படுகின்றது. இவ்வாறு திரிவுபடுத்துவதன் மூலம், தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஏதோ ஒரு வகையில் நியாயப்படுத்த முற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தொல்பொருள் திணைக்களம் மேற்கொள்ள வேண்டிய ஆய்வில், பிக்குகளும், இராணுவ அதிகாரிகளும் சம்பந்தப்படுவது கூட, இவற்றின் பின்னணி குறித்த சந்தேகங்களைத்தான் ஏற்படுத்துகின்றது.
தொல்பொருள் திணைக்களத்தில் தகுதிவாய்ந்த தமிழ் தொல்பொருளாளர்கள் யாரும் இல்லாத நிலையில், இன,மத பேதமற்ற முறையில் செயற்ப வேண்டிய திணைக்களம் முற்றுமுழுதாக இனவாத அடிப்படையிலேயே செயற்படுவதை காண முடிகின்றது. இதனால், ஒரு பகுதியில் பௌத்த சின்னங்கள் காணப்பட்டதாகக் காணப்பட்டால், புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டு விகாரைகளும் கட்டப்பட்டு அதற்குப் பொறுப்பாக சில பிக்குகள் நியமிக்கப்படுகின்றார்கள். இவ்வாறு நியமிக்கப்படும் பிக்குகளுக்கே அந்த விகாரைகளும், அந்தப் பகுதியும் சொந்தமாக்கப்படும் வழமை உள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில், அமைச்சர் மனோ கணேசன் இந்த ஆக்கிரமிப்பின் பின்னணியை வெளிப்படுத்தியிருக்கின்றார். “தொல்பொருளாராய்ச்சி திணைக்களத்தில் உருப்படியான தமிழ் தொல்பொருள் ஆய்வாராட்சியாளர் கிடையாது. வடக்கு கிழக்கில் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் புத்தர் சிலை வைக்க வழி செய்கிறீர்கள். உங்களுக்கு தமிழ் பௌத்தர்களை பற்றி தெரியுமா? இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் இலங்கையின் வடக்கு கிழக்கிலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த தமிழர்கள் பௌத்த சமயத்தை தழுவி இருந்தார்கள். இன்று நீங்கள் வடக்கு கிழக்கில் எங்கேயாவது பௌத்த சின்னங்களை காணுவீர்கள் என்றால் அது, தமிழ் பௌத்த சின்னங்கள். அதை சிங்கள பௌத்த சின்னங்கள் என்று கூறி அத்துமீறிய குடியேற்றம் செய்கிறீர்கள். அடாத்தாக பௌத்த தேரர்களை அழைத்து சென்று புதிய விகாரைகளை கட்ட உதவுகிறீர்கள்” என தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டாவெலவிடம் மனோ கணேசன் கேள்விகளை எழுப்பியிருக்கின்றார்.
இதேபோல திருமலை மாவட்டத்தில் தென்னமரவாடி பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் சுமந்திரன் கேள்விகளை எழுப்பியிருந்தார். “திருகோணமலையில் பொலிசாரின் நேரடி ஆதரவுடனேயே திருகோணமலை தென்னமவராடியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை வைப்புக்கு தொல்பொருளாராய்ச்சி திணைக்களம் துணை செய்கிறது. இதை நாம் அனுமதிக்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் சமயத்தில் எப்படி ஒரு பௌத்த தேரர் அங்கே புத்தர் சிலையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்?” சுமந்திரன், தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம், திருகோணமலை பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த இருவரது கேள்விகளுக்கும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
போரில்லை. திட்டமிட்ட முறையிலான சிங்களக் குடியேற்றங்கள் இல்லை எனச் சொல்லிக்கொண்டு, இவ்வாறு புதிய உபாயத்துடனான நில ஆக்கிரமிப்பை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. அரசியல் தீர்வு வரும், புதிய அரசியலமைப்பு வரும், ஜெனீவாவில் அரசுக்கு நெருக்கடி என்றெல்லாம் நாம் ஒரு பக்கம் சொல்லிக்கொண்டிருக்க எமது தாயகத்தை ஆக்கிரமிப்பதற்கான புதிய – புதிய உபாயங்களுடன் அரசாங்கம் களமிறங்கிக்கொண்டிருக்கின்றது.
வடக்கு – கிழக்கில் அண்மைக்காலத்தில் மட்டும் ஆறு இடங்கள் இவ்வாறு தொல்பொருள் பகுதிகளாக இனங்காணப்பட்டு புத்தர் சிலைகள் – விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவ்வாறு 117 இடங்கள் பொத்த சின்னங்கள் காணப்படும் இடங்களாக தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டு வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஆக, ஆபத்து தலைக்கு மேல் தொங்கிக்கொண்டுதான் இருக்கின்றது.
– கொழும்பிலிருந்து ஆர்.பாரதி –
884 total views, 1 views today
1 thought on “திடீர் புத்தர் சிலைகள்: ஆக்கிரமிக்க இனங்காணப்பட்ட 117 இடங்கள்!”