பெண் படைப்பில் ஒரு பிரமாண்டம் அவளுக்குள் படைப்பின் பேரண்டம்

பெண் என்பவள் படைப்பின் பெரும் சக்தியாகவே கருதப்பட்டு வருகிறாள். காவியத் தலைவர்களும், காப்பியங்களும், புலவர்களும் பெண்ணைப் போற்றி ஏத்திப் பாடியுள்ளார். உயிர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இப் பூமியும் “பூமாதேவி” என பெண்ணின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
முன்பின் அறிமுகமற்ற ஒருவரை மணம்புரிந்து அந்த கணவனோடு துணிந்து சென்று புதிய சூழலில் இருக்கின்ற அத்தனை புதியவர்களையும் ஏற்றுக் கொண்டு தனது பணிவிடைகளை செவ்வனே செய்து அந்த குடும்பத்தையே உயர்விக்கும் பெண்ணின் மனவலிமையை என்னவென்பது?
“பெண் என்றால் பேயும் இரங்கும்” என்பார்கள். ஏனெனில் அவ்வளவு மென்மையாக நடத்தப்பட வேண்டியவள் பெண். மிகுந்த உணர்வு மிக்கவள். அவள் மனதை கரைப்பதும், உடைப்பதும், உருகச் செய்வதும் அவ்வளவு சுலபம். ஆனால் அவள் மனதை அழிப்பது என்பது மிக மிகக் கடினம்.
இயற்கை மீண்டும் மீண்டும் தன்னை புதுப்பித்து கொள்வதற்காக ஆண், பெண் என்கின்ற இரு வேறு தன்மைகளை மிகவும் அழகாகவும் அதீத நுட்பமாகவும் வடிவமைத்து இருக்கிறது. இவை உருவம் தாங்கி வருகின்ற பொழுது உடல்ரீதியான பல சிறப்புத் தன்மைகளையும் அதேவேளை உருவமில்லா நிலையில் சக்தி நிலையாக சூட்சுமமாக பலவிதமான தன்மைகளையும் வெளிப்படுத்தி ஒரு அழகான இயக்க நிலையை தொடர்ந்தும் இயக்கிக் கொண்டே இருக்கின்றது.
இந்த இயற்கையில் ஒவ்வொன்றுக்கும் என்று பற்பல பன்முகத் தன்மைகள் இருக்கின்றதைப் போன்றே இந்த பெண் என்ற தன்மை மிகவும் அற்புதமாகவும், அழகாகவும் வடிவமைக்க பட்டிருக்கின்றது.
பெண்மைக்கேயான சிறப்பியல்புகள் பெண்ணுக்கே உரியது. அவ்வாறான தன்மைகளை பெண் இயற்கையாகவே பெற்றிருப்பாள். இந்த இயற்கையின் பேரழகுடன் கலந்து ஒரு பரிணாமத்தை தருவாள். அந்த பரிணாமத்தை அவள் படைப்பதற்கு இயற்கை அவளுக்கென்றே பற்பல தனிச் சிறப்புகளை கொடுத்திருக்கின்றது.
பெண் என்பவள் படைப்பில் ஒரு சிறிதாக தெரிந்தாலும் அவள் ஒரு பிரமாண்டம். அவளுக்குள்ளும் படைப்பாற்றல் குடியிருக்கிறது. ஒரு புதிய உயிரை இப்பூமிக்கு கொண்டு வருவதற்கான தயார்ப்படுத்தல் பெண்ணின் வயிற்றில்த்தான் நிகழ்கிறது. அதற்கான பொறுமை, காத்திருப்பு, மென்மை, தாங்குசக்தி, அளப்பரிய அன்பு, கருணை, சகிப்புத்தன்மை போன்ற இனிய குணங்கள் பெண்மையின் இலக்கணங்களாகவே திகழ்கிறது. மனிதருள் உடல்வலிமை ஆணுக்கும், மனவலிமை பெண்ணுக்கும் அதிகமாக இருக்கின்றது.
இங்கு பெண் விடுதலை என்பதை பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் ஒரு பெண் விடுதலை என்பது ஒரு பெண் தன் பெண் தன்மையில்
முழுமையாக வாழுகின்ற பொழுதுதான் அது
நிகழும்.
பெண்கள் கூடத் தம்மைப்போல் ஆண்கள்
சிந்திக்கவில்லை என்று பல இடங்களில் கருத்து
மோதல்கள் கொள்வதுண்டு.
தான் வெளிப்படுத்தும் அன்புக்கு சமமாக
ஏன் தனது துணைவன்
அன்பு செலுத்துவதில்லை என்பது போன்ற
விடயங்களில் பலத்த கருத்து முரண்பாடுகளில் ஈடுபடுவதுண்டு. படைப்பில் பெண்ணின் உணர்வுகளும், ஆணின் உணர்வுகளும் சிறிதளவு வேறுபாடுடையன.
பெண்மை அன்பை வாரிவழங்குவதில் இன்பமடைகின்றது வெளிப்படுத்தாத அன்பினால் தன்னைத்தானே மனதளவில் தாக்கப்பட்டு வேதனையடையும். தாகம் கொள்ளும். எனவேதான் பெண் பிள்ளைகள் குறைந்தபட்சம் ஒரு கரடிப் பொம்மையிலாவது தமது அன்பைக் கொட்டித் தீர்த்து தம்மை திருப்திப்படுத்திக் கொள்கின்றனர்.
ஆண்களை இத்தகைய பொம்மைகளோடு காண்பது அரிது. படைப்பில் ஆண்கள் அன்பை பெற்றுக் கொள்வதில் தாகம் உடையவராக இருப்பார்கள். தனித்திருக்கும் பெண்களை விட அன்பு கிடைக்கப்பெறாமல் தனிமையிலிருக்கும் ஆண்களே மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
படைப்பில் ஒவ்வொருவருக்குள்ளும் ஆண்மையும், பெண்மையும் இருந்தாலும் ஆண்களுக்கு ஆண் தன்மை அதிகமாகவும், பெண்களுக்கு பெண் தன்மை அதிகமாகவும் காணப்படும். ஆனால் பிரபஞ்ச சக்தியின் துணை கொண்டு யோகப் பயிற்சி மூலம் தனக்குள் இருக்கும் ஆண், பெண் தன்மையை சமநிலைப்படுத்தி இந்த இயல்புகளை கடந்தவர்களும் இருக்கிறார்கள்.
–கரிணி
944 total views, 1 views today