நாட்டைக்காத்த நாய்க்கு ஓய்வின் போது மரணம் பரிசாக வழங்கப்படுகின்றது.
நாட்டைக்காத்த நாய், வீட்டைக்காத்த நாய், பதவி இழந்தபின் பரிதவித்து இறக்கின்றன! நன்றி கெட்ட மனிதா! நாய்க்கு நலமெடுப்பதிலும் குறிசுடுவதிலும் ஆரம்பித்தது உன் வன்மம். தன் வீட்டு நாயை தானே பிறர் வீட்டுக்கு அழைத்துச்சென்று அங்குவைத்து சுடச்சுட கம்பி காய்ச்சி குண்டியில் குறிவைத்தும், அதன் ஆண்மையை அறுத்தும்விட பாவம் நாய் தனது எஜமான்தான் தனக்கு இக்கொடுமையை செய்தார் எனப் புரியாமல் ஓடோடிச் சென்று தன் வீட்டில் அழுதுகொண்டு எஜமானைச் சுற்றிவரும். இதற்குப்பிறகும் அந்த நாய் நன்றியுடனே இறக்கும் வரை வாழும்.
வீடுகளில் மட்டுமல்ல நாடு காத்த நாய்களுக்கும் நடக்கும் வதைகளைக் கவனியுங்கள். இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள் கொல்லப்படுவது ஏன் தெரியுமா ?
இந்தியாவின் பொலிஸ் பிரிவிலும், இராணுவ படைகளிலும் நாய்கள் இடம் பெற்றுள்ளன. இராணுவ வீரர்கள் போல, இராணுவ நாய்களுக்கும் பணி காலம் மற்றும் ஓய்வு பெறுவதற்கான காலம் இருக்கிறது. இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு அவரவர் படிப்பு மற்றும் ஓய்வு பெறும் காலத்தில் அவர் வகித்த பதவி சார்ந்த வேறு அரசு வேலைகள் தரப்படும்.
ஆனால், இராணுவத்தில் நாட்டுக்காக பணியாற்றிய நாய்களுக்கு என்ன நிலை ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஓய்வு பெறும் இராணுவ நாய்கள் வலியற்ற முறையில் கொலை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் இராணுவ நாய்களை ஏன் கொல்கிறார்கள்?
இராணுவ நாய்கள் மட்டுமல்ல, குதிரைகளும் கூட உடற்தேர்வு குறைப்பாடு அல்லது நோய்வாய்ப்பட்டு போகும் போது, ஓய்வுபெறும் காலத்தை எட்டும் போது கொலை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. வலியின்றி பிராணிகள் கொலை செய்யப்படும் முறையில் இராணுவ நாய்கள் மற்றும் குதிரைகள் கொலை செய்யப்படு கின்றன.
ஒவ்வொரு இராணுவ நாயும் ஏதோ ஒரு சிறப்பு பிரிவில் பயிற்சி பெறுகின்றன. வெடிக்குண்டு கண்டிபிடித்தல், பாதுகாத்தல், விபத்து, காயம் பட்டவரை கண்டறிதல், காலாட்படை ரோந்து, கண்காணிப்பு என பல திறன் வேலைகளில் இராணுவ நாய்கள் பணிபுரிகின்றன.
இராணுவ நிபந்தனைகளின் படி தெரியாதவர்கள், தவறானவர்களின் கைகளில் இராணுவ நாய்கள் நோய் வாய்ப்பட்டோ, திறன் இழந்தோ, ஓய்வுபெற்ற பிறகோ சிக்கினால் அதனால் ஏதேனும் தவறுகள் ஏற்படலாம். அதனால் தேசத்திற்கு அபாயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால் தான் இராணுவ நாய்கள் சில காரணங்களால் இராணுவ பணியில் இருந்து விலகும் நிலை ஏற்படும் போது நிரந்தரமான, நிம்மதியான உறக்கமளிக்கப்பட்டு பிரியாவிடை பெறுகிறது என்று கூறுகிறார்கள். பொதுவாக இராணுவ பிரிவில் லேப்ரடர்ஸ் (Labradors) ஜெர்மன் ஷெப்பர்ட் (German shepherds), பெல்ஜியன் ஷெப்பர்ட் (Belgian shepherds) போன்ற வகைகளை சேர்ந்த நாய்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
— நன்றி போல்ட் ஸ்கை
777 total views, 2 views today