பெண் விடுதலை ஆண்கள் கொடுக்கத் தேவையில்லை

பறக்கலாமா ? என சிறகுகள் பறவையிடம் அனுமதி கேட்பதில்லை. வானம் விரிந்திருந்தால், தனது அழகிய‌ சிறகுகளை விரித்து அவை வானில் எழும்புகின்றன‌.

நகரலாமா என நதி நிலத்திடன் அனுமதி கேட்பதில்லை. தன் ஈரப் பாதங்களினால் நிலத்தின் முதுகில் பாதை உருவாக்கி அவை இசையை விதைத்தபடி நகர்ந்து கொண்டே இருக்கின்றன.

வீசப் போகிறேன் என காற்று வானிடம் அனுமதி கேட்பதில்லை, உதிரவா என இலைகள் தரையிடம் அனுமதி கேட்பதில்லை, உதிக்கவா என கதிரவன் யாருக்கும் மனுபோடுவதில்லை. அதனதன் பணிகளை அதனதன் பாணியில் அவை செய்து கொண்டே இருக்கின்றன.

இயற்கையின் விதியில் ஒவ்வொன்றும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன, எதற்கும் தயங்கிக் கொண்டே இருப்பதில்லை. அவரவர் பணிகளை அவரவர் செய்வதே இயற்கையின் விதி. அவரவர் இயல்புக்கேற்ப அவரவர் செயல்படுவதே இறைவன் வகுத்த நியதி.

இந்த விதிகளின் பாதையில் தடைக்கற்களாகவும், வேகத் தடைகளாகவும் வந்து நிற்பவை எல்லாமே மனிதனின் விதிமுறைகளே. இயற்கை வகுத்த சட்டங்கள் பொதுமையைப் போதித்தது, அதை சுயநலச் சுருக்குக்குள் இறுக்க நினைத்தான் மனிதன். இறைவன் கொடுத்த வாழ்க்கை சமத்துவத்தைப் போதித்தது மனிதன் சமத்துவம் உடைக்க புது விதிகளை வகுத்தான்.

மனித விதிகளே பாகுபாடுகளை உருவாக்கியது. மனித விதிகளே வேறுபாடுகளை உருவாக்கியது. மனித விதிகளே உலக சமநிலைக்கு உலைவைத்தது.

கர்வத்தை மனிதன் தலையில் அணியத் துவங்கியபோது, சமத்துவச் சங்கிலி உடைபடத் துவங்கியது. சமமாய் இருப்பது சரியல்ல என மனிதன் நினைத்தபோது தன்னை உயர்வாய்க் காட்ட விரும்பினான். சிறிய கோட்டைப் பெரிதாய்க் காட்ட, அதனருகில் இருப்பதை விடச் சிறிய கோடொன்றை இழுத்தால்போதும். அதையே மனிதன் செய்தான்.

தன்னை விட பிறரை தாழ்வானவர் என்றான். தனக்கு மட்டுமே சொர்க்கத்தைத் திறக்கும் சாவி உண்டு என்றான். நான் திறந்தால் மட்டுமே வானத்தின் கதவுகள் திறக்கும் என்றான். பொய்களின் மூட்டைகளை அவன் இறைவனின் தலையில் சுமத்தினான். கடைசியில் இறைவனையும் தரையில் இருத்தினான்.

இருப்பதை ஏற்றுக் கொள்ளாத மனிதன், கொடுப்பதைப் பெற்றுக் கொள் என சமூகத்தை நிர்ப்பந்தித்தான். தனது பயணத்தின் பாகையை சற்றே திருப்பிய மனுக்குலக் கப்பல் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தபின் இலக்கை விட்டு எங்கேயோ சென்று விட்டது.

இறைவன் அன்பினால் உலகைப் படைக்க நினைத்தார். மனிதன் தனக்கென உலகைப் பிரிக்க நினைத்தான். இறைவன், இயற்கையால் உலகை அலங்கரிக்க நினைத்தார். மனிதன் இயற்கையின் விதிகளை மாற்றியமைத்தான்.

தன்னிடம் அனுமதி கேட்கவேண்டுமென மனிதன் சட்டங்களை உருவாக்கியபோது மனுக்குலம் மாண்பிழந்தது.

இறைவன் ஆணையும் பெண்ணையும் சமமாய்ப் படைத்தார். இருவரையும் இணையாய்ப் படைத்தார். துணையாய்ப் படைத்தார். மனிதனோ பெண்ணை தன்னை விடக் கீழானவளாய் வைத்துக் கொண்டான்.

பெண்ணுக்கு வலிமையில்லை என தன்னம்பிக்கையை உடைத்தான். ‘முறத்தால் கூட புலியை விரட்டிய’ வீர வரலாறுகளைப் புரட்ட மறுத்தான்.

பெண்ணுக்கு தலைமைத்துவமில்லை என பிரகடனம் செய்தான். பெண்களே கடவுளர்களாய் இருக்கும் கதைகளை நினைக்க மறுத்தான்.

பெண்ணுக்கு பாதுகாப்பில்லை என்றான். பாதுகாப்பற்ற சூழலை அவனே உருவாக்கினான்.

இப்படி பெண்மைக்கு எதிரான மதில்சுவரை படிப்படியாகக் கட்டியெழுப்பிழுப்பி பெண்மையை ஆண்களின் காவலில் வைத்தான். வெளியேற இயலாத பூட்டுகளால் இணைத்தான்.

காலம் தனது கால்களினால் தலைமுறைகளைத் தாண்டித் தாண்டி ஓடியது. பெண்கள் ஆண்களை விட தாழ்ந்தவர்கள் எனும் சிந்தனை எங்கும் எழுதப்பட்டது. அது படிப்படியாய், எழுதப்பட்ட விதியானது. வலிந்து எழுதப்பட்ட புனைவுகள் பெண்களின் புனிதத்தை ஆண்களின் அதிகாரத்துக்குக் கீழே அமைத்தது.

பெண்களும் நம்பினார்கள். கூண்டுக்குள் அடைக்கப்பட்ட சிங்கம் கர்ஜிக்க மறந்ததைப் போல ஆனார்கள். கூண்டுகளின் அனுமதியில்லாமல் கர்ஜிக்கக் கூடாது என கற்பித்துக் கொண்டார்கள். பிடரி சிலிர்க்க வேண்டுமென்றால் கூட வேறு பிறவி எடுக்கவேண்டும் என நினைத்தார்கள்.

வலைகளுக்குள் இருக்கிறது என்பதற்காக பறவைகள் புழுக்களாவதில்லை. அணைகளுக்குள் இருக்கிறது என்பதற்காக தண்ணீர் உறைந்து போவதில்லை.

பெண்மை சிறகு விரிக்கும் காலம் இது. டிஜிடல் யுகத்தின் நவீனக் கதவுகளுக்கு பழமையின் துருக்கள் பொருட்டல்ல‌. உலகின் எல்லைகளெல்லாம் உள்ளங்கைக்குள் உறைந்து கிடக்கும் நிலையில் தீண்டாமையின் திமிர்த்தனங்கள் தேவையில்லை.

பெண்மையின் வாழ்க்கை அனுமதிக் கதவுகளைத் தட்டுவதற்கானதல்ல, உரிமைக் கதவுகளை திறப்பதற்கானது. வாய்ப்புகளின் ஏணிகளைக் கண்டறிந்து வலிமையாய்ப் பற்றிக் கொள்வதில் அமைந்திருக்கிறது பெண்மையின் வெற்றி.

பெண்களுக்கான வாழ்க்கை பெண்களிடமே இருக்கிறது. பெண்களின் வாழ்க்கைக்கான திறவுகோல்களும் பெண்களிடமே இருக்கின்றன‌. எதிர்ப்புகளின் குரலொலியில் அடங்கிவிடாத மனம் மட்டுமே அவர்களுக்குத் தேவை. மறுப்புகளின் பேரொலிலில் மிரண்டு விடாத குணம் மட்டுமே தேவை.

அந்த வலிமை இருந்தால் போதும். யாரிடமும் விடுதலை கேட்க, பெண்மை அடிமையாய் இல்லை. யாரிடமும் அனுமதி கேட்க பெண்மை யாரின் தயவிலும் இல்லை. பெண்களின் உரிமை என்பது புதிதாய்க் கொடுப்பதல்ல. பிடுங்கியதை திருப்பியெடுப்பது.

ஆண்களின் எதிர்ப்பு அச்சத்தின் பிரதிபலிப்புகள். பெண்களின் வளர்ச்சியும், அங்கீகாரமும் தங்களை விட அதிகமாய் இருந்துவிடுமோ எனும் அச்சத்தின் பிள்ளை. தன்னைத் தாண்டிச் சென்று விடுவார்களோ எனும் பதட்டத்தின் படிக்கட்டுகளில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். எனவே தான் தங்களுக்குப் பின்னால் பெண்கள் தங்கிவிட வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள்.

இது புதுமைக் காலம்.

இங்கே உடல் வலிமையை விட மன வலிமையே வெற்றிகளைக் குவிக்கும். கடின இதயங்களை விட மென்மையான இதயங்களே வலிமையாய் உருவெடுக்கும். ஆயுதங்களை விட ஆளூமையே வெற்றிகளாய் மாறும். இந்த சூழல் பெண்களின் உலகத்துக்கான கதவுகளை அகலத் திறந்திருக்கிறது.

இனிமேல் யாருடைய அனுமதிகளுக்கும் காத்திருக்கத் தேவையில்லை. இனிமேல் யாருடைய அங்கீகாரங்களுக்கும் மனு கொடுக்கத் தேவையில்லை. பெண் விடுதலை என்பது பெறுவதல்ல, ஏற்கனவே இருப்பது. பெண் விடுதலை என்பது ஆண்கள் கொடுப்பதல்ல, பெண்கள் எடுப்பது.

பெண் விடுதலை என்பது தனது சிறகுகளை நம்பும் பறவையின் பயணம். பெண் விடுதலை என்பது தன் துடுப்புகளை நம்பும் மீன்கள் பயணம். இல்லாததைப் பெறுதலல்ல இது, இருப்பதை இயக்குதலே.

பெண்விடுதலையின் சாசனம் எழுதப்பட வேண்டியது சட்டத்தின் பக்கங்களிலல்ல, பெண்மையின் இதயங்களில். காரணம் பெண்விடுதலை, ஆண்கள் கொடுக்கத் தேவையில்லை.

சேவியர்

.

672 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *