குழந்தையும் தெய்வமும்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. தெய்வீக குணம் படைத்த குழந்தைகள் தெய்வீக கலையாம் பரதம் தன்னில் பிஞ்சுப்பாதங்கள் தடம் பதிக்கும் வேளை பரதம் பரவசம் அடையும்

குழந்தைகள் செய்யும் அபிநயம் என்றுமே அழகுதான். இந்த அழகை நெறிப்படுத்தி, அதேவேளை அவர்களை அவர்களாகவே நடனமாட வைத்தது சிறப்பாகும். யேர்மனியில் கடந்த பொங்கல் விழாக்களிலே இந்தச் சுட்டிகளின் நடனங்கள் பெரும் அட்டகாசமாக இருந்தது. தாயகத்தில் நடனப் பாடசாலைகளிலும்சரி ஊரிலும் சரி குழந்தைகளுக்கு பஞ்சமில்லை. அங்கு விழாக்களில் 200 க்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரே மேடையில் நடனம் புரியலாம். ஒரு முறை கண்ணன் பாட்டிற்கு 200 குழந்தைகளில் ஒரு குழந்தையை தெரிவு செய்ய, மற்ற 199 குழந்தைகளும் மனம் நொந்து நிற்க, இதனை அவதானித்த நடன ஆசிரியை 200 குழந்தைகளையுமே நீங்கள் எல்லோருமே கண்ணன்தான் என்று எல்லோருக்கும் கண்ணன் வேடமிட்டு மேடையேற்றியதையும் அவர்கள் அடைந்த மகிழ்வையும் நேரில் தாய்மண்ணில் பார்த்திருக்கின்றேன்.

ஆனால் புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் நம் குடும்பங்களில் குழந்தைகள் எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஓன்று இரண்டு அதற்குமேல் எண்ணத்தோன்றாது. இப்படியான நிலையில் 20 க்கு மேற்பட்ட குழந்தைகளை மேடையேற்றுவது இங்கு அந்த 200 குழந்தைகளுக்கு சமம்.
பிலபெல்ட் நகரில் நடந்த பொங்கல் விழாவில் நடன ஆசிரியை கலாஜோதி சாமினா போல் அவர்கள் குழந்தைகளை வைத்து அழகான நடனத்தை தந்திருந்தார். தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்பது கலை. இதனை சிறப்பாகச் செய்தது அந்த நடனம். மாணவர்களோடு ஆசிரியையும் ஆடிப்பாட என்தவம் செய்தனையோ யசோதா அவர்களைக் கேட்கத்தோன்றுகின்றது.
இந்த நடனத்தை கோபியருடனும் கண்ணனுடனும் ஆட பயிற்சிகொடுத்த தரணம் முதல் Nமையில் அரங்கேறும் கணம் வரை மனம் கோகுலத்தில் சஞ்சரித்திருக்கும் என்பது திண்ணம். ஆசிரியைக்கும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பாராட்டுக்கள்.

-மாதவி

686 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *