பெரிய புராணமும் திருமந்திரமும் (பாகம் 2)
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) இளையான் குடிமாறநாயனார் (4) – மகேசுர பூசை.
“படமாடக் கோயில் பகவற்கு ஒன்றுஈயில்
நடமாடக்கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.” பாடல் எண் 1857
படம் போன்ற அமைப்பை உடைய கோபுரங்களையுடைய கோயிலின் உள்ளே இருக்கும் இறைவனுக்குப் படைத்தால் அது இறைவனுக்குத்தான் சேரும் அடியார்களுக்குச் சேராது. ஆனால் நடமாடும் கோயிலாக விளங்கும் சீவன்களுக்குத் தருகின்ற ஒன்று சீவன் உள்ளே சிவன் இருக்கும் காரணத் தால் அது சிவனுக்கும் போய்ச் சேரும்
இளையான் குடிமாறநாயனார் (சிவ அடியார்களுக்கு அமுதூட்டி) வரலாற்றின் மூலம் சீலமார் பூசை என சேக்கிழார் சுவாமிகளால் சிறப்பிக்கப்பட்ட மகேசுர பூசை சிவலோகம் சென்று இன்புற்றிருப்பதற்கான வழி என உணர்த்தப்பட்டுள்ளது.
விறன்மிண்ட நாயனார் (6) சிவமே சிவனடியாரும்
“ஏறுடையாய் இறைவா எம்பிரான் என்று
நீறிடுவார் அடியார் நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை அண்ணல் இவரென்று
வேறு அணிவார்க்கு வினைஇல்லை தானே” பாடல் எண் 1862
“விடை ஏறும் எங்கள் பெருமானே! இறைவா! எம் உயிர்த் தலைவா!” என்று சிவப் பரம்பொருளைப் போற்றி வணங்கும் திருநீறு பூசும் அடியவர்கள்; பூமியில் வாழுகின்ற தேவராவார்கள். கங்கை ஆற்றைத் தலையிலே கொண்டிருக்கின்ற, சிவந்த சடைமுடி உடைய சிவப் பரம்பொருள் இவரே என்று கருதி, அச்சிவனடியார்களைச் சிவனாகவே எண்ணிச் சிறப்பாகத் தொழுபவர்களுக்கு, வினைத் துன்பம் இல்லாது போகும்.
விறன்மிண்ட நாயனார் (சிவனடியார்களை சிவன் எண்றே வணங்குபவர்) வரலாற்றின் மூலம் சிவனடியார்களும் சிவனே என எடுத்துக் காட்டப்பட்டது.
அமர்நீதி நாயனார் (7) அறம் செய்
“தன்னை அறியாது தான்நல்லன் என்னாதுஇங்(கு)
இன்மை அறியா(து) இளையார்என்று ஓராது
வன்மையில் வந்திடுங் கூற்றம் வருமுன்னம்
தன்மையும் நல்ல தவஞ்செய்யும் நீரே” பாடல் எண் 255
உயிரை எடுக்க வரும் எமன் எம்மை எப்படிப்பட்டவர் என எண்ணிப் பார்க்கமாட்டான். எம்மை பாவம், நல்லவன், ஏழை, சிறுபிள்ளை என விட்டு விடவும்மாட்டான். எமன் வலிமையுடையவன். எனவே அவன் உயிரைக் கவர்ந்து செல்வதற்கு முன்பாக நல்லதான தானம், தவம் என்பனவற்றைச் செய்யுங்கள் மனிதர்களே. அமர்நீதி நாயனார் (உணவு, உடை கொடுத்து) வரலாற்றின் மூலம் அறம் செய்வதன் மூலம் சிவலோக வாழ்வையும் பெறலாம் என எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
கண்ணப்பநாயனார் (10) அன்பே சிவம்
“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ(து) ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவ(து) ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.”
பாடல் எண் 270
அன்பு வேறு, இறைவன் வேறு இரண்டும் ஒன்றல்ல தனித்தனியானவை என்று சொல்பவர்கள் அறிவில்லாத மூடர்கள். அன்பே இறைவன் என்பதைப் பலரும் அறியாது இருக்கிறார்கள். அன்புதான் இறைவன் என்பதை எல்லாரும் அறிந்துவிட்டால் பிறகு அவர்களே அன்புருவான இறைவனாய் ஆனந்த வெள்ளத்தில் அமர்ந்திருப்பார்கள் (வாழ்ந்திருப்பார்கள்).
கண்ணப்ப நாயனார் (காளத்தி நாதர் மேல் அன்பு வைத்து) வரலாற்றின் மூலம் இறைவன் மேல் மெய்யன்பு தலைப்படுமாயின் முத்தி கிடைக்கும் என்பதை எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசு நாயனார் (21) சரியை வழிபாடு
“நேர்ந்திடு மூல சரியை நெறி இதென்று
ஆய்ந்திடும் காலங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத்து
ஓர்ந்திடும் சுத்த சைவத்து உயிரதே”
பாடல் எண் 1443
முத்தியாகிய பேரின்ப நிலை அடைவதற்கான மூல காரணமாகவும், முதன்மையான வழியாகவும் இருக்கின்ற சரியை நெறி இன்னதென்று ஆய்ந்தறிகின்ற, நுணுகி உணர்ந்திடும் சந்துரு ஆகிய என் அன்புச் சீடர்களே! கேட்டுக் கொள்ளுங்கள். பூவுலகில் உண்மை உணர்ந்திடும் சுத்த சைவர்ருக்கு உயிர் போன்றதே இந்தச் சரியை நெறிதான்.
திருநாவுக்கரசு நாயனார் (உளவாரத் தொண்டு) வரலாற்றின் மூலம் இறைவனை அடைவதற்கு இலகுவாகச் செய்யக்கூடிய சரியை வழிபாட்டின் மகிமை விளக்கப்பட்டுள்ளது.
பூசலார் நாயனார் (65) – உள்ளம் பெரும் கோயில்
“காயக் குழப்பனைக் காய நன்னாடனைக்
காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்துஉள்ளே எங்கும் தேடித் திரிபவர்
காயத்துள் நின்ற கருத்து அறியாரே.”
பாடல் எண் 2550
சீவர்கள் உடம்போடு பொருந்தி அவர்கள் உயிரில் நுண்ணுயிராய்க் கலந்து இருப்பவனை, ஆருயிர்களின் உடம்பையே தான் அருளாட்சி செய்யும் திருநாடாகக் கொண்டு திகழ்பவனை, உடம்புக்குள்ளே ஒளிவடிவாய்த் திகழ்பவனை, பாவம் இந்தப் பேதை மக்கள் எங்கெங்கோ தேடித் திரிகிறார்களே! இவர்கள் அப்பெருமான் இவர்கள் உடம்புக்குள்ளேயே இருக்கின்ற உண்மை அறியாதவர்கள்.
பூசலார் நாயனார் வரலாற்றின் மூலம் ( மனத்திலேயே இறைவனுக்குக் கோயில் கட்டியவர்) இறைவன் எம்முடன் எமது உள்ளத்தில் இருக்கின்றான்
என நம்பிக்கையுடன் செயல்ப்பட்டால் இறைவன் எம்முடனேயே இருந்து எம்மை வழிநடத்துவான் என உணர்த்தப்பட்டுள்ளது.
870 total views, 1 views today