இறந்தவர்களை உயிர்ப்பிக்கலாமா?
மனிதனின் வாழ்க்கையில் நிச்சயமாக நடைபெற்றே தீரும் என்று சொல்லக்கூடியது எது? அது இறப்பு மட்டும் தான். மனிதர்களாகப் பிறந்த நாங்கள், இறப்பை நோக்கிப் போகின்றோம். ஏதாவது ஒரு விபத்தால் இறப்பது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் இன்று வரை ஒரு வித சிகிச்சை முறைகளுமே கிடையாத நோய்களால் இறப்பது என்பது, மிகவும் வேதனைக்குரிய விஷயம் ஆகும், அல்லவா? ஆனால், அப்படி ஒரு நோயால் இறந்தபின், உங்கள் உடலை வைத்திருந்து, பின் எதிர்காலத்தில் அந்த நோய்க்குச் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த பின் உங்களைக் குணப்படுத்தி உயிர்ப்பித்தால் எப்படி இருக்கும்? அட அது எப்படி முடியும்? முடியவே முடியாது, என்று நினைக்கின்றீர்களா?
ஒரு மனிதன் ஒரு நோயின் காரணத்தால் இறந்த பின், உடனடியாக அவனது உடலை உறைய வைத்து அதாவது Freeze பண்ணி, மருத்துவ அறிவியல் பன்மடங்கு வளர்ந்த பின்னர், அதாவது மருத்துவம் இறந்தவரின் உடல் குறைபாடுகள் மற்றும் நோய்களைக் குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடித்த பின், அவரை மீண்டும் இறப்பிலிருந்து எழுப்ப முடியும் என்றால் எப்படி இருக்கும்? உங்களுக்கு ஒன்று தெரியுமா? அது ஏற்கனவே செய்யப் பட்டு வருகின்றது.
இதை கிரையோனிக்ஸ் (Cryonics) என்று அழைப்பார்கள். நவீன மருத்துவ முறைகளால் தீர்க்க இயலாத நோய்களால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மற்றும் மிருகங்களை உறைந்த நிலையில், அதாவது குறைந்த வெப்பத்தில் பதப்படுத்தி எதிர் காலத்தில் மீள் இயங்கச் செய்யலாம் என்ற நம்பிக்கை முறையைக் குறிக்கும். அதற்கு இறந்தவர்களை நீர்ம நைட்ரஜனின் உதவியுடன் -196 பாகை செல்சியசுக்கு உறைய வைப்பார்கள்.
ஆனால் என்ன தான் தற்போது இந்த உடல்களை கிரையோனிக்ஸ் முறை ஊடாக உறைய வைத்திருந்தாலும், அவற்றை மறுபடியும் வெப்பமாக்குவதில் பல்வேறான சிக்கல்கள் உள்ளன. உதாரணத்திற்கு பிராணவாயு, அதாவது oxygen இல்லாத காரணத்தால், அல்லது உறைந்த நிலையில் இருக்கும் உடலிலும், எலும்புகளிலும் ஏற்படும் முறிவுகள் மற்றும் வெடிப்புகளால் உருவாகும் பிரச்சனைகளுக்கு இன்று வரை விஞ்ஞானிகளால் தீர்வுகள் காண முடியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இதற்கும் ஒரு வழி இருக்கும் என்று நம்புகிறார்கள்.
நண்பர்களே, இவ்வாறான ஆராய்ச்சியில் உங்களுக்கும் ஆர்வம் இருக்கிறதா?
அப்படி என்றால் bioengineering molecular nanotechnology அல்லது nanomedicine போன்ற துறைகளில் படித்து உங்கள் ஆராய்ச்சிகளைச் செய்யுங்கள்!
அது சரி, இன்று வரை எத்தனைப் பேர் கிரையோனிக்ஸ் முறையில் உறைநிலைப் படுத்தப்பட்டுளனர் என்று தெரியுமா? 270 மனிதர்களுக்கும் மேல்! இது ஆச்சரியமாக இல்லையா? உங்கள் இறப்புக்குப் பின் உங்களை உறைநிலையில் பதப்படுத்த நீங்களும் அனுமதி கொடுப்பீர்களா?
னுச.நிரோஷனின
757 total views, 1 views today