100 ஆண்டுகள் கடந்த அனைத்துலக பெண்கள் தினம்
உலகெங்கும் வாழும் பெண்களுக்கான உரிமை தினமாக பங்குனி 8ம் திகதி எனப் பிரகடனப்படுத்தி 100 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. ஆண்டுகள் பல கடந்தாலும் பல நாடுகளில் வருடக்கணக்காகப் பெண்களுக்கான வாழ்வுரிமை இன்றும் மறுக்கப்பட்டிருப்பது கசப்பான உண்மையாகும்.
சர்வதேச அளவில் பெண்கள் தினம் எப்படி உருவானது என்பதை இத் தினத்தில் தெரிந்து கொள்வது முக்கியம். இது தொடர்பான வரலாற்றுப் பதிவுகள் இங்கு தரப்படுகின்றன. 1908-இல் நியூயோர்க்கில் பணிச் சூழலுக்கு எதிராக பெண் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்திய நாளை முன்னிறுத்தி அமெரிக்க சோஷியலிசக் கட்சி, முதன் முதலில் பெண்கள் தினத்தைக் கொண்டாடியது. ஆனால் முதல் தேசிய பெண்கள் தினம் அமெரிக்காவில் பெப்ரவரி 28, 1909-இல் கொண்டாடப்பட்டது.
1910இ-ல் பெண்கள் உரிமைக்காகவும், பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று வலியுறுத்தியும் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் கலந்து கொண்டனர். பின்லாந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முதல் 3 பெண்களும் இதில் அடக்கம். இதில் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. எனினும், திகதி எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.இதன் விளைவாக உலக மகளிர் தினம் ஐரோப்பாவில் 1911, மார்ச் 19 அன்று முதன்முதலாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது.
பல நாடுகளில் பெண்களை அடக்கி ஒடுக்கி உரிமைகளைக் பறித்து வேறு உயிரினங்களைப் போல பெண்களை அடிமைகளாக வைத்திருக்கவே இன்றும் பல நாடுகள் விரும்பிச் செயற்படுகின்றன. அரபு நாடுகள் சிலவற்றில் இன்றும் பெண்கள் கார் போன்ற வாகனங்கள் ஓட்டக்கூடாது, விரும்பிய தொழில் செய்யக்கூடாது, விரும்பியவரைத் திருமணம் செய்யக்கூடாது ஏன் கல்வியே கற்கக்கூடாது என்றும் வாக்குரிமை மறுக்கப்பட்டும் பல கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி பெண்களை இரண்டாம் தரப் பிரசைகள்போல நடாத்தப்படுவதும் வழிவந்த செயலாககவே இன்றும் இருந்து வருகின்றது.
பெண்களுக்கெதிரான உரிமை மறுப்பில் நாட்டுக்குநாடு வெவ்வேறு வடிவங்களில் சம உரிமை மறுக்கப்படும் நிலை இருந்து வருகின்றது. எத்தனையோ ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நீண்டகாலமாக நடாத்தியும் இன்றும் உலகில் பல நாடுகளில் ஆண்-பெண் சமத்துவம், சம உரிமை நிலவவில்லை என்பது முக்கிய விடையமாகும். இப்படியாகப் பெண்களின் உரிமை மறுப்பில் அதை எதிர்த்துப் போராடிப் பல நாடுகளில் பெண்கள் வெற்றியும் எழுச்சியும் பெற்றிருப்பது பாராட்டுக்குரிய விடையமாகும்.
பல நாடுகளில் இப்பிரச்சனை இருந்துவந்தாலும் யேர்மனி பற்றிய சிறு பார்வையைச் செலுத்துவோம்…
-1918ம் ஆண்டு 1வது உலகப்போர் முடிவடைய 1919ம் ஆண்டில் சுமார் 17 மில்லியன் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
-1919-2-19ம் தேதிதான் முதன் முதலாகப் பெண்மணி SPD கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராகத் தெரிவானார். அவரின் பெயர் (Marie Juchacz)) -1931ம் ஆண்டுதான் பெண்களுக்கான தேர்தல் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
-1933 1945ம் ஆண்டுவரை பெண்கள் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் அரச திணைக்களங்களில் வேலை செய்யக்கூடாது என்ற சட்டம் அமுலில் இருந்தது -1957 ஆண்டளவில் 3.3 வீதமான பெண்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்கள்.
-1972 ஆண்டளவில் பெண்களின் வளர்ச்சியும் அரசியல் ஈடுபாடுகளும் அதிகளவு காணப்பட்டது. -1972 ஆண்டிற்குப்பின்பு ஆண் – பெண் வேறுபாடுகள் வெகுவாகக் குறைந்து காணப்பட்டன.
-1980 ஆண்டளவில் புதிதாகக் தோற்றம் பெற்ற Grunen) பசுமைக்கட்சியில் பெருந்தொகையான பெண்கள் அங்கம் வகித்தனர். -1990 ஆண்டில் பெண்களின் முன்னேற்றம் பெரிதாகக் காணப்பட்டது. அரசியல் மற்றும் அரச துறைகளில் ஆண்களுக்குச் சரிசமமான தொகையினர் காணப்பட்டனர்.
-2005 பெண்களின் அரசியல் வளர்ச்சியால் முதன் முதல் பெண் ஒருவர் Angela Merkel நாட்டின் அதி உயர் பதவியான கான்சிலராகத் தெரிவு செய்யப்பட்டார். -2013 மறுமலர்ச்சியால் பல பெண்கள் அரசியலிலும் உயர் பதவிகளிலும் ஆண்களுக்குச் சரிநிகராகப் பதவிகளில் அமர்ந்தனர்.
-2016 ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் 18 பெரு நகரங்கள் மற்றும் 56 சிறு நகரங்களில் பெண்கள் தெரிவுசெய்யப்பட்டு விகிதாசாரம் வளர்ச்சி கண்டது.
-2017 நடைபெற்ற தேர்தல்களில் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் வெற்றிபெற்றுப் பல பதவிகளில் அமர்ந்தனர்.
-36.7மூ- 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரதான ஆளும் கட்சியான CDU கட்சிக்கு 7.1 வீதம்பேர்தான் வாக்களித்தனர். ஆனால் 2013ம் ஆண்டுத் தேர்தலில் 36.7 வீதமான பெண்கள் இக்கட்சிக்கு வாக்களித்து விகிதாசாரத்தைக் கூட்டக்கொண்டனர். -Angela Merkel யேர்மனிய வரலாற்றின் முதல் பெண் கான்சிலர் 4 தடவைகள் இவர்தான் கான்சிலர். யேர்மனி மட்டுமல்ல உலகிலேயே அதகாரம் மிக்க பெண்மணிகளில் முதல்வராகத் திகழ்பவரும் இவர்தான்.
-3 பெண்கள்….இன்று யேர்மனியின் அரசியல் வரலாற்றில் ஆட்சிசெய்பவர் பெண் (Angela Merkel) பிரதான பெரிய கட்சியான CDU கட்சியின் தலைவர் பெண் (Kramp-Karrenbauer) பிரதான ஆளும் கட்சியும் பழமையான கட்சியான SPD கட்சியின் தலைவரும் ஒரு பெண்தான்.(Andrea Nahles) இப்படியே நாட்டை வழி நடத்துபவர்கள் பெண்களாகவே இருப்பது சிறப்பான அம்சமாகும். -யேர்மனிய இன்றைய அரசியலில் பெண்களின் பங்களிப்பு..
ஆண்கள் – பெண்கள்
-கிராமிய பிரதேச சபைகளில் 75வீதம் 25வீதம்
-மாகாண பாராளுமன்றங்களில் 70 “ 30 “
-மத்திய பாராளுமன்றத்தில் 69 “ 31 “
-பிரதான அரசியல் கட்சிகளில் அங்கங்வகிக்கும் பெண்களின் வீதத்தைப் பார்ப்போம்..
Grüne -40% Linke -36% SPD -33% CDU -26% FDP -22% CSU -21% A&D -17% பெண்கள் தினம் உலகம் முழுவதும் வருடாவருடம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும் இலங்கை போன்ற பல நாடுகளில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருவது இயல்பாகவே நடந்து வருகின்றது. நோய் நொடிகள் ஒருபுறம் வாட்டி உயிர் எடுக்க பெண்கள் மீதான சீதனம், சாதியம், சமயம், பாலியல் கொடுமைகள், கொலைகள், வன்முறைகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. ஏன் சின்னஞ்சிறு பாலகர்கள்கூட இன்று வன் கொடுமைகளுக்கு உட்படுத்திக் கொலை செய்தலும் காணாமல் ஆக்கப்படுதலும் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகின்றன. சட்டத்தையும் ஒழுங்கையும் தண்டனைகளையும் உறுதிப்படுத்த வேண்டிய அரசுகளும் பாதுகாப்புத் துறையினரும் சில நாடுகளில் குற்றவாளிகளுக்குத் துணை போவதை நாம் கவலையுடன் நோக்க வேண்டும்.
இன்று பெருவாரியான பெண்களுக்கான வன்முறைகள் குடும்ப உறவுகளாலும் ஏன் பெண்களாலுமே நடந்தேறுகின்றன என்று ஐக்கியநாடுகள் சபையின் பெண்களுக்கான அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
ஆகவே பெண்களை இந்நாளில் போற்றுவோம். அவர்களின் திறமைகளுக்கு மதிப்பளிப்போம். எங்கள் சகோதரி, அம்மா, ஏன் மனைவியாய் மகளாய் எண்ணி, இந்த நாள் சிறக்க வாழ்துவோம் போற்றுவோம்!
— வ..சிவராஜா
692 total views, 1 views today