மீண்டும் கால அவகாசம்; கொழும்பின் இராஜதந்திர வெற்றி?
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக் கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் 40ஃ1 என்ற புதிய தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இலங்கையும் இதற்கு இணை அனுசரணையை வழங்கியிருக்கின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும்கூட, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இது நிறைவேற்றப்போவதில்லை.
பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான 40ஃ1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன. இந்த தீர்மானத்துக்கு இலங்கை கடந்த வருடங்களைப்போலவே இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில், தீர்மானம் மீது பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
இது குறித்த விவாதத்தில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். இறுதியாக இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார். அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஏற்கனவே கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பல விடயங்கள் தொடர்பிலும் வெளிப்படையாகப் பேசியிருக்கின்றார். குறிப்பாக, 2015 இலும் பின்னர் 2017 இலும் ஜெனிவாவில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டபோது, காணப்பட்ட தொனியை இலங்கை இப்போது மாற்றிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. முன்னைய தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டபோது, அதனை நிறைவேற்றுவதாக வாக்குறுதிகளைக் கொடுத்த இலங்கை இப்போது, தமது உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படையாக சர்வதேச அரங்கில் சொல்லத் துணிந்திருக்கின்றது.
அதாவது, படைத் தளபதிகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட முடியாது என்பதையும், சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை என்பதையும் இலங்கை அரசாங்கம் இப்போது தெளிவாகச் சொல்லிவிட்டது. திலக் மாரப்பனையின் பதிலுரையில் இந்த விடயங்கள் வெளிப்படையாகத் தெரிந்தது. இதற்குப் பின்னரும் எந்த நம்பிக்கையுடன் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்வி பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் எழுகின்றது.
“இது கால அவகாசம் இல்லை: இலங்கை மீதான சர்வதேசத்தின் கண்காணிப்பே நீடிக்கப்படுகின்றது” என்ற சுமந்திரனின் சட்டத்தரணி விவாதத்தை ஏற்றுக்கொள்வதற்கும் நம்புவதற்கும் தமிழ் மக்கள் தயாராக இல்லை.
இரண்டு விடயங்களில் இலங்கை அரசாங்கம் தெளிவாக இருக்கின்றது. ஒன்று – படையினரை விசாரணைக்கு உள்ளாக்குவதில்லை. இரண்டு – சர்வதேச விசாரணைக்கு இடமளிப்பதில்லை. 2015 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு தடவைகள் கால அவகாசம் வழங்கப்பட்டும் கூட, எதுவும் நடைபெறாமைக்கு இலங்கை அரசாங்கத்தின் இந்த உறுதியான நிலைப்பாடுதான் காரணம். இப்போதும், இந்த நிலைப்பாட்டில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.
இப்போது வழங்கப்பட்டிருப்பது “கால அவகாசமா?” அல்லது, “சர்வதேச கண்காணிப்பு நீடிப்பா?” என்ற விவாதம் அரசியல் அரங்கில் உருவாகியிருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையால் பரிந்துரைக்கப்பட்ட கலப்பு நீதிப்பொறிமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. அதற்கான அழுத்தத்தைக் கொடுத்து ஏற்றுக்கொள்ளச் செய்ய சர்வதேச சமூகத்தினால் முடியாது. ஆக, விசாரணைகள் எதுவும் நடைபெறப்போவதில்லை. அதனால், வழங்கப்பட்டிருப்பது கால அவகாசம்தான்!
அமைச்சர் மாரப்பனையும் இதனைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அதனால், இப்போது சுமந்திரன் சொல்வது போல சர்வதேச மேற்பார்வை நீடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், இந்தக் காலப்பகுதிக்குள் எதுவும் இடம்பெறும் என எதிர்பார்க்க முடியாது.
ஜெனிவாவில் சந்தித்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதனைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்கள். குறிப்பாக ஜெனிவா சென்றிருந்த சுமந்திரனிடம் இது குறித்து தமிழ்ப் பிரநிதிகள் கடுமையாகத் தெரிவித்திருக்கின்றார்கள். இந்தப் பின்னணியிலேயே வெள்னிக்கிழமை கொழும்பு திரும்பி பாராளுமன்றத்தில் உரையாற்றிய சுமந்திரனின் தொனி மாற்றமடைந்திருந்தது.
“ஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் மூன்றாவது முறையாக இணை அனுசரணை வழங்கியுள்ளது. அதன்படி, ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அதனை செய்ய அரசாங்கம் தவறும் பட்சத்தில் இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த அல்லது முழுமையான சர்வதேச நீதிப்பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அரசாங்கத்திற்கு அறிவித்துக் கொள்ள விரும்புகிறோம்” என சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சுமந்திரன் காய்நகர்த்துகின்றாரா அல்லது யதார்த்தமாகச் செயற்பட முற்படுகின்றாரா என்பது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், இப்போது வழங்கப்பட்டிருக்கும் கால அவகாசத்தை, தமிழர்களின் கோரிக்கைகளைப் பலவீனப்படுத்த அரசு முற்பட்டால், குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்படுவதைத் தடுத்துவிட முடியாது என்பதே உண்மை.
இப்போது கொழும்பின் இராஜதந்திரம் பெற்றிருக்கும் வெற்றி ஒரு தற்காலிக வெற்றியாகவே இருக்கும்!
— கொழும்பிலிருந்து ஆர்.பாரதி –
719 total views, 1 views today
1 thought on “மீண்டும் கால அவகாசம்; கொழும்பின் இராஜதந்திர வெற்றி?”