வெகுமதி சிறந்ததா தண்டனை சிறந்ததா ?
மனோதிடமும் தன்னம்பிக்கையும் உள்ள பிள்ளைகளை வளர்த்தெடுக்க…
துறைசார் நிபுணர்கள் வழிகாட்டல் படி, பெற்றோரியம் சார்ந்து சில கருத்துக்களை New York times பிரசுரித்திருக்கிறது. இந்த வழிகள், மனோதிடமும், வாழ்க்கையில் வரும் சவால்களுக்கு ஈடு கொடுக்க கூடிய திறமையும் கொண்ட பிள்ளைகளை உருவாக்கும் என்பது இவர்கள் கணிப்பு.
வெகுமதி சிறந்ததா தண்டனை சிறந்ததா?
நம்மில் பலரும் எம் பெற்றோரிடம் தண்டனைகள் பெற்றே வளர்ந்திருப்போம். அதனால், நாமும் அதே வழியை பின்பற்ற முயலுவதில் ஆச்சரியமில்லை. ஆனால், தண்டனை பிரச்சனையை மேலும் சிக்கலாக்குவதோடு, அனுபவத்தால் வரக்கூடிய கற்றலையும் தடுத்து நிறுத்திவிடுகிறது. தண்டனை, பிள்ளைகளில் எதிர்ப்பை வளர்க்கக்கூடும், வெட்கத்தையோ கோபத்தையோ வரவழைக்கலாம், உணர்வுகளை உள்ளடக்கி வைக்க உந்தலாம், அல்லது எப்படி பிடிபடாமல் மறுபடியும் தப்பை செய்யலாம் என ஆராய வைக்கலாம். Fight/Flight Response என்பார்கள். அதாவது, தண்டனை, பிள்ளைகளை சண்டையிடுவதா (Fight) தப்பியோடுவதா (Flight) என்ற ஒரு அடிப்படை எதிர்செயலை நோக்கி தூண்டுவதால், மூளையின் மதிநுட்ப சிந்தனைக்குரிய Frontal Cortex தன் வேலையை செய்யாது விட்டுவிடுகிறது. கற்றலுக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுகிறது.
அப்படியானால், வெகுமதிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தண்டனையின் இரட்டை சகோதரர் தான் வெகுமதி என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள். ஒரு வெகுமதி பிள்ளையை உடனே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். ஆனால், படிப்படியாக வெகுமதியின் பயன்பாடு குறைந்துவிடும். பிள்ளைகள் மேலும் மேலும் வெகுமதியை எதிர்பார்க்கும் வகையில் அவர்களை மாற்றியும் விடும். உளநல நிபுணர்கள் பல ஆண்டுகாலமாக அறிவுறுத்துவது என்னவென்றால் எப்படி வெகுமதிகள் எங்கள் இயல்பான உந்துதல் மற்றும் மகிழ்வை குறைத்துவிடுகிறது என்பதை தான். உதாரணமாக, பணம் கொடுத்து படம் வரைய சொன்னபோது, பணம் வழங்கப்படாத பிள்ளைகளை விடவும் பணம் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் குறைவாகவே வரைந்தார்கள். வெகுமதி எம்முள் இருக்கும் ஆக்கத்திறனை (Creativity) குறைக்கும் என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. வெகுமதிகள் எங்கள் மூளை சுயாதீனமாக, பரந்து, ஆழமாக சிந்திக்க விடாமல் தடுத்து விடுகிறது.
தண்டிப்பதா, வெகுமதி அளிப்பதா என்ற சிந்தனையே, நம் பிள்ளைகள் அடிப்படையில் நல்ல மனப்பாங்கு இல்லாதவர்கள் என்ற அனுமானத்தை வைத்து வருகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அந்த சிந்தனை போக்கை மாற்றினால், அதாவது நம் பிள்ளைகள் நல்ல மனம் கொண்டவர்கள், அன்பானவர்கள் என்று நாம் சிந்திக்க ஆரம்பித்தால், பிள்ளைகளோடான நம் கலந்துரையாடலில் பெரும் மாற்றம் ஏற்படும். தண்டனைகளும் வெகுமதிகளும் நிபந்தனைகள் சார்ந்தவை. பிள்ளைகள் மேல் இருக்கும் எம் அன்பும் நம்பிக்கையும் நிபந்தனைக்கு அப்பாற்பட்டவை. அன்புடன் பிள்ளைகளை முழுமையாக செவிமடுத்தால், நாம் சொல்வதை கேட்கும் சந்தர்ப்பத்தை நாம் அதிகரிக்க செய்கிறோம்.
பிள்ளைகளை அடிப்பது என்பது காலப்போக்கில் குறைத்துக்கொண்டு வருகிறது. ஆனால் கூச்சலிடுவது என்பது பெற்றோராக நாம் எல்லோருமே செய்வது தான். பயனில்லை என்று தெரிந்தும் இதை செய்கிறோம். பெற்றோர் செய்யும் மிகப்பெரும் முட்டாள்தனம் இதுதான் என்கின்றனர் நிபுணர்கள். எந்த நேரமும் பெற்றோரின் கத்தல் கேட்கும் வீடுகளில் வளரும் பிள்ளைகளில் அதிக உளசோர்வு (Depression), மற்றும் தன்னம்பிக்கை குறைவு காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடித்தலுக்கு ஈடாக, பிள்ளைகளில் பதட்டம், உளசோர்வு, மனஅழுத்தம் மற்றும் நடத்தை குழப்பங்கள் ஏற்படுகின்றன.
பிள்ளைகளிடம் நீங்கள் சத்தமிடும்போது, அவர்கள் உங்களை அதிகாரம் உள்ளவர்களாக பார்ப்பதில்லை. மாறாக, நீங்கள் வலிமை குறைந்தவராக, கட்டுப்பாட்டை இழந்தவராக தான் அவர்கள் கண்ணில் தெரிவீர்கள். பெற்றாராக உங்கள் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு கத்துவது உதவலாம். ஆனால் பிள்ளைகளின் பழக்கத்தை மாற்றுவதற்கு அது உதவப்போவதில்லை. நீங்களே உங்களை கேட்டு பார்க்கலாம், எப்போதாவது பிள்ளைகளோடு கத்துவது அவர்கள் பழக்கத்தில் மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறதா? உங்கள் கத்தலை நிறுத்த என்ன வழி? முன்கூட்டியே விடயங்களை திட்டமிடுவது தான்.
வீதியில் வாகனம் வரும்போது குறுக்கே ஓடவேண்டாம் என்று பிள்ளைகளை பார்த்து கூச்சலிடுவோம். இது அந்த கூச்சலிடுதல் பற்றியது அல்ல. பிள்ளைகளை நாம் திருத்தவேண்டும் என்ற நோக்கில் போடும் கூச்சலைப்பற்றி தான் கருத்தில் கொள்கிறோம். அநேகமாக தினமும் ஒரே விடயங்களுக்காக கத்துவோம். முதல் கத்தல் வேலை செய்யாவிட்டால், இன்னும் பலமாக கத்துவோம். கத்துவது பலனளிக்காது என தெரிந்தால், எப்படி இதனை மாற்றுவது? இதற்கு, பெற்றோராக நாம் ஒழுங்குமுறையோடு திட்டமிடுவது அவசியம். எந்த நேரமும் பிழைகளை தேடுவதை எங்கள் பழக்கமாக்கி கொள்ள கூடாது. பிள்ளைகளிடம் எது நமக்கு வேண்டாம் என்பதை விட, எந்த பழக்க வழக்கம் வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, உங்கள் பிள்ளை வீட்டினுள் வரும்போது பாதணிகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கழற்றி வைக்கவேண்டும் என நீங்கள் விரும்பினால், முன்கூட்டியே, அதாவது காலையிலேயே பிள்ளைக்கு நீங்கள் அதை அமைதியாக சொல்லலாம். இது முதல் படி – அதாவது நடந்தபின் ஏசாமல், முன்கூட்டியே அமைதியாக சொல்கிறீர்கள். இரண்டாவது, நீங்கள் முன்மாதிரியாக நடப்பது. அதாவது, நீங்களும் உங்கள் பாதணிகளை அதே இடத்தில் கழற்றிவைப்பது. மூன்றாவது உங்கள் பிள்ளையின் நடத்தை. உங்கள் பிள்ளை பாதணிகளை நீங்கள் சொன்ன இடத்தில் அல்லது சொன்ன இடத்திற்கு அருகாமையில் வைத்தால் கூட, அதை செய்ததற்காக வெளிப்படையாக பாராட்டுவதும், தட்டிக்கொடுப்பதும் முக்கியம். அதாவது, உங்கள் முகபாவனையாலும், சொல்லாலும், செயலாலும் பிள்ளைக்கு உங்கள் பாராட்டை வெளிப்படுத்துவது, அதை ஒரு நாளாந்த பழக்கமாக உங்கள் பிள்ளை ஆக்கிக்கொள்வதற்கு உதவும். இது ஒரு எளிமையான உதாரணம், ஆனால் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவருவதற்கு அடிப்படையானது. வீட்டில் இப்படியான ஒரு நடைமுறையை ஏற்படுத்தும் போது, பிள்ளைகள் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்வார்கள். பெற்றோராக, நாம் கத்துவதற்கான தேவை ஏற்படாது. நமக்கு அழுத்தம் குறையும். பிள்ளைகளும் மகிழ்வாக இருப்பார்கள்.
பதின்ம வயதினரின் பாடசாலை சார்ந்த அழுத்தம்
பாடசாலை மீண்டும் ஆரம்பித்ததோடு, வேலைப்பளுவும் அதிகரிக்கிறது. பாடசாலை மற்றும் படிப்பு சார்ந்த அழுத்தம் (Stress) நாம் நினைப்பது போல் கெடுதலான விடயம் அல்ல. நம் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு முக்கியமானது. ஆனால் பல சமயங்களில் நாமோ நம் பிள்ளைகளோ படிப்பின் பளுவை, அது தரும் அழுத்தத்தை, ஒரு ஆபத்தான விடயமாக பார்க்கிறோம். பளு தூக்கும் உடற்பயிற்சி செய்பவரோடு இதை ஒப்பிட்டு பார்க்கலாம். அசௌகரியமாக உணரும் பொழுதிலும், பாரமான பளுவை தூக்குவது தசை கட்டமைப்புக்கு முக்கியம் என உடற்பயிற்சி செய்பவருக்கு தெரியும். அதேபோல் தான் கல்வியும். பாடசாலைகள் எம் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, நம் பிள்ளைகள் பாடசாலையில் அழுத்தத்தை உணர்கிறார்கள், ஆனால் ஒவ்வொரு சவாலையும் கடந்து, பின் அடுத்த ஒரு சவாலுக்கு இட்டு செல்லப்படுகிறார்கள் என்றால், எல்லாமே சரியாக போகிறது என்று தான் பொருள்.
பெற்றோராக நாம் எத்தனை அழுத்தங்களை வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறோம் என எண்ணி பார்த்தால், அழுத்தம் ஆபத்தான விடயம் அல்ல, வளர்ச்சிக்கு முக்கியம், என்பதை நம் பிள்ளைகளுக்கும் உணரவைக்க முடியும். எங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமான அழுத்தத்துக்கு ஈடு கொடுக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. இதை உணரும் பிள்ளைகள், உதாரணமாக, ஒரு பரீட்சைக்கு முன் மனம் சற்றே பதட்டப்படுகிறது என்றால், தம் உடலும் மனமும் பரீட்சையின் சவாலை ஏற்றுக்கொள்ள தம்மை தயார்படுத்துகிறது என உணர்வார்கள். பரீட்சையை நன்கே எழுதுவதற்கு இந்த மனப்பாங்கு உதவுகிறது. பாடசாலையும், கல்வியும் பிள்ளைகளுக்கு சவாலாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் வளர்ச்சி ஏற்படும். அதே வேளை, எப்படி கடின உடற்பயிற்சிகளுக்கு இடையில் ஒய்வு எவ்வளவு முக்கியமோ, அதே போல், நம் பிள்ளைகளுக்கும் ஒய்வு தேவை. மொத்தத்தில், அழுத்தத்தை ஆரோக்கியமான, அதேவேளை வளர்ச்சிக்கு தேவையான ஒரு அசௌகரியமான விடயம் என எம் பிள்ளைகளும் நாமும் புரிந்து கொள்ளல் முக்கியமானது.
Dr. Pushpa (Clinical psychologist)
1,142 total views, 1 views today
2 thoughts on “வெகுமதி சிறந்ததா தண்டனை சிறந்ததா ?”